'உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்...' - ஊழியர்களுக்கு பைஜுஸ் நிறுவனர் கடிதம்!
கல்வி நுட்ப நிறுவனம் பைஜூஸ் மற்றும் அதன் ஊழியர்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள் மற்றும் நெருக்கடிக்கு மிகுந்த வருத்தம் கொள்வதாக அதன் நிறுவனர் பைஜு ரவீந்திரன் கூறியுள்ளார்.
கல்வி நுட்ப நிறுவனம் பைஜூஸ் மற்றும் அதன் ஊழியர்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள் மற்றும் நெருக்கடிக்கு மிகுந்த வருத்தம் கொள்வதாக அதன் நிறுவனர் பைஜு ரவீந்திரன் கூறியுள்ளார்.
முன்னணி கல்வி நுட்ப நிறுவனமாக விளங்கிய பைஜூஸ் தற்போது நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நிறுவனம் ஆட்குறைப்பிலும் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன், நிறுவன ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நிறுவனம் கடினமான சூழலை எதிர்கொண்டிருப்பதாகவும், அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
”அதிகம் இல்லை என்றாலும், ஒவ்வொருவருக்கும் வார இறுதியில் சிறு தொகை வழங்கப்படும். இது உங்கள் தகுதிக்கு ஏற்றது இல்லை என்றாலும் இப்போதைக்கு என்னால் முடிந்தது இது தான். ஆனால், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை நாம் மீட்கும் போது உங்களுக்கு உரியது கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சிறந்த முறையில் பணியாற்றினாலும் அதற்கேற்ற பலனை அளிக்க முடியவில்லை. இது சரியல்ல, இதற்காக உண்மையாக வருந்துகிறேன். கடந்த மூன்று மாதங்கள் நாம் யாரும் எதிர்பாராத வகையில் சட்ட சவால்கள், நிதி நெருக்கடி, சவால்கள் நிறைந்ததாக உள்ளது. ஆனால், இவற்றுக்கு மத்தியில் நீங்கள் உறுதியாக நிற்கிறீர்கள். ஒரு ஆசிரியரின் கடமையை நிறைவேற்றியுள்ளீர்கள்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சவால்களை எதிர்கொள்வதற்கான நிறுவன திட்டங்களையும் அவர் விவரித்துள்ளார். மாணவர்களுக்கு கல்வி வழங்கும் தனது நோக்கத்தில் நிறுவனம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதால் அதன் நோக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். முக்கியமாக உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், என கூறியுள்ளவர், பைஜூஸ் வர்த்தக மாதிரி மட்டும் அல்ல, நாடு முழுமவதும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சேவை அளிக்கிறோம், என்று கூறியுள்ளார்.
அமெரிக்க கடன் நிறுவங்கள் இந்திய நிறுவன சொத்துக்களை கைப்பற்ற பலவீனமான வழக்கு தொடர்ந்துள்ளன என்றும் கூறியுள்ளார். நிறுவன வங்கி கணக்கு தற்போது தன்வசம் இல்லை என்று கூறியுள்ளவர், வழக்கில் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையாக இருந்து இந்த சவாலில் இருந்து வலுவாக வெளியே வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Edited by Induja Raghunathan