Stock News: பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு மீளும் பங்குச் சந்தை - ஏற்றம் தொடருமா?
சர்வதேச சந்தைகளின் கலவையான போக்குகள், கைகொடுக்கும் வங்கி நிறுவனப் பங்குகள் முதலான காரணங்களால் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
ட்ரம்ப் அதிரடிகளின் எதிரொலியால் கடுமையாக வீழ்ச்சி கண்ட இந்தியப் பங்குச் சந்தை இப்போது மீளத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளின் கலவையான போக்குகள், கைகொடுக்கும் வங்கி நிறுவனப் பங்குகள் முதலான காரணங்களால் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.22) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 366.49 புள்ளிகள் உயர்ந்து 76,204.85 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 80.60 புள்ளிகள் உயர்ந்து 23,105.25 ஆக இருந்தது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்புகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வீழ்ச்சியால் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்த முதலீட்டாளர்களுக்கு இப்போதைய வர்த்தக நிலவரம் சற்று ஆறுதலாக உள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 304.98 புள்ளிகள் (0.40%) உயர்ந்து 76,143.34 ஆகவும், நிஃப்டி 63.70 புள்ளிகள் (0.28%) உயர்ந்து 23,088.35 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் ஏற்றமும், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் இறக்கமும் நிலவி வருகிறது.
சர்வதேச பங்குச் சந்தைகளின் கலவையான போக்குடன், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தை மீளத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்தடுத்த நகர்வுகள் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் தாக்கம் தரலாம் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
விப்ரோ
டிசிஎஸ்
இன்ஃபோசிஸ்
டெக் மஹிந்திரா
சன் பார்மா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
மாருதி சுசுகி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
எல் அண்ட் டி
டாடா ஸ்டீல்
எஸ்பிஐ
டாடா மோட்டார்ஸ்
என்டிபிசி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 13 பைசா குறைந்து ரூ.86.58 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan