கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் பெசோஸ் தொடர்ந்து முதலிடம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு, விவாகரத்து ஆகியவற்றை மீறி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உலகின் முன்னணி கோடீஸ்வரராக தொடர்கிறார்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக தொடர்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கோடீஸ்வரர்கள் 2020 பட்டியலில் பெசோஸ், 113 பில்லியன் டாலரோடு முதல் இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் பெசோஸ் மட்டும் தான் 12 இலக்க சொத்து மதிப்பைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் 98 பில்லியன் டாலர் மதிப்பு பெற்றுள்ளார்.
"ஜெப் பெசோஸ், கடந்த ஆண்டு உண்டான விவகாரத்து ஒப்பதம் படி, முன்னாள் மனைவி மெக்கின்சிக்கு 36 பில்லியன் கொடுத்த பிறகும் கூட மூன்றாவது ஆண்டாக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு, 15% உயர்ந்து 113 பில்லியன் டாலராக உள்ளது,” என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
பெசோசிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற அவரது மனைவி இந்த பட்டியலில் 22வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசானில் இவர் 25 சதவீதம் பங்குகள் உடையவர், 35.6 பில்லியன் டாலர் மதிப்புடன், நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரகளில் ஒருவராகவும், உலகின் மூன்றாவது செல்வப் பெண்மணியாகவும் திகழ்கிறார்.
கோடீஸ்வரர்கள்
பில் கேட்ஸ் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். சொகுசு வாட்ச் தயாரிப்பு நிறுவனமான LVMH தலைவர் பெர்னால்டு அர்னால்டு (76 பில்லியன் டாலர்) மூன்றாவது இடத்தில் உள்ளார். முதலீட்டு மகாராஜா வாரென் பப்பேட் (67.5 பில்லியன்) 4வது இடத்திலும், ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன்(59 பில்லியன்) 5வது இடத்திலும் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு பங்குச்சந்தையை பதம் பார்த்ததை அடுத்து, 1,062 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது. கோடீஸ்வரர்களின் மொத்த மதிப்பு கடந்த அண்டு 8.7 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில் இந்த ஆண்டு 8 டிரில்லியன் டாலராக சரிந்துள்ளது.
"உலகின் கோடீஸ்வரர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பங்குச்சந்தைகள் சரிந்து இவர்கள் சொத்து மதிப்பைக் குறைத்துள்ளது,” என ஃபோர்ப்ஸ் பத்திரிகை எழுதியுள்ளது.
இந்த பட்டியலை இறுதி செய்யத்துவங்கிய போது, கடந்த ஆண்டை விட கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 58 குறைந்ததாகவும், 12 நாட்களுக்கு முன் இருந்ததைவிட 226 குறைவாக இருந்ததாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்