2022 நிதி நிலை அறிக்கையை செப்டம்பரில் தாக்கல் செய்ய Byju's திட்டம் என தகவல்!
தொடர் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் பைஜூஸ் நிறுவனம், புதிய தணிக்கையாளர் நிறுவனத்தை நியமித்திருப்பதோடு, 2022 நிதி நிலை முடிவுகளை செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
கல்வி நுட்ப நிறுவனமான பைஜூஸ் தணிக்கையாளர் பொறுப்பில் இருந்து Delloite நிறுவனம் வெளியேறிய நிலையில், 2022 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை செப்டம்பர் மாதத்திற்குள் தாக்கல் செய்ய இருப்பதாக பங்குதாரர்களிடம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வேலை இழப்பு தொடர்பான அச்சம் மற்றும், அவநம்பிக்கைக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பைஜூஸ் நிறுவனத்தின் நிதி நிலை தொடர்பான கவலைகளை கருத்தில் கொண்டு, நிறுவனர் பைஜூ ரவீந்திரன் மற்றும் முதன்மை நிதி அதிகாரி அஜய் கோயல் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் 75 பங்குதாரர்களோடு சனிக்கிழமை ஆலோசனை நடத்தியதாக ராய்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இந்த கூட்டத்தின் போது, நிதி நிலை முடிவுகள் தொடர்பாக கோயல் உறுதி அளித்ததாகவும், 2022 நிதி நிலை அறிக்கையை செப்டம்பர் மாதம் தாக்கல் செய்ய இருப்பதாகவும், 2023 நிதி நிலை அறிக்கை டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலை நேரடியாக உறுதிப்படுத்த முடியாத நிலையில் யுவர்ஸ்டோர் இது குறித்து பைஜூஸ் கருத்தை கோரியுள்ளது.
பைஜூஸ் மற்றும் அதன் அங்கமான ஆகாஷ் ஆகியவற்றின் தணிக்கையாளர் பொறுப்பில் இருந்து டெலாய்ட் விலகிக் கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தணிக்கை நிறுவனமாக BDO (MSKA & Associates) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2022 நிதியாண்டு நிதி நிலை முடிவுகளை தாக்கல் செய்வதில் தாமதம் உண்டான நிலையில் ஏப்ரல் மாதம் கோயல் முதன்மை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
2021 நிதியாண்டில் நிறுவனம் ரூ.4,564.38 கோடி நஷ்டத்தை எதிர்கொண்டது. முந்தைய ஆண்டு இது ரூ.305.5 கோடியாக இருந்தது. கடந்த வாரம், பீக் XV பாட்னர்ஸ்' ஜிவி.ரவிஷங்கர், புரோசஸ் ரஸல் டிரெய்செப்ன்ஸ்டாக், சான் ஜக்கர்பர்க் இனிஷியேட்டிவ் விவியான் வூ ஆகியோர் இயக்குனர் குழுவில் இருந்து விலகினர்.
ஊழியர்கள் அச்சம்
நிறுவன பிரச்சனைகள் மற்றும் நஷ்டம் அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்கள் மத்தியில் அச்சமும், அவநம்பிக்கையும் நிலவுவதாக மற்றொரு ராய்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
தணிக்கையாளர் நிறுவன விலகல் தவிர, 1.2 பில்லியன் டாலர் கடன் தொடர்பான பிரச்சனைகளையும் நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஊழியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்திடம் இருந்து தெளிவான தகவல் தொடர்பு இல்லாததும் ஊழியர்கள் கவலையை அதிகமாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
அண்மையில் பைஜூஸ் மற்றொரு சுற்று வேலை நீக்கங்களை அறிவித்தது. ஆயிரம் ஊழியர்களுக்கு மேல் பணி நிக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் நிறுவன மனிதவளத் துறை ஊழியர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகள் நடத்தி, நிறுவன இணையதளம் மூலமாக தானாக பணி விலகல் கடிதம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு முதல் நிறுவனம் ஆட் குறைப்பு செய்து வருகிறது. கடந்த ஆண்டு 3 ஆயிரம் பேருக்கு மேல் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Byju's சர்ச்சை | ஆடிட்டர் விலகல்; வெளியேறிய 3வது போர்ட் உறுப்பினர் - பைஜுஸ் நிறுவனத்தில் நடப்பது என்ன?
Edited by Induja Raghunathan