திங்கள் டு வெள்ளி பெங்களூரில் ஐடி வேலை; வாரஇறுதியில் கரூர் கிராமத்தில் விவசாயம்- அசத்தும் இளைஞர்!
"வாழ்க்கை என்பது ஒரு அழகிய அனுபவம். நாம் அதிக செல்வத்தை ஈன்று பணக்காரன் ஆகும் அதே வேளையில் தினம் தினம் நச்சுத்தனமை உடைய உணவுவகைகளை உட்கொண்டு ஏழையாகி வருகிறோம். பணம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியமில்லை...”
இந்த அரிய உண்மையை உணர்ந்த 14 ஆண்டுகளாக ஐடி ஊழியராக பணிபுரியும் பிரதீப் குமார், தானே தன் குடும்பத்துக்குத் தேவையான உணவுகளை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார். தென்காசியில் பிறந்து வளர்ந்த பிரதீப், சென்னையில் பொறியியல் பட்டத்தை முடித்துவிட்டு பெங்களுருவில் பிரபல ஐடி நிறுவனமான எச்.பி-ல் 14 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். ஒரு லட்சத்துக்கும் மேல் மாதச் சம்பளம் ஈட்டினாலும் நிம்மதியான வாழ்க்கையை தேடி வார இறுதி நாட்களில் விவசாயம் செய்ய சொந்த ஊருக்கு செல்கின்றனர் பிரதீப்பும் அவரது மனைவியும்.
பிரதீப் குமார் பின்னணியும் மன மாற்றத்திற்கான விதையும்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிரதீப் குமாரின் தாயார் மற்றும் தந்தை இருவருமே அரசு சார்ந்த கல்லூரி பேராசிரியர்களாக ஓய்வு பெற்றவர்கள். அவரின் ஒரே சகோதரியும் டாக்டராக உள்ளார். எல்லாரைப் போலவே ஐடி துறையில் நல்ல எதிர்காலம் என எண்ணிய அவரது பெற்றோர் பிரதீப்பை பி.ஈ. படிக்க வைத்தனர். பின்னர் 2003-ல் கைநிறைய சம்பளத்துடன் பெங்களுருவில் அவருக்கு வேலை கிடைத்தது.
திருமணமாகிய பிரதீப் சொகுசான வாழ்க்கையை கொண்டிருந்தாலும், அவரின் அடி மனதில் தான் விரும்பியவற்றை செய்யமுடியவில்லை என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது.
“என் தாத்தா விவசாயம் செய்தவர், ஆனால் என் அப்பா பேராசிரியாரானார். என்னையும் படிப்பில் கவனம் செலுத்தவே அறிவுறித்தனர். கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம் முதலே விவசாயம் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை என் பெற்றோரிடம் சொல்லியுள்ளேன். இருந்தாலும் ஐடி துறையில் நல்ல வேலை, சம்பளம் என்று வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தேன்,” என்கிறார்.
2008-ல் பிரதீப் குமாருக்கு நல்ல சம்பளத்துடன் பதவி உயர்வு கிடைத்த சமயத்தில், நீண்ட நாட்களாக மனதில் இருந்த தன் ஆசையை நிறைவேற்ற வழி தேடலானார். பெற்றோரிடம் தங்களின் பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்ய விரும்புவதாக தெரிவித்தபோது அதிர்ச்சியான அவர்கள் அந்த கோரிக்கையை மறுத்துள்ளனர்.
“அவர்கள் என் பேச்சை கேட்பதாகவே இல்லை. நம் கனவு மற்றும் ஆசையை அன்பாக நேசிப்பவர்கள் மறுத்தால் ஏற்படும் மன வலியை வெளிப்படுத்தவே முடியாது. எல்லாரையும் போல் ஐடி துறையில் தொடர்ந்து வளர்ச்சி அடையவே அவர்கள் என்னை வலியுறுத்தினார்கள்.”
பெற்றோர்கள் மறுத்தாலும் உள்ளுக்குள் நீண்டகாலமாக பூட்டிப்போட்ட கனவை அடக்கமுடியாமல் தவித்த பிரதீப்புக்கு துணையாய் நின்றவர் அவரது மனைவி மங்கை. இருவரும் சேர்ந்து ஹோசூர் அருகே சிறிய நிலம் ஒன்றை வாங்கி விவசாயம் செய்ய முடிவெடுத்து பின் அதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இறுதியாக கரூரில் உள்ள வெள்ளையம்பட்டியில் பூர்வீக நிலத்தையே விவசாயத்துக்கு பயன்படுத்த பிரதீபின் பெற்றோர் சம்மதித்தனர்.
“சுட்டெரிக்கும் வெயிலில் பொட்டை வெளியில் விவசாயம் செய்ய முடியாமல் நான் ஓடிவிடுவேன் என்றே அவர்கள் நினைத்தனர். ஆனால் வார இறுதி நாட்களில் தவறாமல் பெங்களூரில் இருந்து கரூர் சென்று தீவிரமாக உழைத்ததை கண்டு என் ஆர்வத்தின் உண்மையை புரிந்து கொண்டனர்.”
அப்போதில் இருந்து பிரதீப் குமாரின் குடும்பமே அவருக்கு ஆதரவாக இருந்து ஊக்கமளிக்க தொடங்கினார்கள். ’ரங்கமலை ஆர்கானிக் ஃபார்ம்ஸ்’ என்ற பெயரில் விவசாயத்தை முன்னெடுத்து சென்றார்.
இயற்கை விவசாயமும் ஆரோக்கியமான வாழ்வும்
நம் தலைமுறை தினசரி உண்ணும் உணவுகளில் பெரும்பாலானவையில் நச்சுப்பொருட்களும், கலப்படமும் உள்ளது என்று கவலை அடைந்த பிரதீப், விவசாயம் செய்தாலும் அது இயற்கை வழியிலே இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்.
“இயற்கை விவசாயம் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அதை நிலையாக செய்து அதை நீண்டகால திட்டமாக கொண்டு செல்ல விரும்புகிறேன்.”
கரூரில் உள்ள அவர்களது பூர்வீக நிலம், விவசாயம் செய்யப்படாமல் காய்ந்திருந்தது. அதை எடுத்து சரிசெய்து, நீர்பாசன வழியமைத்து, விவசாயத்துக்கு தேவையான மோட்டார் மற்றும் கட்டமைப்புகளை செய்தார். அங்கு சுற்றியிருந்த பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரம் போட்டும், கலப்புவகை விதைகள் கொண்டும் விவசாயம் செய்வதை கண்டு மனம் வேதனை அடைந்துள்ளார். பலரும் அதில் நஷ்டத்தால் கடனாளியாக இருந்தனர்.
“இயற்கை உரம் போட்டு நம் மண்ணுக்கு உகந்தவற்றை விவசாயத்துக்கு பயன்படுத்தினால் நல்ல விளைச்சலும், ஆரோக்கியமான பொருட்களையும் உற்பத்தி செய்யமுடியும். கடும் வறட்சியில் கூட பாதிப்பில்லாமல் விளைச்சல் தரும் பயிர்கள் இவை. தற்போது பல விவசாயிகள் இதை உணர்ந்து இயற்கை வழிக்கு மாறிவருவது மகிழ்ச்சியை தருகிறது,” என்கிறார்.
பிரதீப்பின் விடாமுயற்சி, விவசாயம் மீதான காதலை கண்டு வியந்த அவரது நண்பர்கள் சிலர் அவருடன் கைக்கோர்க்க 10 ஏக்கர் நிலத்தை லீசுக்கு வாங்கி தங்கள் விவசாய வேலைகளை விரிவுப்படுத்தியுள்ளனர். இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருந்த மாமா கருணாகரன் ஆலோசனைபடி வழிமுறைகளை பின்பற்றினார் பிரதீப்.
கம்பு, எண்ணெய் பயிர்கள், பறுப்பு வகைகள், காய்கறிகள் என்று பயிரிட்டு, அதற்கு இயற்கை உரமாக மாட்டுச்சாணம், மற்றும் அதன் சிறுநீர் சேர்த்து முறையானபடி விவசாயம் செய்வதால், கடந்த 2 ஆண்டுகளில் நல்ல விளைச்சல் பெறுவதாக பகிர்ந்துகொண்டார்.
“இயற்கை விவசாயம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மட்டுமின்றி அது ஒரு லாபகரமான தொழில் என்பதையும் புரிந்து கொண்டோம்.”
இயற்கை உரத்திற்காகவும், சுத்தமான பால் பெறவும் காங்கேயம் காளை மாடு மற்றும் பசு ஒன்றையும் வாங்கியுள்ளார் பிரதீப். காளையை வாங்கியபோது பலரும் எங்களால் அதை சமாளிக்கமுடியாது என்றும் செலவு அதிகம் என்று கேலி செய்தனர். ஆனால் நிஜத்தில் சீமை மாடுகளைவிட இவை சிறந்தது. மேலும் பல மாடுகளை வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.
“சுற்றுச்சூழல் சமநிலையை மீண்டும் பெற தன்னிறைவான, சுய நிலையான விவசாயம் மற்றும் வாழ்வியல் முறையை பின்பற்றவேண்டும்,”
என்ற நாம்மாள்வார் வழிபடி இயற்கை விவசாயம் செய்து இயற்கை வளங்களை காப்பாற்றுவதே நம் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்ற குறிக்கோளை அடைய சமூகத்துக்கு தனது பங்கை ஆற்றி பயணிக்கும் பிரதீப் குமார் போன்று மேலும் பல இளைஞர்கள் விவசாயக் களத்தில் இறங்கவேண்டும்.