ஒரே ஆண்டில் மூன்று முறை லாபம் கொடுக்கும் பேபிகார்ன் விவசாயம்!
இந்தியாவில் அரிசி, கோதுமை ஆகிய பயிர்களுக்கு அடுத்தபடியாக சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது.
மற்ற பயிர்களைக் காட்டிலும் பேபி கார்ன் விவசாயத்தில் ஓர் ஆண்டிற்கு மூன்று முறை லாபம் பார்க்கமுடியும் தெரியுமா?
பேபி கார்ன் அதிக சத்துக்கள் நிறைந்தது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், பீட்சா ஷாப், பாஸ்தா ஷாப், ரெஸ்டாரண்ட் என அனைத்து இடங்களிலும் பேபி கார்ன் தேவை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற இடங்களில் பேபி கார்ன் பயன்பாடு அதிகமிருப்பதால் சந்தை தேவையும் அதிகமுள்ளது. இதனால் பேபி கார்ன் விவசாயம் நல்ல லாபம் கொடுக்கிறது.
இந்தியாவில் அரிசி, கோதுமை ஆகிய பயிர்களுக்கு அடுத்தபடியாக சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது.
பேபி கார்ன் நன்மைகள்
சாலட், புலாவ், சாண்ட்விச், சூப் என பல்வேறு டிஷ்களில் பேபி கார்ன் பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம். பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. கலோரி குறைவு. கொழுப்பு சத்து இல்லை. எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. பேபி கார்ன் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பேபி கார்ன் சாகுபடி
பேபி கார்ன் விவசாயத்தைப் பொறுத்தவரை முதலில் தரமான விதைகளைத் தேர்வு செய்வது முக்கியம். அப்போதுதான் விளைச்சலும் லாபமும் அதிகமாகும்.
முதலில் இரண்டு, மூன்று முறை நிலத்தை நன்றாக உழவேண்டும். நிலத்தில் ஓரளவிற்கு ஈரப்பதம் இருக்கவேண்டியது அவசியம். உலர்ந்த நிலமாக இருந்தால் நன்றாக நீர் பாய்ச்சிவிட்டு அதன் பிறகு நிலத்தை உழவேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு சுமார் 25 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதைத்த 60-80 நாட்களில் பேபி கார்ன் வளர்ந்துவிடும். மிகவும் கவனமாக அறுவடை செய்யவேண்டும். சோளமாக அதிகம் முற்றிவிடாமல் சரியான நேரத்தில் அறுவடை செய்யவேண்டியது முக்கியம்.
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பேபி கார்ன் விவசாயம் செய்வதன் மூலம் கூடுதலாக பலனடையலாம். அறுவடை முடிந்த பிறகு பேபி கார்ன் விவசாயத்தில் எஞ்சிய பொருட்களை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்.
செலவு மற்றும் வருவாய்
சோள சாகுபடிக்கான செலவு குறைவு. ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு சுமார் 50-60 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். விதை விதைத்தல், நீர்பாசனம், பூச்சிக்கொல்லிகள், உரம், அறுவடை, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் இதில் அடங்கும்.
ஒரு ஹெக்டேருக்கு 2-2.2 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அப்படியானால் செலவுகள் போக 1.5-1.7 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். ஓர் ஆண்டிற்கு மூன்று முறை பேபி கார்ன் விவசாயம் செய்யப்படுவதால் ஓர் ஆண்டிற்கு ஒரு ஹெக்டேர் நிலத்தின் மூலம் 4.5-5 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்.
அரசாங்க உதவி
பேபி கார்ன் விவசாயம் செய்ய விரும்புவோர் முதலீடு செய்ய உதவும் வகையில் அரசாங்கம் நிதியுதவி செய்கிறது. அரசாங்கத்திடமிருந்து விவசாயிகள் விவசாயக் கடன் பெற்றுக் கொள்ளலாம். பேபி கார்ன் விவசாயம் குறித்து அதிகம் பரிச்சயமில்லாதவர்கள் பலனடையும் வகையில் அரசாங்கம் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஏற்பாடு செய்வது குறிப்பிடத்தக்கது.