சென்னை வெள்ளம் - நிவாரண நிதி திரட்ட உதவும் கெட்டோ!
சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர்க்கு பண ரீதியாக உதவ வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் யாரிடம் பணம் செலுத்துவது, அந்த பணம் சரியான வழியில் செல்லுமா என்றெல்லாம் சந்தேகம் இருக்கும். அதேப் போல சென்னை வெள்ள நிவாரணக் களத்தில் பணியாற்றி கொண்டிருப்பவர்களுக்கும் பணத்தேவை இருக்கும். ஆனால் யாரிடம் இருந்து பணம் பெறுவது? எப்படி பெறுவது என்றெல்லாம் சில சவால்கள் இருக்கும்.
இது போன்ற சமயங்களில் உதவ நினைப்பவர், உதவுபவர் என இரண்டு பேரையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது கெட்டோ நிறுவனம் (ketto.org).
கெட்டோ தளம் பணம் திரட்ட உதவும் ஒரு வகையான இணயதளம் ஆகும். இந்த தளம் சமூக பிரச்சினைகளான குழந்தைகள் முன்னேற்றம், கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் போன்றவற்றுக்கு வெளிநபரிடமிருந்து பணம் திரட்ட உதவுகிறது. அது மட்டுமல்லாமல் தனிநபர்கள் தங்கள் தொழில்வளர்ச்சிக்காகவும், ஏன் திரைப்படம் எடுக்கவோ, இசை ஆல்பம் தயாரிக்கவோ கூட இந்த தளத்தின் மூலம் பணம் திரட்ட முடியும். பணம் செலுத்துபவர்கள் மாஸ்டர்கார்ட், காசோலை, விசா கார்டு, டைனர்ஸ் என பல்வேறு வழிகளின் மூலம் பணம் செலுத்த முடியும்.
பணம் திரட்டுபவர்களிடமிருந்து ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் பத்து சதவீத கட்டணத்தை பணமாக வசூலிக்கிறார்கள். ஆனால் இந்த சென்னை வெள்ளத்திற்காக பணம் திரட்டுபவர்களிடமிருந்து அது போல எந்த கட்டணமும் பெறவில்லை என தெரிவிக்கிறார் கெட்டோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான வருண் ஷேத்.
பணம் திரட்டுபவர்கள் தங்களுக்கென ஒரு தலைப்பில் ஒரு கணக்கை துவங்கி, எவ்வளவு பணம் தேவை எனவும் அதை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என விளக்கமாகவும் சொல்லிவிட்டால் போதும், பிறகு கிடைக்கும் கெட்டோ லிங்கை சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம் பணம் திரட்ட முடியும். கூகிள் ஆட்வர்ட்ஸ், ஃபேஸ்புக் விளம்பரம் போன்றவற்றை பயன்படுத்தி விளம்பரப்படுத்தும் ஆலோசனைகளும் கெட்டோ தளம் மூலமாக வழங்கப்படுகிறது.
சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு உதவ பணம் திரட்டுவதற்காகவே தனியாக chennaifloods.ketto.org என்ற பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த பக்கத்தில் பார்த்த போது என்னென்ன மாதிரியான பிரச்சினைகளுக்காக பணம் திரட்டுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
தி நியூஸ்மினிட் (The Newsminute)
கெட்டோ மூலமாக 'தி நியூஸ்மினிட்' நிறுவனம் வெறும் 5 நாட்களில் 25,01,760 ரூபாய் திரட்டியிருக்கிறார்கள். இதில் 544 பேர் இதுவரை பணம் செலுத்தியிருக்கிறார்கள். நியூஸ்மினட், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னவெல்லாம் உதவி செய்கிறார்கள் என்பதை 'Help Chennai' பகுதியில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் உதவிய நிதி சரியான இடத்திற்கு சென்றடைந்ததா என மக்கள் தெரிந்தும் கொள்ளலாம்.
குனால் கபூர்
இந்தி நடிகரான குனால் கபூர் சென்னை வெள்ளத்திற்கு உதவும் வகையில் "chennaineedshelp" என்ற பெயரில் கெட்டோ தளத்தில் 16 நாட்களில் 1,80,226 ரூபாய் திரட்டியிருக்கிறார். இந்த பணம் "Oxfam India” என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
விலங்குகளை பாதுகாப்பது
சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவும் வகையில் ஜீவேஷ் கோயங்கா என்பவர் "helpchennaifloodanimals” என்ற பெயரில் ஆறு நாட்களில் 11,31,250 ரூபாய் நிதி திரட்டியிருக்கிறார். இதற்காக 290 பேர் பணம் வழங்கியுள்ளனர். www.wildlifesos.org என்ற நிறுவனம் சார்பில் இந்த பணம் திரட்டப்பட்டிருக்கிறது. விலங்குகளுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும், 9884844444 என்ற எண்ணை அழைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
நடிகை கனிஹா
நடிகை கனிஹா, சென்னை வெள்ளத்திற்கு உதவும் வகையில் "kanihasHelpNammaChennai” என்ற பெயரில் கெட்டோ மூலம் நிதி திரட்டியிருக்கிறார். இதுவரை 3,42,860 ரூபாய் திரட்டியிருக்கிறார். 93 பேர் இந்த பணத்தை செலுத்தியிருக்கிறார்கள். டிசம்பர் 7 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர்கள் 6000 பேருக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கியதாக கெட்டோ தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
சென்னை வெள்ளத்திற்கு இது போல பலரும் தங்களால் முடிந்த வகையில் பணம் திரட்டிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. தொழில்நுட்பம் சமூக தொண்டுகளுக்கும் உதவியாக இருப்பது மகிழ்ச்சியான தகவல். பணம் திரட்டுபவர்களையும் பணம் செலுத்துபவர்களையும் ஒருங்கிணைப்பது உண்மையில் நல்ல முயற்சி ஆகும்.