இந்திய விஞ்ஞானி வடிவமைத்துள்ள பேட்டரி இல்லாது இயங்கும் செல்போன்
இன்று கையில் மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை என்றாகிவிட்டது. ஆனால் போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் நாம் சார்ஜரை தேடி இங்கும் அங்கும் அலைய ஆரம்பித்து விடுவோம். அதனால் பேட்டரி தேவைப்படாத செல்போன்கள் இருந்தால் எப்படி இருக்கும்?
பேட்டரி தேவைப்படாத போன் ஒன்றை, ரேடியோ சிக்னல் மூலமாக அல்லது வெளிச்சத்தின் வழியாக சார்ஜை போனே மைக்ரோவாட் பவரை உருவாக்கி செயல்படும் விதத்தில் தயாரித்துள்ளார் இந்திய விஞ்ஞானி ஒருவர்.
பேட்டரி இல்லாத இந்த போனை கொண்டு ஸ்கைப் கால் கூட செய்து ஆராய்ச்சியாளர்கள் குழு சோதித்துவிட்டனர். அமெரிக்க ஜர்னல் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் படி, பேட்டரி இல்லாமல் இந்தவகை செல்போன், பேச, எழுத்துக்கள் அனுப்பமுடியும். வாஷிங்கடன் பல்கலைகழக இணை பேராசிரியர் ஷ்யாம் கொல்லகோடா இது பற்றி கூறுகையில்,
”நாங்கள் முற்றிலும் எந்த சக்தியும் இல்லாமல் இயங்கும் செல்போன் ஒன்றை உருவாக்கியுள்ளோம். சுற்றுச்சூழலில் இருந்து பெறும் சக்தியை கொண்டு இந்த போனை இயங்கச்செய்ய முயற்சித்துள்ளோம். அடிப்படையையே மாற்றி இந்தவகை போனை வடிவமைத்தோம்,” என்றார்.
பேட்டரி இல்லாத செல்போனில் பல நன்மைகள் உள்ளது. ஒருவர் இந்த போனில் பேசும்போதும் ஏற்படும் அதிர்வலைகளை அதில் பொருத்தப்பட்டுள்ள ஆண்டன்னா கைப்பற்றி அதை ரேடியோ சிக்னலாக மாற்றிவிடும். இந்த சிக்னல் கொண்டு பேச்சு வடிவங்கள் உருவாகும், ஆனால் அதற்கு எந்த சக்தியும் தேவைப்படாது.
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த ரேடியோ சிக்னலை வாங்கி, அதை மாற்றி வெளியிட ஒரு பேஸ் ஸ்டேஷனை வடிவமைத்தனர். போனை பயன்படுத்துபவர், ஒரு பட்டனை அமுக்கும்போது ரேடியோ சிக்னல்கள் ‘ட்ரான்ஸ்மிடிங்; மற்றும் ‘கேட்கும்’ மோடுகளுக்கு மாறிக்கொள்ளும்.
இவர்கள் உருவாக்கியுள்ள மாதிரி போனில், பேச்சு, டேட்டாக்களை அனுப்ப, பெற முடியும். ஸ்கைப் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கால் ஒன்றை ஏற்று அதில் பேசியும் உள்ளனர். எல்லாமே பேட்டரி இல்லாத போனில். வாஷிங்கடன் பல்கலைகழகத்தின் மற்றோரு பேராசிரியர் ஜோஷுவா ஸ்ம்தி பேசுகையில்,
”நாம் தினசரி பயன்படுத்தும் பொருளாகிவிட்டது செல்போன். அதனால் அதை பேட்டரி இல்லாமல் பயன்படுத்த முடியும் என்றால் அது உற்சாகமாகவும், நம் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறோம்,” என்கிறார்.
கட்டுரை தகவல் உதவி: IANS