ஒட்டகப்பால் டீ, காபி, மில்க்ஷேக்: சேலம் இளைஞர்களின் வித்தியாச தொழில் முயற்சி!
சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஒட்டகப் பாலில் டீ, காபி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் பிரபாகரன் மற்றும் அருண் என்ற இரண்டு இளைஞர்கள். ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள், எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால் இந்த புதிய முயற்சிக்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வெற்றிக்கொடி கட்டு படத்தில் ஒட்டகப்பாலில் டீ போடச் சொல்லி வடிவேலு கேட்பதுபோல் ஒரு காமெடி வரும். அதில், ‘ஒட்டகப் பாலுக்கு நான் எங்கடா போவேன்?’ எனப் பாவமாகக் கேட்பார் அந்தக் கடைக்காரர். ஆனால், சேலத்துக்காரர்களுக்கு அப்படி ஒரு கவலை இனி இருக்காது. ஆம், சேலத்தில் நிஜமாகவே ஒட்டகப்பாலில் டீ, காபி, மில்க்ஷேக் என விதவிதமாகத் தயாரித்து அசத்தி வருகின்றனர் இரண்டு இளைஞர்கள்.
சேலம் கோரிமேடு, என்.ஜி.ஓ.,காலனி பகுதியில் உள்ளது 'சைலம்' உணவகம். அருண், பிரபாகரன் என்ற இரண்டு இளைஞர்கள் நடத்தி வரும் இந்த உணவகத்தின் சிறப்பே, அங்கு ஒட்டகப் பாலில் காபி, டீ, மில்க் ஷேக், சாக்லேட் போன்றவற்றை விற்பனை செய்யப்படுவது தான்.
சமையல் கலை வல்லுநர்களான அருணும், பிரபாகரனும் கல்லூரி கால நண்பர்கள். ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரன், ஒருநாள் சமூக வலைதளத்தில் ஒட்டகப்பாலின் நன்மை குறித்துப் பார்த்துள்ளார். எனவே, ராஜஸ்தானில் இருந்த தனது நண்பர்கள் மூலம் தனது குடும்பத்திற்கு மட்டும் ஒட்டகப்பாலை வரவழைத்துப் பயன்படுத்தியுள்ளார்.
“எந்தவொரு விசயத்தைக் கேள்விப்பட்டாலும் அதுபற்றி மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகம். அப்படித்தான் ஒட்டகப்பாலைப் பற்றி தெரிந்து கொண்டேன். ஒட்டகப்பால் குழந்தைகளுக்கு நல்லது, எலும்பு வளர்ச்சிக்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது எனத் தெரிந்து கொண்டேன். ஆனால் அதிக விலை கொடுத்துதான் எங்கள் குடும்பத்திற்கே ஒட்டகப்பாலை வாங்க வேண்டி இருந்தது. எனவே, நாம் பெற்ற நல்லதை மற்றவர்களுக்கும் தர வேண்டும் என்ற எண்ணத்தில், இதனை ஒரு தொழிலாக மாற்ற விரும்பினோம்,” என்கிறார் பிரபாகரன்.
ஒட்டகப்பாலின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றிக் கேள்விப்பட்ட அவரது அக்கம்பக்கத்தார், தங்களுக்கும் அதனை வாங்கித் தருமாறுக் கேட்டுள்ளனர். அதிகம் பேர் கேட்க ஆரம்பித்ததால், இதனையே ஒரு தொழிலாகச் செய்தால் என்ன என்ற எண்ணம் பிரபாகரனுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தன் நண்பர் அருணுடன் சேர்ந்து இதனை ஒரு தொழிலாக மாற்றி விட்டார். 'ஆத்யா' என்ற பெயரில் கடந்த 2021ம் ஆண்டு ஒட்டகப்பாலை விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர் பிரபாகரனும், அருணும்.
“ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள், எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நேரடியாக வாங்கத் துவங்கினோம். கொரோனா தளர்வுக்கு பின், ராஜஸ்தானில் உள்ள ஒரு பண்ணையில் கறந்த ஒட்டகப் பாலை உடனடியாக குளிரூட்டி, 48 மணி நேரத்தில் சேலம் வந்துவிடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்,” என்கின்றனர்.
ஆரம்பத்தில் வெறும் ஒட்டகப்பாலை மட்டும் விற்பனை செய்தவர்கள், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் ’சைலம்’ என்ற உணவகத்தை ஆரம்பித்து ஒட்டகப்பாலில் டீ, காபி, மில்க்ஷேக் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகின்றனர்.
சைலம் உணவகத்தில், ஒட்டகப் பாலில் போடப்பட்ட டீ 60 ரூபாய்க்கும், காபி 65 ரூபாய்க்கும், மில்க் ஷேக் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஒட்டகப்பால், சாக்லேட்டை ரூ.75க்கு விற்கிறார்கள். ஒட்டகப்பாலில் காபி, டீ குடிக்க நினைக்கும் போதெல்லாம் இவர்களது கடைக்குத் தான் தேடி வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், மக்கள் தங்கள் வீட்டிற்கே ஒட்டகப்பாலை வாங்கிச் சென்று, அவர்கள் விரும்பிய நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழி செய்து செய்துள்ளனர்.
ஆம், இவர்களது கடையில் ஒட்டகப் பால் லிட்டர் ரூ.899க்கும், அரை லிட்டர் ரூ.450க்கும், சில்லறையாக 100 மிலி என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
“ஒட்டகப்பால் மாட்டுப் பாலை விட கெட்டித்தன்மை கொண்டதாகவும், சிறிது உப்பு சுவை கூடுதலாகவும் இருக்கும். இந்த சுவை மக்களுக்குப் பிடித்துப் போனதால், மக்களிடையே எங்களது தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தைகளும் விரும்பி குடிப்பதால் விற்பனை அதிகரித்து வருகிறது,” என்கின்றனர்.
முன்கூட்டியே ஆர்டர்கள் பெறப்பட்டு, அதற்குத் தகுந்த அளவிலேயே ராஜஸ்தானில் இருந்து ஒட்டகப்பாலை வரவழைக்கின்றனர். எனவே பால் மீதமாகும், வீணாகும் என்ற பிரச்சினை இல்லை என்கிறார் பிரபாகரன்.
இந்த ஓட்டகப்பாலை 7 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்பதால், மக்கள் வேண்டிய அளவு வாங்கிக் கொள்கின்றனர். ஒட்டகப்பாலில் டீ குடித்த பலருக்கு அந்த சுவை பிடித்துப் போன காரணத்தாலும், அதன் மருத்துவக்குணம் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பவர்களும் இப்போது சைலம் கடையின் நிரந்தர வாடிக்க்கையாளர்கள் ஆகி இருக்கிறார்கள். இதனால் சேலம் பகுதியில் ஒட்டகப்பாலுகு தற்போது மவுசு அதிகமாகியுள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ள உணவுப் பிரியர்களும் ஒட்டகப்பால் டீ பற்றி கேள்விப்பட்டு, இங்கு வந்து டீ சாப்பிட்டு விட்டு, அதன் ருசியைப் பாராட்டிச் செல்வதாகக் கூறுகிறார் பிரபாகரன்.
“தினந்தோறும் காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒட்டகப் பாலில் டீ சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேற்றி ஆரோக்கியத்துடனும் எதிர்ப்பு சக்தி மற்றும் இன்சுலின் அதிக அளவில் சுரப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த டீ ஏற்றதாக இருக்கிறது. வெளிநாடுகளில் ஒட்டகப் பாலில் டீ சாப்பிட்டவர்களும் எங்கள் கடைக்கு வந்து ருசி பார்த்துவிட்டு அதே சுவையுடன் நாங்கள் தயாரிப்பதாக பாராட்டி செல்கின்றனர். இது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்கிறார் பிரபாகரன்.
இப்போதைக்கு தங்களது கடை மூலம் மட்டுமே ஒட்டகப்பாலை விற்பனை செய்து வருகின்றனர் அருணும், பிரபாகரனும். எதிர்காலத்தில் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.