இது ஒரு டிஜிட்டல் தேர்தல்...!
தமிழ் நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டிஜிட்டல் தளம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை பற்றிய கட்டுரை இது...
ஒரு வழியாக தமிழ் நாட்டில் நாடளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத் தேர்தலும் முடிந்து விட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பல்வேறு அனல் பறக்கும் சம்பவங்கள் ஒரு வழியாக ஓய்வுக்கு வந்து விட்டது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் டிஜிட்டல் தளங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ஒரு வேட்பாளருக்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு என்று கேட்டு சீட்டு கொடுத்தது போக, இந்த தேர்தலில் முகநூல் கணக்கு உள்ளதா என்ற கேட்குக்கும் அளவிற்கு Social Media முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கணக்குல எவ்வளவு பேரு இருக்கு?
பதிவு செய்யப்பட்டக் கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்களுக்கு முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு உள்ளது. ஒரு வேளை கணக்கு இல்லை என்றால், கணக்கு திறப்பு விழாவை தான் முதலில் செய்தார்கள்.
சீட்டு வாங்கிய கையுடன் வேட்பாளர்கள் முதலில் செய்தது இது தான். புதிதாக கணக்கை திறந்து பெரும் வரவேற்பை பெற்றவர்களில் முதன்மையானவர் தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் தான்.
கணக்கு தொடங்கியது மட்டும் இல்லாமல் பல வேட்பாளர்கள் தொடர்ந்து அதை அருமையாக பயன்படுத்தினார்கள். தொலைக்காட்சி விளம்பரம் ஒரு பக்கம் இருந்தாலும் அதிகமான கவனம் சமூக ஊடகங்கள் பக்கம் தான் இருந்தது. எது செய்தாலும் இதன்வழியே உடனடியாக உலகம் முழுவதும் சென்றுவிடும் என்பதால் வேட்பாளர்கள் பெரும் கவனத்துடன் செயல் பட வேண்டி இருந்தது. பெரும்பாலான வேட்பாளர்கள் கவனத்துடன் பரப்புரை செய்தார்கள். ஏனெனில் சோஷியல் மீடியா எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல பயன் தருமோ அதே மாதிரி பின் விளைவுகளும் அதிகம்.
எதாவது சர்ச்சையான ஒன்றை கூறிவிட்டு நான் அவ்வாறு கூறவில்லை என்று அரசியல்வாதிகள் எந்த விதமான மழுப்பலும் செய்ய முடியாமல் கடிவாளம் போட்டது Social Media தான்.
நான் அவன் இல்லை!!
என்றோ ஒரு நாள் எதோ ஒரு மூலையில் எங்கோ எதோ பேசியது கூட ஒரே நாள் ஒருவரின் பெயரைக் கெடுத்துவிடும். அது தான் Social Media வின் மகிமை. அதைச் சொன்னது நான் இல்லை. வேறு யாரோ என்று எந்த வழியிலும் தப்பிக்க முடியாது. இங்கு நான் அவன் இல்லை படம் எல்லாம் வேலைக்கு ஆகாது. அவ்வாறு இந்த முறை மாட்டிக்கொண்டது மருத்துவர் அன்புமணி ராமதாசின் பழைய பேச்சுக்கள் தான்.
தொடர்ந்து அது பகிரப்பட்டு அவருக்கு பெரும் தலை வலியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 'நான் தான் அதைச் சொன்னேன்', 'நான் அவன் இல்லை' என்று கூற முடியாமல் அன்புமணியை தொந்தரவு செய்தது இந்த சமூக ஊடக உலகம்.
பாட்களின் (Bot) அட்டகாசங்கள்!!
ஒரு மனிதன் செய்வதை அப்படியே செய்வது தான் இந்த Botகளின் வேலை. லைக் செய்வது, கமெண்ட் செய்வது, ஷேர் செய்வது Social Media பயன்படுத்தும் நபர்களின் அடிப்படை செயல்பாடு. அதை அதிகப்படுத்தி கவனத்தை ஈர்க்க பெரும்பாலான அரசியல் காட்சிகள் Botகளை பயன்படுத்தினார்கள்.
கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது போன்று தான் இதுவும். அதிகமான லைக், ஷேர் என்பது Social Media வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. மற்றவர்களிடம் இதை கேட்பதற்கு பதில் Botகள் வைத்து செய்துவிடலாம். அப்படிச் செய்கின்றார்கள் என்பது தான் உண்மை. இந்த வெட்டி பந்தா தேவையா என்று கேட்டால், ஆம் தேவை தான் என்பது எதார்த்தமான உண்மை.
எது ஒன்று அதிகமாக பகிரப்படுகின்றதோ அதுவே Social Media வில் பேசும் பொருள் ஆகும். அப்படி ஆனால் அது தேர்தல் களத்திலும் எதிரொலிக்கும். குறைந்த காலத்தில் ஒரு செய்தியை பெரிய அளவில் கொண்டு செல்ல இது உதவும். மனிதர்களும் செய்வார்கள், மனிதர்களோடு Bot சேர்ந்து அந்த வேலையை பார்த்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். அட்டகாசமாக இருந்தது என்பது தான் உண்மை.
பல கட்சிகள் Botகளே துணை என்று செயல்படுகிறார்கள்.!!
நாங்க பொய் சொல்லப் போறோம்
இந்த Social Media வில் பிடிக்காத ஒன்று என்னவென்றால், தவறான தகவல் வேகமாக பகிரப்படும். ஒரு சிலர் இதை தெரியாமல் செய்வார்கள். பலர் அது பொய் என்று தெரிந்தும் பகிர்வார்கள். இது போன்ற தகவல் அதிகமாக பகிரப்படுவது Whatsappஇல் தான். முகநூல் போன்ற இணையதளங்களில் பகிர்ந்தால் இந்தத் தகவல் தவறு என்று பலர் கமெண்ட் செய்து விடுவார்கள். எனவே தனியாக அதை Whatsapp மூலம் பகிர்ந்து ஒரு வகையான இன்பம் அடைவார்கள்.
பல அரசியல் கட்சிகள் தவறான தகவல்களை வேண்டும் என்றே பகிர்ந்து ஆதாயம் அடைந்தார்கள். அந்த ஆதாயம் வாக்குகளாக வருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். என்னதான் Whatsapp நிறுவனம் Forwarded message என்று அடையாள படுத்தினாலும் இது போன்ற பொய்யர்கள் பரப்பும் பொய்களை Social Mediaவில் தடுப்பது என்பது சிரமம் தான்.
நிழல் நிஜம் ஆகுமா?
ஆயிரம் தான் இருந்தாலும் சமூக வலைத்தளம் என்பது ஒரு மாயை தான். இது ஒரு நிழல் சமூகம் தான் என்று பலமுறை பல தளங்களில் எழுதியுள்ளேன். அது வாக்கு சதவீதத்தில் எதிரொலித்தது. சென்ற முறை பதிவு செய்யபட்ட வாக்கு சதவீதம் கூட இந்த முறை பதிவாகவில்லை. என்னதான் தகவல் தொழில்நுட்ப அணி என்று ஒன்று இருந்தாலும் களத்தில் நிற்க ஆள் வேண்டும் என்று இந்தத் தேர்தலில் பல கட்சிகள் புரிந்து இருப்பார்கள்.
இணையத்தை நம்பிய கட்சிகள் பல, பூத் ஏஜெண்டுகள் கூட இல்லாத நிலைமை தான் கள யதார்த்தம். எனவே இணையத்தளம் என்பது ஒரு மாயை. இங்கு இருப்பது பல போலிகள் தான். எனவே அரசியல் கட்சிகள் இந்த மாயைக்கு முக்கியதுவும் தருவது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை.
மக்களை நேரில் சந்தியுங்கள். அதுவே உண்மை. !
(பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்கள் கட்டுரையாளருடையது. இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.)