லாக்டவுனில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ - பெண்களுக்கு வரமா? சாபமா?
ஊரடங்கில் அனைவரையும் Work From Home செய்யச் சொல்லி அரசும் அலுவலகங்களும் உத்தரவிட்டது. அதில் பெண்கள் குறிப்பாக சந்தித்த சவால்கள் என்ன? எப்படி சமாளித்தார்கள் என நாங்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் இதோ:
கொரோனா வைரஸால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாக பொருளாதாரத்திலும் மனதளவிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு மாதங்களாக, கொள்ளை நோய் கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு நமது அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இதனால் பள்ளி மற்றும் அலுவலகமாக மாறியது நம் வீடுகள்.
அண்மையில் லிங்க்டுஇன் நடத்திய ஆய்வில், பணிபுரியும் இந்திய பெண்களில் 50 சதவீதத்தினர் கொரோனா தொற்று தொடர்பான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கிறது.
சரி, இதில் தினந்தோறும் வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு அலுவலக வேலையை கவனிக்கும் பெண்களின் நிலை என்ன? முதலில் வீட்டு வேலையை முடித்துவிட்டு வேலைக்கு சென்றனர் ஆனால் இப்பொழுது அனைவரும் வீட்டிலே இருக்கும் பட்சத்தில் என்ன செய்தார்கள் பெண்கள்?
இதை அறிய யுவர்ஸ்டோரி தமிழ் சார்பில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ பற்றிய ஒரு சர்வே நடத்தினோம். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்வது வரமா? சாபமா? ஒவ்வொருவரும் சந்தித்த சிக்கல் என்ன? அதே சமயம் அதில் கிடைத்த நன்மைகள் என்ன என்று பல கேள்விகளைக் கேட்டிருந்தோம்.
எங்கள் சர்வேயில் கலந்து கொண்ட 70% பெண்கள் சென்னையில் வசிப்பவர்கள். 58% பெண்கள் 30-40 வயதுக்கு உட்பட்டவர்கள். அதாவது பெரும்பாலானோர் திருமணம் முடிந்து ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் வசிப்பவர்கள்.
அனைவரையும் ‘வொர்க் ஃபர்ம் ஹோம்’ செய்யச் சொல்லி அரசு மற்றும் அலுவலகங்கள் அறிவித்தன. வீட்டில் உள்ள ஆண், பெண் என இருவரும் ஆன்லைனில் Work from home செய்வது அத்தனை சுலபமல்ல என போகப்போகத் தெரியவந்தது. அதோடு குழந்தைகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதால், வீடே ரணகளம் ஆனதுதான் உண்மை.
- 55% பெண்கள் குழந்தை மற்றும் கணவருடன் தனிக் குடித்தனம் நடத்துபவர்கள். அதாவது எந்தவித உதவியும் இன்றி தனிமனிதியாக குழந்தை, வீடு மற்றும் அலுவலக வேலையை பார்த்துக் கொள்ளும் பெண்கள்.
- 50% பெண்களுக்கு மட்டுமே வீட்டில் இருந்து பணிபுரியத் தேவையான வசதிகளை அலுவலகம் செய்துக் கொடுத்துள்ளது. எஞ்சிய 50% பெண்கள் தாங்களே லேப்டாப், இண்டெர்நெட் என ஏற்பாடுகளைச் செய்துக்கொண்டதாகத் தெரிவித்தனர்.
அலுவலகத்திலிருந்து உதவி பெறாத பெண்கள், ஸ்மார்ட் போன் மூலமும் வீட்டிலுள்ள லேப்டாப் மூலமும் அலுவலக வேலையை செய்து வந்தனர். இன்னும் சிலர் டெஸ்க்டாப்பை மாத வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
இதில் தான் சந்தித்த சவாலை பகிர்கிறார் பேராசிரியராக இருக்கும் டாக்டர் தமிழ்செல்வி,
"என்னிடம் லேப்டாப் உள்ளது ஆனால் ஆன்லைன் கிளாஸ்கள் தொடங்கியதால் எனது மகளுடன் பகிர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு லேப்டாப்பை வைத்துக்கொண்டு மாறி மாறி பயன்படுத்துவது மிகவும் சவாலாக இருந்தது. ஸ்மார்ட்போனை பயன்படுத்தினாலும் எனது வகுப்பிற்காக ஆராய்ச்சி செய்யவும் அலுவலக சந்திப்பின்போது ஸ்கிரீன் ஷேர் செய்யவும் மிகவும் சிரமமாக இருந்தது," என தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய லேப்டாப் மற்றும் பிராட்பேண்ட் வசதியை பெற தங்கள் சேமிப்பிலிருந்து செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் சில பெண்கள்.
அலுவகமாக மாறிப்போன வீடுகள்
அடுத்தக்கட்டமாக பெண்கள் சந்தித்த மிகப்பெரிய சவால்; அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலையை இணையாக பார்ப்பது. இதில் என்ன இருக்கிறது எப்பொழுதும் செய்வது தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் வீட்டில் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பத்தினரின் உதவியின்றி இரண்டு வேலையையும் ஒன்றாக பார்ப்பது சற்று கடினமானது தான்.
இது குறித்து பகிர்ந்த பல பெண்கள், குழந்தையை 24 மணிநேரமும் பார்த்து கொண்டு சமையல் வேலை, அலுவலக சந்திப்பு மற்ற வீட்டு வேலைகள் என சகலத்தையும் செய்வது கடினமாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.
நாம் மேலே குறிப்பிட்டதுபோல்,
- 50 சதவீதத்துக்கும் மேலான பெண்கள் தனிக்குடித்தனத்தில் உள்ளனர் அதனால் சில பெண்களுக்கு மட்டுமே அம்மா, அப்பா, மாமனார், மாமியாரின் உதவி கிடைத்துள்ளது. ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவர்கள் மிக உதவியாக இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
எச்.ஆர் மேனேஜராக இருக்கும் ஷாமா பர்வீன், இரு குழந்தைகளுடன் வீட்டில் பணிபுரிந்த அனுபவம் பற்றி பகிர்கையில்,
"வீட்டில் தனியாக இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொண்டு பணிபுரிவது கடினமாக இருந்தது. அவ்வப்போது என் அம்மா குழந்தைகளை பார்த்துக் கொண்டு உதவினார். இருந்தாலும் சில சமயம் நான் முக்கியமான பணியில் இருக்கும்போது குழந்தைகள் சண்டை போட்டுக் கொண்டாலோ, அவசரமாக டாய்லெட் பயன்படுத்தும்போதோ, வேலையை விட்டுவிட்டுச் செல்லும் சூழல் ஏற்பட்டது,” என்கிறார்.
மேலும் வொர்க் ஃபர்ம் ஹோமில், மிகப்பெரிய சவாலாக இருந்தது நேரம், அதாவது இதுதான் அலுவலக நேரம் என்று இல்லாமல் 24 மணி நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை இருந்து கொண்டே இருந்தது என தெரிவித்துள்ளனர்.
ஐடி பிரிவில் வேலை செய்யும் சங்கீதா கருணாநிதி பகிர்கையில்,
"காலை 10 மணிக்குள் வீட்டு வேலையை முடித்துவிட்டு இரவு 8 மணிவரை அலுவலகப் பணியை செய்வேன். இதனால் என் குழந்தையுடன் முழுமையான நேரத்தை செலவிட முடியவில்லை. மேலும் அலுவலக பணி மற்றும் வீட்டு வேலை இரண்டையும் மிகத் துல்லியமாக செய்ய சவாலாக இருந்தது," என தெரிவிக்கிறார்.
ஐடி துறையில் பணிபுரியும் ரம்யா பகிர்கையில்,
“வீட்டில் உள்ளவர்களுக்கு வொர்க் ஃபர்ம் ஹோம் என்பதை புரிந்து கொள்ளவே சில நாட்கள் ஆனது. என் மாமியார் எனக்கு உதவியாக இருந்தார், இருப்பினும் வீட்டு வேலை செய்பவரும் இல்லாமல் எல்லா வேலையையும் முடித்துவிட்டு பணியை துவங்குவது சற்று சிரமமாக இருந்தது. பின்னர் பழகிவிட்டது,” என்கிறார்.
ஒரு சிலருக்கு வீட்டில் நேரமின்மையால் பிரச்சனை என்றால் பல பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்து வொர்க் பிரஷர் இருந்ததாக தெரிவித்தனர். சென்னை பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராக இருக்கும் சசிகலா கூறுகையில்,
“பொதுவா காலை 8 மணிக்கு ஆபிஸ் போய்ட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பி என் வேலையை பார்ப்பேன். ஆனா இப்போ, வீட்டில தானே இருக்கீங்கனு, இரவு 8 மணிக்குக் கூட ஜூம் மீட்டிங் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இரவு டின்னர், குழந்தை படிப்பு என கவனிக்க முடியாமா இருந்துச்சு,” என்கிறார்.
இத்தனை சவால்கள் இருந்தாலும் 70 சதவீத பெண்கள் வீடு மற்றும் அலுவலக வேலையை சீராக பார்த்துக்கொள்ள முடிகிறது என்றனர்.
- 74% பெண்கள் இந்த ஊரடங்கிற்கு பின்பும் வீட்டிலிருந்தே அலுவலக வேலையை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். சிலர் தங்களின் வேலை ஆற்றல் கூடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முக்கியக் காரணம் போக்குவரத்துச் செலவை குறைக்க முடியும் என்பதும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் திறக்காததால், பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததாலும், அவர்களுடன் அதிக நேரம் வீட்டில் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பெண்களால் எதுவும் முடியும்
பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்று சொல்லிப் பழகிப்போனதால், பலரும் வீடு மற்றும் அலுவலகப் பணியை திறம்பட செய்து காட்டிட தீவிடம் காட்டி, அதை வென்று காட்டியும் விட்டனர். இருப்பினும் சில பெண்களுக்கு இந்த கூடுதல் வேலை பளுவால் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
“வீட்டில் இருந்து பணிபுரியும் சூழல் அலுவலகத்துக்கு என்றுமே இணையாகாது. சரியான இடம், சேர் இல்லாததால் கழுத்து, முதுகு வலி வரத்தொடங்கியது. சரியான தூக்கம் இல்லாததால் மன உளைச்சல் ஏற்பட்டது,” என்கிறார் பன்னாட்டு நிறுவன தலைமைப் பொறுப்பில் இருக்கும் காமினி.
அதனால் தங்கள் உடல்நலத்தையும் பெண்கள் மனதில் கொண்டு அதற்கேற்றவாறு ப்ளான் செய்து வேலையை செய்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
"வீட்டில் இருந்து பணி செய்யும் பெண்களுக்கு உதவும் வண்ணம் அலுவலகமும் வீட்டில் உள்ளவர்களும் செயல்படவேண்டும். வீட்டிலிருந்து பணிபுரிவதால் எந்நேரமும் தயாராக இருப்போம் என்ற எண்ணத்தை அலுவலகம் கைவிட வேண்டும், வீட்டில் இருக்கும் ஆண்கள் வீட்டு வேலையில் பங்கேற்றுக் கொள்ள வேண்டும், தங்கள் கடமையாக செய்ய வேண்டுமே தவிர உதவியாகச் செய்யக் கூடாது," என தெரிவிக்கிறார் எழுத்தாளராக இருக்கும் சாய் ஜனனி.
இந்த ஊரடங்கில் வீட்டில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற விவாதத்தைத் தாண்டி அனைவரும் எதோ ஒரு வகையில் சில சவால்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து இந்த கடினமான காலக்கட்டத்தைக் கடந்து போவோம்.