இந்திய பெண் விஞ்ஞானிகளின் மைல் கல்லாக மாறிய Chandrayaan 3 - விண்ணில் பாய்ந்த விண்கலம்!
நிலவில் ஆய்வு மேற்கொள்ள உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
நிலவில் ஆய்வு மேற்கொள்ள உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது.
2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்தது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு இஸ்ரோ கைவிட்டது.
சந்திரயான் 3 விண்கலம்:
உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த சந்திரயான் 3 (Chandraayan-3) இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் 1.05 மணிக்கு தொடங்கப்பட்டது.
சரியாக 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3, 16வது நிமிடத்திலேயே புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 தமது நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சந்திரயான் 3 சிறப்பம்சங்கள்:
இன்று 3900 கிலோ எடையுடன் எல்விஎம்3 எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3 விண்கலம், மொத்தம் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் கால்பதிக்கும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தென்பகுதியில் தரையிறங்கும் சந்திரயான்-3 லேண்டர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மைல் கல்லாக எதிர்பார்க்கப்படும் சந்திரயான்-3 நிலவை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் ₹ 615 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 நிலவை மட்டுல்லாமல், நிலவிலிருந்து பூமியையும் கண்காணிக்க உள்ளது. இதன் மூலம் விண்வெளி துறையில் பெருமைமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும் என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இஸ்ரோ குழுவில் உள்ள 'சந்திரயான் 3' இயக்குனர்கள் ஏ.கே. பத்ரா, வீரமுத்துவேல், கல்பனா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
இத்திட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பணியாற்றியுள்ளனர். பொறியாளர்கள், விஞ்ஞானிகள், துணை திட்ட இயக்குநர்கள், இணை மற்றும் திட்ட மேலாளர்கள் என பல்வேறு பொறுப்புகளின் கீழ் 54 பெண்கள் பணியாற்றியுள்ளனர். இத்திட்டத்தில் பணி இயக்குநர் ரிது கரிதல் ஶ்ரீவஸ்தவா, திட்ட இயக்குநர் வனிதா உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.
திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும் வீரமுத்துவேல், தமிழர் என்பது மற்றொரு பெருமையான விஷயமாகும். விழுப்புரத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரது மகனான வீர முத்துவேல் (42) இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர்.
வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தவர், சென்னை சாய்ராம் கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார்.
அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி., அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார். தொடர்ந்து 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ'வில் பணிக்கு சேர்ந்துள்ளார். இடையே, சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். அவரது திறமையால் உயர்ந்து, தற்போது சந்திராயன்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்:
சந்திரயான் 3 விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு,
“விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. சந்திராயன் 3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ குழு மற்றும் சாதனையை நிறைவேற்ற உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சந்திரயான் 3 இந்திய விண்வெளியின் நீண்ட பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும், லட்சியங்களையும் உயர்த்திச் செல்கிறது. நம் விஞ்ஞானிகளின் அயாராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். அவர்களது புத்திக்கூர்மைக்கு தலைவணங்குகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
சந்திரயான் 3 திட்ட பணிகளில் 54 பெண்கள் ஈடுபட்டதால் இந்திய வரலாற்றிலேயே பெண்களுக்கு மிகவும் முக்கியமான சாதனையாக இது பார்க்கப்படுகிறது.