எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவை - இந்தியாவில் அறிமுகம் எப்போது?
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு இணைய தலைமுறை ஆர்வலர்களிடையே நிலவி வருகிறது. அப்படி அந்த சேவையில் என்ன சிறப்புகள் இருக்கிறது?
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு இணைய தலைமுறை ஆர்வலர்களிடையே நிலவி வருகிறது. அப்படி, ஸ்டார்லின்க் சேவையில் என்ன சிறப்புகள் இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் பெயர்களில் எலான் மஸ்கின் பெயரும் நிச்சயம் இருக்கும். உலகின் நம்பர் 1 பணக்காரர், எக்ஸ் தள உரிமையாளர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ, அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பர் என அவரது பன்முக அடையாளங்கள் இதற்குக் காரணம்.
இதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை மஸ்க் வழங்கி வருகிறார். ஸ்பேஸ் எக்ஸின் துணை நிறுவனமான ஸ்டார்லிங்க் மூலம் சாட்டிலைட் இணைய சேவையை உலக நாடுகளில் உள்ள மக்கள் பெற்று வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதத்தின் படி, சுமார் நான்கு மில்லியன் பயனர்களை கொண்டுள்ளதாக ஸ்டார்லிங்க் தெரிவித்தது. மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை கிடைக்கப்பெறுகிறது.
இதற்காக புவியின் தாழ்வான வட்டப்பாதையில் சுமார் 7,000 சிறிய ரக சாட்டிலைட்களை ஸ்பேஸ் எக்ஸ் நிலை நிறுத்தியுள்ளது. இப்போதைக்கு மொத்தமாக 12,000 சிறிய ரக சாட்டிலைட்களை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்துவது மஸ்க் நிறுவனத்தின் திட்டம். அதை 34,400 என்ற எண்ணிக்கையாக விரிவு செய்யும் மெகா திட்டமும் அந்நிறுவனத்தின் வசம் உள்ளது. இந்த சாட்டிலைட்கள் அதன் செயலிழப்பின் போது வட்டப்பாதையில் இருந்து விலகி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் அனைத்து பகுதியிலும் இதன் சேவையை பயன்படுத்த முடியும்.
சாட்டிலைட் இணைய சேவை மட்டுமல்லாது சில நாடுகளில் சாட்டிலைட் செல்லுலார் சேவையையும் ஸ்டார்லிங்க் வழங்கி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் போன்ற நேரங்களிலும் சாட்டிலைட் இணைய சேவையை ஸ்டார்லிங்க் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், நெட்வொர்க் சார்ந்த சிக்கல்கள் இருக்காது என்பது டெக் வல்லுநர்களின் கருத்து.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது?
இந்தியாவில் அதிவேக தடையற்ற இணைய சேவையை கடல், நிலம், காடு, மலை, ஆகாயம், பாலைவனம் என எங்கு சென்றாலும் பெற முடியும் என்றால் அது நிச்சயம் இருக்கின்ற நிறுவனங்களுக்கு மாற்றாக களம் காணும் கேம் சேஞ்சர் என்று அறியப்படும். அப்படிப்பட்ட சேவையை 'ஸ்டார்லிங்க்' இந்திய மக்களுக்கு வழங்கும் எனத் தெரிகிறது.
இருப்பினும், இந்திய அரசு தரப்பில் அதற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவில்லை. ரெகுலேஷன் உரிமம் சார்ந்து பல்வேறு விதிமுறைகளை ஸ்டார்லிங்க் பின்பற்ற வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் சில தளர்வுகளும் இடம்பெற்று இருப்பதாக தகவல். அதில் ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்தும் இந்திய பயனர்களின் தரவுகள் (டேட்டா) அனைத்தும் இந்தியாவிலேயே சேகரிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது பிரதான விதியாக உள்ளது.
இதோடு, ஸ்டார்லிங்க் நிறுவன முதலீட்டாளர்கள் அல்லது பங்குதாரர்கள் இந்தியாவுடன் நிலப்பரப்பை பகிரும் அண்டை நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்துக்கும் ஸ்டார்லிங்க் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்.
இதோடு, அமெரிக்க அரசுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு உள்ள சுமூக உறவும் பாதுகாப்பு சார்ந்த சங்கடங்களை எழ செய்கின்றன. அந்த நிறுவனத்தின் உளவு சாட்டிலைட் திட்டத்தின் மூலம் அமெரிக்க ராணுவத்துக்கு உதவவும் வாய்ப்பு உள்ளது.
கூடவே உள்நாட்டு முதலீடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் வணிக ரீதியான இயக்கத்தையும் ஸ்டார்லிங்க் நிறுவனம் துவம்சம் செய்ய வாய்ப்புள்ளது. இந்தியாவில் 10 சதவீத சந்தையை அந்நிறுவனம் பிடித்தால் கூட ஆண்டுக்கு 34 பில்லியன் டாலர்களை ஈட்ட முடியும். இது அமெரிக்காவில் தற்போது ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கி வரும் டேட்டா கட்டணத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
இது எப்படி இயங்குகிறது?
ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் அதிநவீன சிறிய ரக சாட்டிலைட்கள் தான் அதன் பிளஸ். சாட்டிலைட் இணைய சேவை வழங்கும் வரும் மற்ற நிறுவனங்கள் பெரிய சாட்டிலைட்களை நம்பி உள்ளன. ஸ்டார்லிங்கின் சிறிய ரக சாட்டிலைட்களில் உள்ள லேசர் கம்யூனிகேஷன் நுட்பம் விண்வெளியில் உள்ள மற்ற ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களுடன் தொடர்பு கொள்ளும். இதனால் இணைய இணைப்பின் வேகம் கூடுதலாக இருக்கும். அதோடு, பூமியில் சாட்டிலைட் நிலையங்களை சார்ந்தும் ஸ்டார்லிங்க் இயங்கவில்லை.
பூமியின் வட்டப்பாதையில் இருந்து 200 முதல் 2000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வகையில் இந்த சாட்டிலைட்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில் இருந்து ரேடியோ சிக்னல்கள் அனுப்பப்படுகின்றன. அதன் மூலம் ஆண்டினாவை கொண்டு டேட்டாவை ஸ்டார்லிங்க் பயனர்கள் பெறமுடியும். லியோ (LEO) எனப்படும் Low Earth Orbit-ல் தற்போது உலா வரும் சாட்டிலைட்களில் பாதிக்கும் மேல் ஸ்டார்லிங்க் நிறுவனத்தினுடையது.
தொழில்நுட்ப ரீதியாகவும், முதலீடு சார்ந்தும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஸ்டார்லிங்க் நிறுவனம் பல மைல்களை கடந்து நிற்கிறது. இதை கட்டமைக்க அதிக காலம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இந்தியாவில் கிடைக்கும் சக்சஸ் தேசத்தின் இணைய புரட்சியில் மற்றொரு மைல்கல்லாக அமையும்.
விலை எப்படி? - இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் நேரடி போட்டியாளர்களாக ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளன. இருப்பினும், இந்த இரண்டு நிறுவனங்களின் இயக்கமும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு முற்றிலும் மாறாக அமைந்துள்ளது. இப்போதைக்கு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவன பிராட்பேண்ட் கட்டணம் ஒரு மாதத்திற்கு ரூ.843 முதல் ரூ.1,046 வரை உள்ளது. அதுவே ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கட்டணம் அதிகமாக உள்ளது. மாதத்திற்கு ரூ.3,373 முதல் ரூ.4,217 வரை செலவிட வேண்டியுள்ளது. இருப்பினும், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்திய என்ட்ரியின் போதே அதன் அசல் பயன்பாட்டு கட்டணம் குறித்தும் தெரியவரும்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு கிடைக்கும் வரவேற்பு அதிவேக இணைய சேவையை பெற வித்திடும். கல்வி சார்ந்த வாய்ப்புகள் தேசத்தில் மேம்படும், தொலைதூர தொடர்பு வசதி, பேரிடர் காலங்களிலும் சிக்கலின்றி உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் உள்ளிட்டவை ஸ்டார்லிங்க் வருகையின் மூலம் சாத்தியம் ஆகும்.
Edited by Induja Raghunathan