Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வயதைவிட விருதுகள் அதிகம்: ரோபோஸ் உருவாக்கி, ரோபோடிக்ஸ் கற்றுக் கொடுக்கும் 16 வயது கிருத்திக்!

ரோபோடிக்ஸ் பிரிவில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சிறு வயதிலேயே ரோபோடிக்ஸ் கற்றுக்கொண்டு, கற்றுக்கொடுக்கும் Futura Robotics சிஇஓ கிருத்திக் பல்வேறு விருதுகள் வென்றிருப்பதுடன் தொழில்நுட்பத்தின் பலன் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் பல்வேறு முன்வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்.

வயதைவிட விருதுகள் அதிகம்: ரோபோஸ் உருவாக்கி, ரோபோடிக்ஸ் கற்றுக் கொடுக்கும் 16 வயது கிருத்திக்!

Thursday February 17, 2022 , 5 min Read

குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றதும் முதலில் எழுதிப் பழகுவது ஸ்டேண்டிங் லைன், ஸ்லீப்பிங் லைன். இப்படிக் கோடு போடத் தெரிந்தால் போதும் குழந்தைகளை கோடிங் வகுப்பில் சேர்த்து விடுகின்றனர் பெற்றோர்.

நான்காம் வகுப்பு வந்துவிட்டால், குறைந்தது நான்கு கிளாஸில் சேர்த்து விடுகின்றனர். இப்படிக் கட்டாயப்படுத்தி காசு கொடுத்து பெற்றோரால் பயிற்சி வகுப்புகளில் சேர்க்கமுடியுமே தவிர, குழந்தை அந்தத் துறையிலோ கலையியோ ஜொலிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

மாறாக குழந்தைக்கு எந்தப் பிரிவில் ஆர்வம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதில் அவர்களது திறனை மெருகேற்றினால், வெற்றி நிச்சயம்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் கிருத்திக் விஜயகுமார். ஆம்! புத்தகப்பையில் பிராக்ரஸ் ரிப்போர்ட் சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு மத்தியில் பிராஜெக்ட் ரிப்போர்ட் சுமந்து செல்கிறார் கிருத்திக். இனி அவரைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

krithik

கிருத்திக் – ஓர் அறிமுகம்

16 வயதாகும் கிருத்திக் சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர். இவர் கேஆர்எம் பப்ளிக் ஸ்கூலில் பதினோறாம் வகுப்பு படிக்கிறார்.

இவர் Futura Robotics நிறுவனத்தின் சிஇஓ. தொழில்நுட்பம் அனைவருக்கும் எட்டும் இடத்தில் இருக்கவேண்டும் என்பதே கிருத்திக்கின் கனவு. இந்த கனவை நோக்கியே இவர் பயணித்து வருகிறார்.

Futura Robotics, ரோபோடிக்ஸ் பயிற்சி மையமாக செயல்படுகிறது. இதுதவிர கிருத்திக் பல்வேறு பிராஜெக்டுகள் செய்துகொண்டிருக்கிறார்.

“நான் நிறைய ரோபோடிக்ஸ் பிராஜெக்ட் பண்றேன். அதுக்கான பணத் தேவைகளை பூர்த்தி செஞ்சுக்கதான் இந்த நிறுவனத்தையே தொடங்கினேன்,” என்று கூறும் கிருத்திக் சொந்த நிறுவனம் தொடங்கியதால் மேனேஜ்மென்ட் பற்றி தெரிந்துகொள்வதற்காக ஜெர்மன் யுனிவர்சிட்டியில் மினி எம்பிஏ கோர்ஸ் முடித்துள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் மீது ஈர்ப்பு

கிருத்திக்கிற்கு மிகவும் இளம் வயதிலேயே எலக்ட்ரானிக்ஸ் மீதும் ரோபோடிக்ஸ் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

“சின்ன வயசுலேர்ந்து கிருத்திக் எலக்ட்ரானிக்ஸ் மேல ஆர்வமா இருப்பான். விளையாட வாங்கித் தர்ற பொருட்கள் எல்லாத்தையும் வெச்சு புதுபுதுசா ஏதாவது கண்டுபிடிப்பான். ஸ்விட்ச் போர்டுல கையை வெச்சுப் பார்ப்பான். லைட்ல தண்ணீர் விட்டு ஃப்யூஸ் போகவைப்பான்,” என்று கிருத்திக்கின் இளம் வயது நாட்களை நினைவுகூர்ந்தார் அவரின் அம்மா கோகிலா.

இதுபோன்ற ஆபத்தான செயல்களிலிருந்து கிருத்திக்கை திசை திருப்ப அவரது அம்மா கீபோர்ட், ஸ்விம்மிங், பாட்டு, டான்ஸ் இப்படி பல வகுப்புகளில் சேர்த்துள்ளார். இருப்பினும் வேறு எதிலும் முழு ஈடுபாடு காட்டமுடியாத அளவிற்கு எலக்ட்ரானிக்ஸ் அவரைக் காந்தம் போல கவர்ந்து இழுத்துள்ளது.

“சயின்ஸ் கிளாஸ் சேர்த்துவிட்டேன். அங்கயும் அவனுக்கு ஆர்வம் இல்லை, ஆனா அங்க ரோபோடிக்ஸ் பத்தி அறிமுகப்படுத்தினது அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த மாதிரி கிளாஸ் போறேன்னு சொன்னதால ஆன்லைன் ரோபோடிக்ஸ் கிளாஸ் சேர்த்துவிட்டேன்,” என்று தன் மகனின் ரோபோடிக்ஸ் ஆர்வத்தை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார் கிருத்திக்கின் அம்மா.
krithik
“நான் சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கும்போதே ரோபோடிக்ஸ் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு வருஷத்துலயே ரோபோடிக்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா கோர்ஸும் முடிச்சிட்டேன். ஆர்&டி இன்ஸ்டிட்யூட்ல ஸ்டூடண்டா சேர்றதுக்காக போனேன். ஆனா நான் கோர்ஸ் எல்லாத்தையும் முடிச்சதால என்னை ஆர்&டி என்ஜினியரா அப்பாயிண்ட் பண்ணிட்டாங்க,” என்கிறார் கிருத்திக்.

பயிற்சி வகுப்புகள்

ஓராண்டு வரை அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் பயிற்சி அளித்து வந்துள்ளார் கிருத்திக்.

”இந்த ஒரு வருஷத்துல எனக்கு ஸ்டூடன்ட்ஸுக்கு கத்துக்கொடுக்கற அனுபவம் கிடைச்சது. அதுக்கப்புறம் நானே சொந்தமா இன்ஸ்டிட்டியூட் தொடங்கலாம்னு முடிவு பண்ணேன். கூடவே ரோபோடிக்ஸ் சம்பந்தப்பட்ட நிறைய பிராஜெக்ட்ஸ் பண்ணிட்டே இருந்தேன்.”

விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும் வகையில் கிருத்திக் சம்மர்/விண்டர் கேம்ப் நடத்துகிறார். 5-7 நாட்கள் வரை இந்த கேம்ப் ஏற்பாடு செய்யப்படுகிறது.

”இது ஸ்டூடன்ட்ஸுக்கு மட்டுமான பயிற்சி கிடையாது. பெரியவங்களும் படிக்கலாம். கோவிட் சமயத்துல கிளாஸஸ் ஆன்லைன்ல எடுத்ததால அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா இப்படி வெளிநாடுகள்லேர்ந்து நிறைய பேர் என்னோட கிளாஸ்ல சேர்ந்தாங்க. ரோபோடிக்ஸ், தொழில்முனைவு மாதிரியான தலைப்புகள்ல என்ஜினியரிங் காலேஜ், பிசினஸ் காலேஜ்கள்ல வெபினார் கண்டக்ட் பண்ண ஆரம்பிச்சேன்,” என்கிறார்.

சமீபத்தில் விண்டர் கேம்ப் ஏற்பாடு செய்திருக்கிறார். அது முடிந்த பிறகு சில மாணவர்களைத் தேர்வு செய்து உலக சாதனை படைக்க வைத்துள்ளார் நம் மாஸ்டர் கிருத்திக்.

”10 ஸ்டூடண்ட்ஸ் சேர்ந்து இந்த குரூப் வேர்ல்ட் ரெக்கார்ட் பண்ணியிருக்காங்க. ’Most DIY projects done in limited time’ அப்படிங்கற தலைப்புல ‘கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ உலக சாதனை படைக்க நான் கைட் பண்ணேன்,” என்கிறார்.

பிராஜெக்ட்ஸ்

கிருத்திக் வகுப்பு எடுப்பதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பிராஜெக்ட்ஸ் செய்து வருகிறார்.

அவரது பிராஜெக்டுகளில் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்:

ஹியூமனாயிட் ரோபோ – கிருத்திக் வடிவமைத்துள்ள ஹியூமனாயிட் ரோபோ பார்க்க மனிதனைப் போன்ற தோற்றத்திலேயே இருக்கும். கோவிட் நோயாளிகளைப் பராமரிக்க உதவும் முன்களப் பணியாளர்களுக்கு பதிலாக இந்த ரோபோக்களைப் பயன்படுத்தலாம்.

2

எலக்ட்ரிக் கார் – 4 நபர்கள் பயணிக்கக்கூடிய எலக்ட்ரிக் கார் ஒன்றை கிருத்திக் உருவாக்கி இருக்கிறார். இது சூரிய ஒளியில் இயங்கக்கூடியது. எலக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக இருப்பதால் 2 லட்சத்திற்குள் செலவாகும் எலக்ட்ரிக் காரை இவர் கண்டுபிடித்திருக்கிறார்.

எலக்ட்ரிக் சைக்கிள் – வழக்கமான சைக்கிளை எலக்ட்ரிக் சைக்கிளாக மாற்ற முடியும். இதற்கான கிட் கிடைக்கிறது. இருந்தாலும் அதை ஃபிக்ஸ் செய்வது கடினம். இதை முயற்சி செய்து பார்த்த கிருத்திக் எளிதாக ஃபிக்ஸ் செய்யக்கூடிய எலக்ட்ரிக் சைக்கிளை கண்டுபிடித்திருக்கிறார்.

ஸ்மார்ட் ஹோம் – முதியவர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்விட்சுகளை கையாள்வதில் சிரமங்கள் இருக்கும். இதற்குத் தீர்வாக ஸ்மார்ட் ஸ்விட்ச் பிராஜெக்டை உருவாக்கியிருக்கிறார். இது ‘பிளக் அண்ட் பிளே’ முறையில் இயங்கக்கூடியது. சாதனங்களை போனுடன் இணைத்துவிட்டு அவற்றை போன் மூலமாகவே இயக்கமுடியும்.

3

“எல்லாமே குறைஞ்ச செலவுல இருக்கணும். இதுதான் என்னோட முக்கியமான நோக்கம். உதாரணத்துக்கு சில ஸ்டார்ட் அப் தயாரிக்கற ஹியூமனாயிட் ரோபோ 5-6 லட்ச ரூபாய் ஆகும். இதை ரொம்ப கம்மியான விலையில, அதாவது 10,000-30,000 ரூபாயில நான் உருவாக்கியிருக்கேன்,” என்கிறார் பெருமிதத்துடன்.

“ஒரு காலத்துல ஸ்மார்ட்போன் விலை அதிகம். ஆனா இப்ப விலை கம்மியானதால பல பேர் பயன்படுத்தறாங்க. இதே ஸ்ட்ராடெஜியில பல தயாரிப்புகளை குறைஞ்ச விலையில எல்லாருக்கு கிடைக்கற மாதிரி உருவாக்கணும்னு ஆசைப்படறேன்,” என்கிறார்.

கிருத்திக் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார்.

அங்கீகாரம்

கிருத்திக் பல போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.

“அவனுக்கு போட்டிகள்ல கலந்துக்க பிடிக்கும். ஜெயிக்கறது மட்டும் அவனோட நோக்கமா இருக்காது. மத்தவங்க என்ன பிராஜெக்ட் பண்ணியிருக்காங்கன்னு ஆர்வமா பார்ப்பான்,” என்கிறார் கிருத்திக்கின் அம்மா,

12 தேசிய விருதுகளையும் 9 மாநில விருதுகளையும் வென்றுள்ள கிருத்திக் ஒரு சர்வதேச விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

10-க்கும் மேற்பட்ட உலக சாதனைகள் படைத்துள்ளார். இதில் இரண்டு கலாம் உலக சாதனைகள். OMG Books of Records சாதனை படைத்துள்ளார். லண்டன் உலகச் சாதனை புத்தகத்தில் கோடிங் சாம்ப்ஸில் பங்களித்திருக்கிறார்.

ஸ்ரீ ருத்ராக்‌ஷா பல்கலைக்கழகம், IAHRC ஆகிய இரண்டிலும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

ரொபோடிக்ஸ் ஆர்வலர், கோடிங் ஆர்வலர், ஆர்&டி நிபுணர், ஆண்ட்ராயிட் ஆப் டெவலப்பர், வெப் டெவலப்பர், யூட்யூபர், TEDx பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் கிருத்திக்.

“Innolabz Ventures ஏற்பாடு செஞ்ச ஐஐடி மெட்ராஸ் பி-பிளான் போட்டியில ஜெயிச்சேன். இந்தியாவை சேர்ந்த 500-க்கும் அதிகமான காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஜெயிச்சாங்க. நான் மட்டும்தான் ஸ்கூல் ஸ்டூடண்ட். பிராமிசிங் இந்தியன் சொசைட்டியில இளம் சாதனையாளர் விருது வாங்கினதை என்னால மறக்கவே முடியாது. இதுல இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரனாப் முகர்ஜி ஐயா கௌரவிச்சது ரொம்ப பெருமையா இருந்துது,” என்கிறார்.

நிறைய அவார்ட் வாங்கியிருக்கான். அவனைவிட வயசுல பெரியவங்களுக்குக்கூட வெபினார் எடுக்கறான். அவனோட இந்த வளர்ச்சியைப் பார்க்க எங்களுக்கு சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. புது கண்டுபிடிப்புகளை குறைஞ்ச விலையில எல்லாருக்கும் கிடைக்க செய்யணுன்றதுதான் அவனோட கனவு. அவனோட கனவு நிறைவேற ஒரு அம்மாவா நான் ஆசைப்படறேன், என்கிறார்.

வருங்காலத் திட்டங்கள்

பிராஜெக்டுகளை பிராடக்டாக மாற்றவேண்டும் என்பது இவரது வருங்காலத் திட்டம்.

“இப்ப நான் பண்ற பிராஜெக்ட்ஸ் எல்லாமே ப்ரோடோடைப்போட நிக்குது. அடுத்தகட்டமா இதை எல்லாரையும் ரீச் பண்ண வைக்கணும். குறைஞ்ச விலை தயாரிப்பா மாத்தணும். ரோபோடிக்ஸ் மாதிரியான தொழில்நுட்பம்தான் வருங்காலத்துல ஆதிக்கம் செலுத்தபோகுது. இந்த மாதிரி சூழ்நிலையில அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்கள் எல்லாருக்கும் ரோபோடிக்ஸ் திறன் போய் சேரணும்னு ஆசைப்படறேன்,” என்று கூறி விடைபெற்றார் நம் இளம் மேதை கிருத்திக்.