Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில், பாரம்பரிய இயற்கையான சரும பராமரிப்பு பொருட்களை 'த்விஸி' என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த கிருத்திகா

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!

Friday September 20, 2024 , 4 min Read

fவெற்றிபெற்ற பெரும்பான்மையான தொழில்முனைவோரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், முதலில் அவர்களது சொந்தத் தேவைக்காகத் தொடங்கிய தேடல்தான், பின்னாளில் அவர்களை லாபகரமான தொழில்முனைவோர்களாக்கி இருக்கும்.

அவர்களது வெற்றிக்கான காரணம், முதலில் அவர்களே வாடிக்கையாளர்களாக இருந்து பொருட்களை உருவாக்கியதால், மற்ற வாடிக்கையாளர்களின் தேவைகளையும் அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது என்பதுதான்.  

மதுரையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கிருத்திகாவும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான். தன் மகளின் தோல் பிரச்சினைக்கான தீர்வாக அவர் இயற்கை முறையில் சருமப் பராமரிப்புப் பொருட்கள் செய்யக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, பின்னாளில் அதில் ஆர்வம் அதிகமாக, அதைப் பற்றி மேலும் முறைப்படி படித்து, தற்போது உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட, பாரம்பரிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பொருட்களை உருவாக்கி, 'த்விஸி' என்ற பிராண்டாக விற்பனை செய்து வருகிறார்.

tvishi

மகளின் தோல் பிரச்சினை

“7 வருடங்களுக்கு முன்பு, எனது இரண்டாவது மகளுக்கு 2 வயதில் திடீரென தோலில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நாங்கள் வெளிநாட்டில் வசித்தோம். எனவே, அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொண்டோம். சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக அந்தச் சிகிச்சை தொடர்ந்த போதும், முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இதனால் எனது மகளே தன்னம்பிக்கை இழக்கிறார் என்பது எனக்கு வெளிப்படையாகத் தெரிந்தது.

"அவளது தோல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எனது தேடலைத் தொடங்கினேன். அவளுக்காக படிக்க ஆரம்பித்து, நானே சில பொருட்களை வீட்டிலேயே உருவாக்கினேன். அவற்றைப் பயன்படுத்தியதும் எனது மகளின் தோல் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகத் தொடங்கியது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை."

எனவே, மேற்கொண்டு இது குறித்து கற்றுக் கொள்ள விரும்பினேன். யூ.கேவில் இதற்கென ஒரு கோர்ஸ் படித்தேன். தற்போது நாங்கள் தயாரிக்கும் அனைத்து தயாரிப்புகளும் முறைப்படி ஆய்வக சோதனைகள் செய்யப்பட்டவைதான், என்கிறார் கிருத்திகா.

த்விஸி உருவான கதை

கிருத்திகா பயன்படுத்திய பொருட்களைப் பார்த்து, அவற்றை தங்களுக்கும் செய்து தரும்படி அவரது தோழிகள் கேட்கவே, அதனை ஆரம்பத்தில் இலவசமாகவே செய்து கொடுத்துள்ளார் அவர். பின்னர், ஒரு தோழியின் அறிவுறுத்தலின் பேரிலேயே தான் தயாரித்தவைகளை, முறைப்படி ஒரு பிராண்டாக பதிவு செய்து விற்கத் தொடங்கியுள்ளார்.

tvishi
“நாம் கற்றுக் கொண்டவைகள் மற்றவர்களுக்கும் பலனளிக்கட்டும் என கேட்டவர்களுக்கெல்லாம் இலவசமாகத்தான் செய்து கொடுத்தேன். ஆனால், என் தோழி ஒருவர்தான், இப்படியே எவ்வளவு நாளைக்கு இலவசமாகச் செய்து கொடுப்பாய். இதற்கென ஒரு தொகையைப் பெற்றுக் கொள்’ என வற்புறுத்தினார். அதனைத் தொடர்ந்துதான், எங்களுக்கென்று ஒரு பிராண்ட்டை உருவாக்கி, முறையான பேக்கேஜிங்கில் எனது தயாரிப்புகளை விற்க ஆரம்பித்தேன்,“ என்கிறார்.

ஆனால், அப்போதே எனது தயாரிப்புகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தெளிவான திட்டம் எனக்குள் இருந்தது. எனவே, ஆரம்பத்திலேயே அதற்கேற்றபடியான சான்றிதழ்கள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டேன்.

வீட்டு சமையலறையில் ஒரு பொருளில் ஆரம்பித்த எனது தயாரிப்புகள் இன்று 45 பொருட்களாக விரிவடைந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர், என்கிறார் கிருத்திகா.

கொரோனா லாக்டவுண்

ஏழு வருடங்களுக்கு முன்பு இந்தத் தேடல் ஆரம்பித்தபோதும், முறையாக கிருத்திகா அதனை ஒரு தொழிலாக ஆரம்பித்தது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான். ஆம், கொரோனா காலகட்டத்தில்தான் தனது Tvishi பிராண்டை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கிருத்திகா த்விஸியின் நிறுவனராகவும், அவரது கணவர் இணை நிறுவனராகவும் உள்ளனர்.

“சரியாக கொரோனா லாக்டவுனுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் முறைப்படி எனது நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஆனால், ஒரே மாதத்தில் லாக்டவுன் வந்து விட்டது. இதனால் எனது தொழில் பாதிக்கப்படுமோ என நான் அஞ்சவில்லை. காரணம், அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகமாகத் தொடங்கியது. நல்ல தரமான ஆர்கானிக் பொருட்களைத் தேடி வாங்கத் தொடங்கினர்.
tvishi

நாங்களும் அந்தக் காலகட்டத்தில் ஸ்கின்கேருக்கும், காஸ்மெடிக்ஸ்கும் உள்ள வித்தியாசத்தை சமூகவலைதளங்கள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தோம். எங்களது கஸ்டமர்களின் முழு விபரத்தையும் கேட்டு, அவர்களுக்குத் தகுந்த மாதிரி பொருட்களைத் தயாரித்து தரத் தொடங்கினோம். எங்களது இந்த அக்கறையான முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சிறுதொழில் என்பதால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அலட்சியமே ஆரம்பம் முதல் எனக்கிருந்ததில்லை. நான் ஐடி துறையில் இருந்ததாலோ என்னவோ, இயற்கையான பொருளாக இருந்தாலும், அதனை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தால்தான் எனக்கு அதில் நம்பிக்கையே வரும். என்னைப் போன்ற மற்ற பெற்றோரும் அப்படித்தானே தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தரமான பொருட்களைத் தர வேண்டும் என நினைப்பார்கள்.

நேச்சுரல் என சொல்லி, பாதுகாப்பில்லாத பொருட்களை உபயோகித்தால் அது ஆபத்து . அதனால் நாம் தயாரிக்கும் பொருட்கள் நமக்கு முதலில் திருப்திகரமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் முறைப்படி இது பற்றி படித்தேன். முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பதால் ஆரம்பத்தில் விலை நிர்ணயம் செய்வதுதான் பெரும் சவாலாக இருந்தது,” என்கிறார் கிருத்திகா.

ரூ. 50 லட்சம் டர்ன் ஓவர்

ரூ.10,000 முதலீட்டில், இரண்டு பட்டர், கொஞ்சம் பொருட்கள் மற்றும் சில ஆயில் வாங்கி, பொருட்களைச் செய்ய ஆரம்பித்த கிருத்திகா, தற்போது 80 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்துள்ளார். தனது நிறுவனம் மூலம் தற்போது வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்து வரும் கிருத்திகாவிடம், ஏழு பேர் வேலை பார்க்கிறார்கள்.

“சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, ரிட்டர்ன் கிப்ட்டாகவும் செய்து தரும்படி எங்களுக்கு ஆர்டர் வருகிறது. தங்கள் விழாவுக்கு வருகை தருபவர்களுக்கு நல்ல தரமான பொருட்களை ரிட்டர்ன் தர வேண்டும் என எங்களிடம் ஆர்டர் செய்கிறார்கள். அதன்மூலம் ஒரே நேரத்தில் 300 முதல் 400 குடும்பங்கள் வரை எங்களது பொருட்கள் சென்று சேர்கிறது.
tvishi

ஒருமுறை எங்களது பொருட்களை வாங்கிப் பயன்படுத்தியவர்கள், மீண்டும் மீண்டும் எங்களைத் தேடி வர ஆரம்பித்து விடுவார்கள். சமூகவலைதளப் பக்கங்கள் மற்றும் வோர்ட் ஆப் மவுத் மூலமே இதுவரை எங்களுக்கு 10,000க்கும் மேற்பட்ட கஸ்டமர்கள் கிடைத்துள்ளனர், என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கிருத்திகா.

தற்போது https://tvishi.shop/ என்ற தங்களது சொந்த இணையதளம் மூலமாகவும், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்கள் மூலமாகவும், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளப் பக்கங்கள் மூலமாகவுமே ஆர்டர்கள் பெற்று, பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் தங்களுக்கென பிரத்யேக கடைகள் அமைக்க வேண்டும், மேலும் பலருக்கு தங்களது பொருட்கள் சென்று சேர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் கிருத்திகா.