ரூ.3.15 கோடி மதிப்பு மாம்பழங்களை விற்பனை செய்த நிறுவனம் நடத்தும் சென்னை தம்பதி!
அமெரிக்காவில் இருந்து திரும்பி தம்பதிகள் தொடங்கிய 'MangoPoint' நிறுவனம் இயற்கையாக பழுக்கவைக்கும் பலவித மாம்பழங்களை ஏற்றுமதி மற்றும் ரீடெயில் மூலம் விற்பனை செய்கின்றனர்.
கோவிட் இல்லாமல் ஒரு கட்டுரை எழுத நினைத்தாலும் முடியவில்லை. ஒவ்வொரு வெற்றி அல்லது திருப்புமுனைக்கு கோவிட் காரணமாக இருக்கிறது. ’
' வெற்றிக்கு கோவிட்டும் முக்கியப் பங்காற்றி இருக்கிறது.’மேங்கோ பாயிண்ட்’ என்பது மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் சென்னை நிறுவனம். திருவள்ளூர் அருகே ஒரு ஆலை அமைத்து அங்கு பழங்களை வரிசைபடுத்தி ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். இரண்டு ஏற்றுமதி நடந்த பிறகு மூன்றாவது ஏற்றுமதிக்கான பழங்கள் தயாரான சூழலில் லாக்டவுன் வந்தது. விமானங்கள் கூட செயல்படவில்லை. 2,000 கிலோ மாம்பழங்கள் கையில் தேங்கின. அதிகபட்சம் சில நாட்கள் வைத்திருக்க முடியும். அதற்குள் விமான சேவை தொடங்க வாய்ப்பு இல்லை என்னும் சூழல்.
என்ன செய்யலாம் என யோசித்த பிறகு, ஏற்றுமதிக்கு வைத்திருக்கும் பழங்களை இங்கேயே விற்கலாம் என தோன்றவே, ஓஎம்.ஆர் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நண்பர்கள் உதவியுடன் விற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். ஏற்றுமதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாம்பழங்கள் என்பதால் சந்தை விலையை விட கூடுதல் விலைதான். இருந்தாலும் தரம் நன்றாக இருந்தால் விற்கும் என்னும் நம்பிக்கையில் ஓஎம்.ஆர் சாலையில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்கிறார்கள்.
சுமார் 4 மணி நேரத்தில் 2,000 கிலோ மாம்பழங்கள் விற்பனையாகியது. அதன் பிறகு என்ன? உள்நாட்டிலேயே மாம்பழ விற்பனையில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது.
மேங்கோ பாயிண்ட் பின்னணி
பிரசன்னா வெங்கடரத்தினம் மற்றும் மஞ்சுளா காந்தி ரூபன் இணையர் தொடங்கி நடத்தும் நிறுவனம் 'MangoPoint'. இந்த நிறுவனத்தில் சென்னை ஏஞ்சல்ஸ் , நேட்டிவ் ஏஞ்சல் நெட்வோர்க், கெய்ருட்சு ஆகிய நிறுவனங்கள் இணைந்து 1.82 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றன.
தற்போது ஐரோப்பாவில் மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியும் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. திருவள்ளூர் அருகே இருக்கும் ’மேங்கோ பாயின்ட்’ ஆலையில் நிறுவனர்களைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினேன்.
முதலில் மஞ்சுளா பேசத் தொடங்கினார். சொந்த ஊர் வேலூர், அப்பா ராணுவத்தில் பணியாற்றியதால் என்னுடைய பள்ளிப்படிப்பு பல இந்திய நகரங்களில் இருந்தது. ஜம்மு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் படித்தேன். ஆனால், கல்லூரி என வரும்போது தமிழகத்தில்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம்.
ராணிபேட்டை பொறியியல் கல்லூரியில் படித்தேன். படித்து முடித்த பிறகு மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் வேலைபார்த்தேன். பிரசன்னாவுகும் எனக்கும் திருமணம் முடிந்த பிறகு அமெரிக்கா சென்றுவிட்டோம் என தன்னுடைய முன்னுரையை கூறினார்.
பிறகு பேசத் தொடங்கி பிரசன்னா, சென்னையை சுற்றிதான் நான் வளர்ந்தேன். ஜெருசலம் கல்லூரியில் படித்த பிறகு ஏபிஎன் ஆம்ரோ நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். தவிர மாம்பழ வியாபாரமும் செய்துவந்தார்.
அமெரிக்காவுக்குச் சென்ற சில ஆண்டுகளிலே இந்தியாவுக்கு திரும்பிவிட வேண்டும் எனத் திட்டமிட்டோம். இருவரும் வேலைக்கு செல்வதால் பண ரீதியிலான சிக்கல் இல்லை. ஆனால், இந்தியா வர வேண்டும் முடிவெடுத்தாலும் எப்போது வருவது என்பது முடிவாகவில்லை.
அப்போது திடீரென என் சகோதரிக்கு உடல் நிலையில் சரியில்லை. (இப்போது அவர் நன்றாக இருக்கிறார்) உடனே இந்தியாவுக்கு வரலாம் எனத் திட்டமிட்டால் பல விஷயங்களை சார்ந்தே முடிவெடுக்க வேண்டி இருக்கிறது.
அதற்கு முன்பாகவும் இந்தியா வரவேண்டும் எனத் திட்டமிட்டாலும் இது உடனடி காரணமாக மாறியது. 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தோம்.
எளிதான முடிவா?
இந்தியாவுக்கு திரும்பலாம் எனச் சொல்வது எளிதாக இருந்தாலும் செய்வது எளிதல்ல. முதலில் நண்பர்கள் உறவினர்களை சமாளிக்க வேண்டும். அவர்களுக்கு புரிய வைத்தோம். அதனைத் தாண்டியும் பல ரூமர்கள் எங்களைச் சுற்றி இருந்தன.
“எங்களுக்கு வேலை போய்விட்டது, எங்களது விசா முடிந்துவிட்டது என பல கதைகள் எங்களை சுற்றின. ஆனால் அதிர்ஷடவசமாக நாங்கள் இருவரும் வேலை செய்யும் நிறுவனத்துக்கு இந்தியாவில் கிளை இருந்தது என்பதால் இந்தியாவில் இருந்து வேலை செய்தோம். ஒர் ஆண்டுக்கு பிறகு தேவைப்பட்டால் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லலாம் என நிறுவனம் அறிவித்தது. ஆனால் அதற்குத் தேவை ஏற்படவில்லை,” என பிரசன்ன முடித்தார்.
மாம்பழ ஐடியா?
மாம்பழ ஏற்றுமதிக்கான ஐடியா எப்படி உருவானது என்னும் கேள்விக்கு பிரசன்னா தொடர்ந்தார். அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்தில் புராஜக்ட் மேனேஜராக பணியாற்றினேன். அப்போதுதான் pack house என்பது குறித்து எனக்கு தெரியவந்தது. 2012ம் ஆண்டுதான் வால்மார்ட் காய்கறிகள் மற்றும் பழங்கள் பிரிவை கொண்டுவந்தார்கள்.
வால்மார்ட் நிறுவனம் பாக் ஹவுஸ் இருக்கும் நிறுவனங்களிடம் மட்டுமே காய்கறிகள் பழங்களை வாங்கும். கோல்ட் ஸ்டோர் என்பது பதப்படுத்துவது. பாக் ஹவுஸ் என்பது காய்கறிகள் மற்றும் பழங்களை வகைபடுத்தி, சுத்தம் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது.
”இந்தியாவில் பேக் ஹவுஸ் எனத் தேடினால் சுமார் 200 என்னும் அளவிலே மட்டுமே உள்ளன. மாம்பழங்களுக்கு என எடுத்துக்கொண்டால் எங்களையும் சேர்த்து 3 என்னும் அளவில் மட்டுமே பேக் ஹவுஸ் இந்தியாவில் உள்ளன. அதனால் எங்களுடைய ஐடியா இந்தியாவில் பேக் ஹவுஸ் தொடங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்பதுதான் திட்டம். அப்பா மாம்பழங்களை விற்பனை செய்துவந்ததால் அதிலேயே செய்யலாம் என முடிவெடுத்தோம்.”
சர்வதேச அளவில் மாம்பழ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சுமார் 40 சதவீதம். இந்தியாவில் தென் இந்தியாவின் பங்கு என்பது 30 சதவீதம். கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், தெற்கு ஆந்திரா, கர்நாடாகவின் சில பகுதிகள் என்பது முழுவதும் மாம்பழங்கள்தான்.
”நியூசிலாந்தை எடுத்தால் கிவி என்பது பிரபலம். இதுபோல ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு பழங்களை கணிசமாக ஏற்றுமதி செய்கிறது. ஆனால், நம்மிடையே பல வகையான மாம்பழங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் கிடைப்பது சில வகையான மாம்பழங்கள்தான். அதனால் இந்தியாவில் இருந்து மாம்பழங்களை ஏற்றுமதி செய்யலாம் என தொடங்கியதுதான் ’மாங்கோ பாயிண்ட்.’”
கோவிட் லாக்டவுன் தாக்கம்
2018-ம் ஆண்டு இந்தியா வந்து, எங்களுடைய சொந்த இடத்தில் பேக் ஹவுஸ் தொடங்கினோம். இரு ஷிப்மெண்ட்கள் ஏற்றுமதி செய்த பிறகுதான் கோவிட் தொடங்கியது. அப்போதுதான் ரீடெய்ல் குறித்து சிந்திக்கத் தொடங்கினோம். நாங்கள் அப்போது சில வாடிக்கையாளர்களிடம் பேசினோம். இரு வகையான வாடிக்கையாளர்கள் இருப்பது எங்களுக்குப் புரிந்தது.
“முதலாவது செயற்கையாக பழுக்க வைப்பதால் மாம்பழம் சாப்பிடுவதையே தவிர்க்கும் மக்கள். இரண்டாவது இது செயற்கையாக பழுக்க வைக்கபப்ட்டதுதான். வேறு வழியில்லை, சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக குறைவாக எடுத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது புரிந்தது. அதனால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை ஏன் விற்பனை செய்யக் கூடாது என முடிவு செய்தோம்,” என பிரசன்னா கூறினார்.
ஏன் செயற்கையாக பழுக்க வைக்க வேண்டும், அதற்கான தேவை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினோம். விவசாயக் குடும்பம் என்பதால் இதில் உள்ள சிக்கல் எங்களுக்கு புரியும்.
சில ஏக்கரில் மாம்பழம் பயிர்செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். முதலில் பழங்களை சேகரிப்பது ஒரு வேலை, அடுத்தது அந்த பழங்களை ஒரே இடத்தில் கொட்டி, பராமரிக்க வேண்டும். வெயில், மழையிலே பழங்கள் இருக்க வேண்டிய சூழல் இருக்கும். என்னதான் கவர் போட்டு மூடியிருந்தாலும் சேதாரம் இருக்கும். இவை அனைத்தையும் தவிர்க்க, பழங்களை பறித்தவுடன் விற்பனை செய்வதுதான் முக்கியமான திட்டமாக இருக்கும்.
இந்த இடத்தில்தான் எங்களால் பலம் சேர்க்க முடியும் எனக் கருதுகிறோம். பழங்களை சரியாக பரமாரித்து பாதுகாத்தால்போதும், செயற்கையாக பழுக்க வைக்காமல் சரியான நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். ஆரம்பத்தில் விவசாயிகள் தயங்கினார்கள். ஆனால் தற்போது அவர்களே எங்களிடம் பழங்களைக் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார்கள்.
நிதி சார்ந்த தகவல்கள்
இந்த பேக் ஹவுஸ் எங்களுடைய சொந்த இடம். இதுதவிர சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறோம். அரசு சில லட்ச ரூபாய் மானியம் வழங்கி இருக்கிறது.
“2021ம் நிதி ஆண்டில் சுமார் 1.75 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்தோம். கடந்த நிதி ஆண்டில் 3.15 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்தோம். நடப்பு நிதி ஆண்டில் சுமார் 8 கோடி அளவுக்கு வருமானம் நிர்ணயம் செய்திருக்கிறோம்,” என்றார் பிரசன்னா.
விரிவாக்கத்துக்கு முதலீடு தேவை என்பதால் சென்னை ஏஞ்சல், கெய்ரூட்சு மற்றும் நேட்டீவ் ஏஞ்சல் ஆகிய அமைப்புகளில் இருந்து 1.82 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றிருக்கிறோம்.
நாங்கள் நேரடியாகவும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். இதர ரீடெய்ல் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறோம். மாம்பழம் இருக்கும் காலத்தில் மாம்பழங்களுக்கான பேக் ஹவுஸ் ஆக இது செயல்படும். இதர காலங்களை காய்கறி மற்றும் பழங்களை விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யும் பேக் ஹவுஸ் ஆக இது இருக்கும்.
”இதுதவிர மாம்பழங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை (ஜாம், சாஸ் உள்ளிட்டவை) தயார் செய்கிறோம்,” என பிரசன்னா தெரிவித்தார்.
கணவன் மனைவியாக இருப்பதால் தொழில் நடத்துவதில் சிக்கல் எதாவது இருக்கிறதா என்னும் கேள்விக்கு, நிறுவனத்தின் செயல்பாட்டினை நான் பார்த்துக்கொள்கிறேன், இதர நிதி சார்ந்த விஷயங்களை பிரசன்னா பார்த்துக்கொள்கிறார். குடும்பவிழாக்களுக்கு ஒன்றாக செல்ல முடியாது என்பதை தவிர வேறு சிக்கல் இல்லை என மஞ்சுளா முடித்தார்.