PAN 2.0 என்றால் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? - YS தமிழ் Explainer!
பான் கார்ட் பயன்பாட்டை எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் வகையில் (Pan 2.0) திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
நிரந்தர கணக்கு எண் எனப்படும் PAN (பான் கார்ட்) குறித்து அனைவரும் அறிவோம். இந்தியாவில் தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களின் நிதி சார்ந்த அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது பான் எண்.
இந்த சூழலில் பான் கார்ட் பயன்பாட்டை எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் வகையில் (Pan 2.0) திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பான் கார்டு 2.0 என்றால் என்ன?
பெரும்பாலும் வங்கிக் கணக்கு தொடங்க, வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்ட் அவசியம் என்றிருந்த சூழல் தற்போது மாறியுள்ளது. ‘ஆதார் - பான்’ இணைப்பு, அதிக நிதி சார்ந்த பயன்பாட்டின் போது பான் எண் தர வேண்டியது அவசியமாகி உள்ளது. இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் பான் கார்டின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக ‘பான் 2.0’ அறியப்படுகிறது.
இதில் நவீன தொழில்நுட்ப அம்சங்களை பான் அமைப்பு கொண்டிருக்கும். மேலும், QR கோடும் பான் கார்டில் இடம்பெற்றிருக்கும். இந்தத் திட்டம் பான் வழங்கும் மற்றும் நிர்வகிக்கும் செயல்முறையை ஒழுங்குப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரூ.1,435 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு இது டிஜிட்டல் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள QR கோடின் துணையுடன் மின்னணு முறையில் இ-பான் கார்டாக டிஜிட்டல் வடிவில் இதை பயன்படுத்தலாம். கையில் பிஸிக்கல் அட்டையாக பான் கார்ட் தேவைப்படுபவர்களும் குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தகவல்.
இதன் பலன்கள் என்ன?
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, நெறிமுறை செய்யப்பட்ட வெரிஃபிகேஷன் முறை, ரியல் டைம் வேலிடேஷன், மோசடிகளை தடுப்பது, ஆதாருடன் பான் இணைப்பு கட்டாயம், சூழல் பாதுகாப்புக்கு உகந்த பேப்பர்லெஸ் முறை.
பான் 2.0 பெற என்னென்ன ஆவணம் தேவை?
- அடையாள சான்று: - ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.
- முகவரி சான்று: பேங்க் ஸ்டேட்மென்ட், வாடகை பத்திரம், மின்சார - எல்பிஜி எரிவாயு - குடிநீர் ரசீது, ஆதார் அட்டை தரலாம்.
- பிறப்பு சான்று: பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பாஸ்போர்ட்.
மேற்கூறிய இந்த அடையாள அட்டைகள் மற்றும் சான்றுகள் அனைத்தும் செல்லுபடியாகும் வகையில் இருக்க வேண்டும். காலாவதி ஆகியிருக்க கூடாது.
பான் 2.0: விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது பான் கார்ட் வைத்துள்ளவர்கள் மற்றும் புதிதாக பான் வேண்டியவர்கள், என அனைவரும் பான் 2.0 பெறுவதற்கான தகுதியை உடையவர்கள். இதற்கு முறையான சான்றுகள் இருந்தால் போதும்.
தற்போது பான் கார்ட் பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்களுடைய பான் கார்ட் வழங்குநர் யார் என்பதை பார்க்க வேண்டும். NSDL மற்றும் UTIITSL ஆகியவை மூலம் இந்தியாவில் பான் வழங்கப்படுகிறது. இந்த விவரம் பான் கார்டின் பின்பக்கம் இடம்பெற்றிருக்கும்.
- NSDL வழங்கிய பான் கார்ட் என்றால் அந்த தளத்துக்கு செல்ல வேண்டும். அதில், பான் ரெக்வெஸ்ட் பக்கத்துக்கு சென்று பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட வேண்டும். தொடர்ந்து உள்ளிட்ட விவரங்கள் சரி என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு ஆறு இலக்க ஓடிபி வரும். இது 10 நிமிடங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
- ஓடிபி-யை உள்ளிட்டதும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- தொடர்ந்து பேமெண்ட் மற்றும் ஃபைனல் சப்மிஷன் மேற்கொள்ள வேண்டும். பான் கார்டை அண்மையில் பெற்றவர்கள் (30 நாட்களுக்குள்) என்றால் e-PAN கார்டை இலவசமாக பெறலாம்.
- அப்படி இல்லாத பட்சத்தில் ரூ.8.26 செலுத்த வேண்டும். இது ஜிஎஸ்டி வரி உடனான தொகையாகும். ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம். 30 நிமிடங்களில் பான் 2.0 PDF வடிவில் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு வரும்.
UTIITSL தளத்தில் பான் 2.0 பெறுவது எப்படி?
UTIITSL தளத்தின் பான் ரெக்வெஸ்ட் பேஜுக்கு செல்ல வேண்டும். அதில் பான் எண், பிறந்த தேதி மற்றும் Captcha-வை உள்ளிட வேண்டும்.
தொடர்ந்து மின்னஞ்சல் முகவரி வருமான வரித்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பயனர்கள் சரிபார்க்க வேண்டும். பதிவு செய்யாமல் இருந்தால் பான் 2.0 திட்டத்தின் கீழ் இலவசமாக அதை அப்டேட் செய்து கொள்ளலாம்.
பின்னர், e-PAN ரெக்வெஸ்ட் கொடுக்க வேண்டும். கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால் ரூ.8.26 செலுத்தி அதை பெறலாம். பான் 2.0 பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் 30 நிமிடங்களில் கிடைக்கும். பான் கார்டை பிஸிக்கல் வடிவில் பெற விரும்பினால் அதற்கு ரூ.50 கட்டணம் செலுத்தி பெறலாம்.
ரூ.3 லட்சம் வரை கடன்; ரூ.50 ஆயிரம் மானியம் - 'கலைஞர் கைவினைத் திட்டம்' இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Edited by Induja Raghunathan