10 நாட்களில் ரூ.10 லட்சம்: மாஸ்க் முதல் கபசுர குடிநீர் வரை விற்கும் தளம்!
5 வருடங்களாக நடத்திவந்த இரு நிறுவனங்கள் லாக்டவுன் காரணமாக செயல்படமுடியாத சூழலில் தற்போதைய தேவைக்கான தொழிலை கண்டறிந்தார் தொழில்முனைவர் முகேஷ்.
கொரோனா வைரஸ்: இது 2019ல் சீனாவில் தொடங்கியிருந்தாலும், 2020ல் தான் அது நம்மை தாக்கத் தொடங்கியது. இந்த வைரஸ் நம் வாழ்க்கையை மட்டுமல்ல நம் வாழ்வாதாரத்தையே குலைக்கும் பேரழிவாக மாறியது.
வேகமாக பரவும் தன்மையைக் கொண்ட கொரோனா தொற்றால் உலகம் முடங்கியது. இந்தியா போன்ற அதிகம் மக்கள்தொகை கொண்ட நாட்டை ஊரடங்கில் ஆழ்த்தினால் என்ன ஆகும் என்று நாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத விளைவுகளை ஏற்படுத்தியது. ஸ்டார்ட்-அப்’ஸ், சிறு, குறு மற்றும் மத்திய நிறுவனங்கள் மற்றும் அதனை நம்பி வாழும் நிறுவனர்களும், ஊழியர்களும் தொழிலை நடத்தமுடியாமல் பெரும் சவாலுக்குள் தள்ளப்பட்டனர். அதில் ஒரு சிலர் மட்டுமே மாற்றுவழி கண்டு தொழில் நஷ்டத்தை ஈடு செய்ய விடை கண்டனர்.
அப்படிப்பட்ட ஒரு தொழில்முனைவர் தான் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட முகேஷ் கன்னா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வந்த இரு நிறுவனங்களும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது முதல் முடங்கிப் போனது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இவரது நிறுவனம் செயல்படும் இரு துறைகளும் மீண்டும் செயல்படுவது கேள்விக்குறியே என புரிந்து கொண்ட அவர், சில நாட்கள் சிந்தனைக்குப் பின் தற்போதுள்ள சூழலுக்கேற்ற தொழிலை தொடங்குவதே, சரிந்து விழுந்த அவரது தொழில்களுக்கு மாற்று என முடிவெடுத்தார்.
தொழில்முனைவர் முகேஷ் கன்னா, சென்னையில் குடியேறி, Edu2020, Travel2020 என்ற இரு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தார். கல்லூரி மாணவர்களை துறைக்கேற்ப தொழிற்சாலைகள் அழைத்துச் சென்று பயிற்சி அளித்தல், வருங்கால வாய்ப்புகள் பற்றி வகுப்புகள் எடுத்தல் என பல முன்னணி கல்லூரிகளுடன் இணைந்து செயல்பட்டுவந்தார். Travel2020; ஹாலிடே பேக்கேஜ், ஹனிமூன் பேக்கேஜ் என பயணங்கள், தாய்லாந்து, சிங்கபூர், பாங்காக் என டூரிஸ்ட் இடங்களில் புக்கிங் செய்து கொடுக்கும் நிறுவனம் ஆகும்.
கொரோனா அதுதானே இன்னும் ஒரு சில ஆண்டுகள் நம்மை ஆட்டிப்படைக்க இருக்கிறது. இதைத் தடுக்க, பாதுகாப்போடு இருக்கத் தேவையான பொருட்களுக்கு இன்னும் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தேவை அதிகம் இருப்பதை உணர்ந்த முகேஷ், அப்பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் தளத்தை தொடங்க ஆயத்தமானார்.
“நான் நடத்தி வந்த edu2020 கல்லூரிகள் மூடப்பட்டத்தால் செயல்படமுடியாது போனது. அதேபோல் Travel2020; விமானங்கள் ரத்து, மற்றும் டூரிஸ்ட் இடங்கள் மூடப்பட்டதால் மார்ச் தொடக்கம் முதலே பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கியது. ஏற்கனவே புக் செய்தவர்களும் ட்ரிப்பை கேன்சல் செய்து பணத்தை திரும்பப் பெற்றனர். இதனால் பிசினஸ் இல்லாமல் மார்ச் மாதம் முதலே கடும் நெருக்கடிக்கு உள்ளானேன்,” என்றார் முகேஷ்.
பயண ஏற்பாடு நிறுவனங்களைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு தொடங்கிய ஆரம்பக் கட்டதிலேயே அடிவாங்கத் துவங்கிய துறை ஆகிவிட்டது. அதே போல் கடைசியாக மீண்டு வரப்போகும் துறையாகவும் தற்போது இருக்கிறது. இன்னும் 6-8 மாதங்களுக்கு இத்துறை செயல்படமுடியாது என்ற சூழல் இவரை குழப்பத்தில் ஆழ்த்தியது.
“சரி பிரச்சனை வந்துவிட்டது, இதை எப்படி வாய்ப்பாக மாற்றுவது என சிந்தித்தேன். எங்களுக்கு இருந்த தொடர்புகளே எங்களின் பலம். ஏற்கனவே நடத்தி வந்த நிறுவனம் மூலம் பெரிய தொழிற்சாலைகள், கல்லூரி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களின் தற்போதைய தேவையை அறிந்து தொழில் செய்ய முடிவு எடுத்தேன்,” என்றார் முகேஷ்.
கோவிட்-19 முடிய எத்தனை மாதங்கள் ஆகும் என தெரியாத நிலையில் இனி அதோடு வாழ்வதே சிறந்தது என வல்லுனர்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர். அதனால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க தற்போதைய தேவை; முகக் கவசம்.
எல்லா தொற்சாலைகளும் ஊரடங்கு முடிந்து திறக்க ஆரம்பித்தாலும், தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க மாஸ்க், கையுறை, சானிடைசர் என எல்லாவித முன்னெச்சரிக்கையும் எடுக்க தயாரானார்கள். அதையே வாய்ப்பாக பார்த்தார் முகேஷ்.
ஏப்ரல் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்த முகேஷ், 1 லட்ச ரூபாய் முதலீடு செய்து, திருப்பூரில் உள்ள காட்டன் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுடன் கைக்கோர்த்தார். ஏற்றுமதி இல்லாததால் தேங்கிக் கிடந்த பருத்தித் துணிகள் கொண்டு ‘க்ளாத் மாஸ்க்’ அதாவது பலமுறை பயன்படுத்தக்கூடிய துணி முகக்கவசங்களைத் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்தார்.
“இனி வருங்கால அத்தியாவசியப் பொருளாக முக மாஸ்க் ஆகிவிட்டது. அதனால் என் வாடிக்கையாளர்களான தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு பல்க் ஆர்டர்களில் மாஸ்க் தேவைப்பட்டது. அதை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் தளம் ‘2020Shoppers.com' என்று தொடங்கினேன். 10 நாட்களில் 10 லட்ச ரூபாய் மதிப்பு சேல்ஸ் நடந்தது. மேலும் மாஸ்க் தேவைக்கான ஆர்டர்கள் குவியத்தொடங்கின,” என்கிறார்.
தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், சலூன்கள் என பலரும் இவரின் முக மாஸ்க்குகளுக்கு ஆயிரக்கணக்கில் ஆர்டர் கொடுத்தனர். நேச்சுரல்ஸ் தங்களது 700 சலூன்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் முகக்கவசம் அளிக்க பல்க ஆர்டர் செய்தார்கள். அதோடு கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க மற்ற சில பொருட்களான, கையுறை, சானிடைசர், N95 மாஸ்க், கபசுர குடிநீர், காய்ச்சல் டெஸ்ட் செய்யும் தெர்மாமீட்டர், சானிடைசர் ஸ்டாண்ட் என எல்லாவற்றையும் விற்பனை செய்யுமாறு இவரின் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
"க்ரண்ட்ஃபோஸ், நிப்பான் பெயின்ட், நேச்சுரல்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை லாக்டவுனுக்குப் பின் தொடங்க, பல முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள். அதில் முக்கியமாக தங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி, மாஸ்க், கையுறை, சானிடைசர் என எல்லாவற்றையும் மொத்த அளவில் சப்ளை செய்ய என்னைக் கேட்டனர். அப்போதுதான் முகக்கவசத்தோடு கொரோனா எதிர்ப்புக்குத் தேவையான அனைத்தையும் 2020Shoppers.com தளத்தில் விற்க முடிவெடுத்தேன்,” என்றார் முகேஷ்.
சரி வருங்காலத்தில் கொரோனா தடுப்புப் பொருட்களுக்கு வாய்ப்பும், தேவையும் அதிகம் இருப்பதை உணர்ந்த முகேஷ், ஒவ்வொரு பொருளுக்குமான தயாரிப்பு நிறுவனங்களை கண்டெடுத்து, ஒப்பந்தம் போட்டு தனக்குத் தேவையான ஆர்டர்களை கொடுத்தார். காய்ச்சல் தெர்மாமீட்டர் முதல் கபசுர குடிநீர் வரை அனைத்தையும் விற்பனை செய்யும் இ-காமர்ஸ் தளமாக Shoppers2020- யை ஆக்கினார்.
தளம் தொடங்கிய 15 நாட்களில் 40 ஆயிரம் மாஸ்குகள், 1000 தெர்மாமீட்டர் விற்பனை ஆனதான தெரிவிக்கிறார் முகேஷ்.
மற்ற பொருட்களான சானிடைசர், கபசுர குடிநீர், கையுறைகளும் ஆயிரக்கணக்கில் விற்றுள்ளதாக கூறினார். அதே போல் ப்ராண்டுகளின் பெயர் அச்சிடப்பட்டும் மாஸ்க், கையுறை போன்றவை தயாரித்து தருகிறார்கள்.
“சில நிறுவனங்களுக்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் சில பொருட்களையும் தயாரிப்பாளர்களிடம் பெற்று விற்பனை செய்கிறோம். இதில் நேரடி விற்பனை என்பதால் விலையும் குறைவாகவே இருக்கும். அதிலும் பல்க் ஆர்டர்களுக்கு மொத்த விலையில் அவர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாகப் பொருட்களை டெலிவரி செய்கிறோம். ஆர்டர் செய்து ஓரிரு நாட்களில் டெலிவரி செய்யப்படுவதால் நிறுவனங்கள் உடனடியாக தொடங்கிட சுலபமாக இருந்தது,” என்றார்.
முகேஷ் கன்னா 2020Shoppers தளத்தின் மார்க்கெட்டிங், சேல்ஸ்-ஐ கவனிக்க அவரின் மனைவி தீபிகா தொழில்நுட்பப் பிரிவை பார்த்துக் கொள்கிறார். இந்த ஆன்லைன் தளத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னெடுத்துச் சென்று தேவைக்கு ஏற்ப பொருட்களின் தயாரிப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
“நீங்கள் நம்பிக்கை இழக்காதவரை உங்களுக்கு வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். நம்பிக்கையை இழப்பதுதான் மிகப்பெரிய தோல்வி,” என்று ஜாக் மா சொல்வதுபோல தொழில்முனைவர்கள் தற்போதுள்ள சூழலில் நம்பிக்கை இழக்காமல் முயற்சிப்பதே முக்கியமாகும்...
வலைதள முகவரி: 2020Shoppers.com