லாக்டவுனில் உதித்த ஐடியா: 40 நாட்களில் 6 லட்சம் ஈட்டிய இளைஞர்!

'ஊரடங்கு அறிவிக்கப்பட்டு முதல் மூன்று நாள், நானும் வீட்டில் ஜாலியாக பொழுதை போக்கினேன். ஆனால் நான்காம் நாள் இது இப்படியே தொடர்ந்தால் எனக்கும், என் நிறுவன ஊழியர்களுக்கும் ஆபத்து என்று உணரத் தொடங்கினேன்,’ - தரணீதரன்.

6th May 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா... கொரோனா.. இதைத்தவிர காதுகளில் எதுவும் விழாதது போல் நாட்கள் நகர்கின்றன. மார்ச் 25ம் தேதி நாடு முழுதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. எல்லாரும் அரசு சொன்னதைக் கேட்டு வீட்டில் இருக்கத் தொடங்கினர். ஆனால் இதுவே அடுத்த ஒரு மாதத்துக்கு மேல் தொடரப்போகிறது என்று யாரும் அப்போது நினைக்கவில்லை.


அப்படித்தான் தொழில் புரிபவர்களின் மனநிலையும் இருந்தது. சரி ஒரு சிலநாட்கள் முடக்கம் இருக்கும், பின்னர் மீண்டு எழுந்து விடலாம் என்றே நினைத்தனர். அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவர் தரணீதரன் மனதிலும் நம்பிக்கை இருந்தது.

dharanee

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஊரடங்கு தொடர, அவரின் டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவன செயல்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டதால் அடுத்த என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கத்தொடங்கினார். இது பற்றி தரணீதரன் கூறுகையில்,

“ஊரடங்கு அறிவிக்கப்பட்டு முதல் மூன்று நாள், நானும் எல்லாரையும் போல், வீட்டில் ஜாலியாக, டிவி, நெட்ஃப்ளிக்ஸ், புக்ஸ் படிப்பது என பொழுதை போக்கினேன். ஆனால் நான்காம் நாள் இது இப்படியே தொடர்ந்தால் எனக்கும், என் நிறுவன ஊழியர்களுக்கும் ஆபத்து என்று உணரத் தொடங்கினேன், என்றார்.

‘சோஷியல் ஈகிள்’ எனும் டிஜிட்டல் மார்க்கெடிங் நிறுவனத்தை சென்னையில் நடத்திவரும் தரணீதரன் ஒரு தொடர் தொழில்முனைவர். பொறியியல் பட்டதாரியான இவர், தொடக்கத்தில் ஐடி நிறுவனத்தில் சில வருடம் பணிபுரிந்தார். இருப்பினும் தொழில் முனைவு கனவில் இருந்த அவர் பிசினஸ் குறித்து படித்து புரிந்து கொண்டார். அதில் அனுபவம் பெற சில காலம் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்தார்.


ஓரளவு நம்பிக்கையும், கையில் சேமிப்பும் வந்தவுடன் நண்பர்களுடன் ஒரு நிறுவனம் தொடங்கினார். சில வருடம் அத்தொழிலில் நல்ல லாபம் கிடைத்தும் ஒரு சில காரணங்களால் அதைத் தொடர முடியாததால், தரணீ வேறு புதிய நிறுவனம் தொடங்க முடிவு செய்தார்.


2015ல் ‘சோஷியல் ஈகிள்’ (Social Eagle) என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை 3 பார்ட்-டைம் ஊழியர்களுடன் தொடங்கினார்.

“மார்க்கெட்டிங்கில் அனுபவம் பெற்ற எனக்கு டிஜிட்டலில் அதற்கான நல்ல எதிர்காலம் இருப்பது தெரிந்ததால் இந்நிறுவனத்தைத் தொடங்கினேன். பல பெரிய ப்ராண்டுகள் தங்கள் தயாரிப்பு மற்றும் சேவையை ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்ய முன்வந்தனர். எனக்கும் நல்ல வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்தது,” என்றார்.
தரணீதரன்

ஒரு ப்ளாட்டில் தொடங்கிய நிறுவனம், தற்போது 16 முழு ஊழியர்கள், 32 ஃப்ரீலான்சர்களுடன் ‘ரகுலா டெக்’ பார்கில் கடந்த ஆண்டு முதல் இயங்கத்தொடங்கியது. பெரிய க்ளையன்ட்ஸ், நல்ல டீம் என எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த சமயத்தில் வந்தது கொரோனா ஊரடங்கு.


ஊரடங்கால் எல்லா தொழில்களும் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக ஸ்டார்ட்-அப்’ஸ், சிறு-குறு நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கத்தொடங்கியது. உணவுத்துறை, சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் இயங்க முடியாமல் தவித்தன.

“ஊரடங்கு செல்ல செல்ல ஒருவித பயம் தோன்றியது. எங்களுக்கு வர இருந்த சிங்கப்பூர் மற்றும் இன்னும் சில புதிய ப்ராஜக்டகள் வரவில்லை. பொதுவாக ஸ்டார்ட்-அப்’களால் வருமானத்தில் இருந்துதான் ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியும். வருவாய் நின்றதால், நான் எப்படி என் ஊழியர்களுக்கு ஊதியம் தரப்போகிறேன் என்ற பயம் சூழ்ந்தது.”

சம்பளம் தவிர, அலுவலக வாடகை, இ.எம்.ஐ. என்று இருக்கும் செலவுகளை சமாளிக்கவும் வழி தேட யோசித்தார். சோஷியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் கையிலுள்ள தொடர்புகளே தனது பலம் என புரிந்து கொண்ட தரணீ, இ-லெர்னிங் மூலம் தன் அறிவாற்றலை பிறருக்கு சொல்லித்தர முடிவெடுத்தார்.

“நான் சின்ன ஆய்வு மேற்கொண்டதில் ஆன்லைன் மூலம் கல்விக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று தெரிந்தது. Zoom ஆப் பயன்படுத்தி பலரும் வெபினார் நடத்தத் தொடங்கியதால், நானும் டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோஷியல் மீடியா மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி என்று பல தலைப்புகளில் கோர்ஸ் ரெடி செய்து வகுப்புகள் எடுக்கத் தயாரானேன்,” என்றார்.

தனக்கு நன்கு தெரிந்த தலைப்புகளில் ஒரு வார கோர்ஸ், 15 நாள் வகுப்புகள் என பிரித்து, முதலீடு ஏதும் இன்றி ஆன்லைன் களத்தில் இறங்கினார். தன் நண்பர்கள் வட்டம், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாவில் ஒரு சிறிய விளம்பரமாக இதைப் பற்றி வெளியிட்டதற்கு மக்களிடமிருந்து ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. தொடக்கத்தில் இலவசமாக இவ்வகுப்புகளை எடுத்தார் தரணீ.

“ஜீரோ முதலீடு, 3 மணி நேர செலவு செய்து இத்திட்டத்தை தொடக்கினேன். மக்களும் தற்போது எதாவது கற்றுக்கொள்ள அல்லது காலத்துக்கேற்ப புதிய முயற்சிகள் செய்ய காத்திருப்பதால் என் கோர்சுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.”

இலவச ஆன்லைன் வகுப்புகளை மெல்ல கட்டணம் கொண்ட கோர்சாக மாற்றினார். அதற்கும் மக்களிடையே வரவேற்பு இருந்தது. கற்றலில் பயன் இருந்தால் அதற்கு செலவு செய்ய மக்கள் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். இவர் இந்த வகுப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்குவதால் அவரவருக்கு விருப்ப வெபினார்களில் பதிவு செய்து கொள்கின்றனர்.

dharanee

இனி வரும் நாட்களில் மார்க்கெட்டிங் முதல் விளம்பரம் வரை எல்லாமே டிஜிட்டலில் செய்வது அதிகரிக்கும். எனவே அதற்கான தேவையும் அதிகரிக்கும் என்பதால், சொந்த நிறுவனம் வைத்திருப்பவர்கள் முதல் புதிய ஐடியா கொண்டவர்கள் வரை இவரின் மார்க்கெட்டிங் வகுப்பில் பயிற்சி பெற விருப்பப்படுவதாகக் கூறினார் தரணீதரன்.

"இதுவரை 60 வெபினார்கள் நடத்தி விட்டேன். ரூ.499-ரூ.9999 என கோர்ஸ் மற்றும் தினங்களுக்கு ஏற்ப கட்டணம் வைத்துள்ளேன். கடந்த 40 நாட்களில் சுமார் 6 லட்ச ரூபாய் வருவாய் மற்றும் பலருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடகம் மற்றும் அதில் பயன்படுத்தவேண்டிய டூல்கள் பற்றி பயிற்சி கொடுத்ததில் மன திருப்தி ஏற்பட்டுள்ளது,” என்கிறார் தரணீதரன்.

ஏப்ரல் மாதத்தை பிரச்சனையின்றி கழிக்க உதவிய இந்த புதிய ஐடியாவை தொடர முடிவெடுத்துள்ளார் இவர்.


சரி அடுத்து என்ன? என்று கேட்டபோது, ஒரு பக்கம் சோஷியல் ஈகிள் நிறுவன வாடிக்கையாளர்கள் மீண்டும் வரத்தொடங்கியுள்ளனர். அதே போல் லாக்டவுனில் உதித்த இந்த இ-லெர்னிங் ஐடியாவை, குறைந்தது 10 லட்சம் தமிழர்களுக்கு கற்றுத்தந்து பயிற்சி அளிக்க இரவு-பகலாக கோர்ஸ்கள் ரெடி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த முயற்சியால் என் ஊழியர்களும் என்னைச்சுற்றியுள்ளவர்களும் பலனடைந்ததையே வெற்றியாக நினைக்கிறேன் என்றார் தரணீதரன்.


இவரை தொடர்பு கொள்ள: Dharaneetharan

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close