சென்னையில் இருந்து ரூ.4500 கோடி மதிப்பு ஃபின்டெக் நிறுவனம்: மூன்று இளைஞர்களின் அசாத்திய வெற்றிக்கதை!
2014-ம் ஆண்டு சென்னையில் சுயநிதியில் தொடங்கிய இந்த நிதி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப், இன்று அபார வளர்ச்சி அடைந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சேவை அளிக்கும் 60 கோடி டாலர் மதிப்பு நிறுவனமாக ஆகியுள்ளது.
சென்னை என்பது பலருக்கு ஐடி நிறுவனங்களின் தலைநகரம், சிலருக்கு 'சாஸ்’ நகரம், சிலருக்கு ஆட்டோமொபைல் நகரம் என்று மட்டுமே தெரியும். ஆனால், இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் வளர்ந்துவரும் துறை என்றால் அது ஃபின் டெக்தான்.
Financial technology துறை சென்னையிலும் வேகமாக வளர்ந்து, பல ஃபின் டெக் நிறுவனங்களை உருவாக்கி வெற்றிகரமாக செயல்பட உதவியுள்ளது. அதில், சில நிறுவனங்கள் அமைதியாக மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளன என பலருக்குத்தெரியாது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ‘M2P' எனும் ஃபின்டெக் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 60 கோடி டாலர் (சுமார் ரூ.4500 கோடி) அளவில் இருக்கிறது. விரைவில் யூனிகார்ன் நிலையை எட்ட இருக்கும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரபு தங்களது தொழில் பயணத்தை பகிர்ந்து கொண்டார்.
ஃபின்டெக் துறை குறித்தும், நிறுவனம் வளர்ந்து வருவது, அடுத்தக்கட்ட திட்டம் என பல விஷயங்களின் தொகுப்பு இதோ.
ஆரம்பகாலம்
சென்னையைச் சேர்ந்த பிரபு ரங்கராஜன், தன்னுடைய அண்ணன் மதுசூதனன் மற்றும் அவரின் நண்பர் முத்துகுமார் ஆகிய அனைவரும் பேமெண்ட் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்கள். அவர்கள் விசா கார்டு நிறுவனத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். பிரபு, டெக்னாலஜி துறையில் இருந்தவர்.
“ஒரு நாள் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அதனை என் அண்ணாவிடம் சொன்னபோது அவரும் முத்துவும் சொன்ன வேறு ஒரு ஐடியாதான் இந்த ஃபின் டெக் நிறுவனம். 2014-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது நிதி தொழில்நுட்பத் துறையில் பெரிய வாய்ப்புகளே இல்லை, அத்துறையில் இருந்ததால் அதில் ஒரு பிரச்சினையை கண்டுபிடித்திருந்தோம். அதற்கான தீர்வினை உருவாக்கினோம்.”
தங்கத்துக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்கள் பல இருந்தன. அவர்களுக்கு முக்கியப் பிரச்சினை பணத்தை கையாளுவதுதான். ஒருவர் தங்கம் அடமானம் வைக்கிறார் என்றால் அவருக்கு ரொக்கமாகக் கொடுக்கலாம், இதைதான் வாடிக்கையாளர்களும் விரும்புவார்கள். அப்படி, ரொக்கமாகக் கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு தொகையை வைத்திருக்க வேண்டும் என்பதை கணக்கிட முடியாது. ஒரு நாளைக்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள் வருவார்கள், எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதெல்லாம் வரும் வாடிக்கையாளர்களை பொறுத்தது.
ஒரு வேளை கிளையில் பணம் இல்லை என்றால், செக் அல்லது டிடி கொடுக்கலாம். ஆனால், இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது அல்ல. அவசரத் தேவைக்காக வருபவர்களுக்கு இதனால் கூடுதல் நேரம் விரயம் ஆகும். ஒரு வேளை டிடி அல்லது செக் கொடுத்தால் வேறு நிறுவனங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.
”தங்கம் மீது கடன் கொடுக்கும் நிறுவனங்களுக்கு பணத்தை கையாளுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. அதனால் அந்த சிக்கலை களைவதற்காக நடவடிக்கையை எடுத்தோம்,” என்று விளக்கினார் பிரபு.
டிசிபி வங்கியுடன் இணைந்து பிரீபெய்ட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலை எங்களால் தீர்க்க முடிந்தது. ஐஐஎப்எல் நிறுவனம் டிசிபி வங்கியில் நடப்பு கணக்கு தொடங்கிவிடும். அந்த வங்கியில் இருந்து போதுமான பிரீபெய்ட் கார்டு வாங்கிக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்கம் மீது கடன் வாங்க வருகிறார் என்றால், கேஒய்சி முழுவதும் கடன் கொடுக்கும் நிறுவனத்தை சார்ந்தது என்பதால் வங்கிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
தேவைக்கு ஏற்ற பணத்தை பிரீபெய்ட் கார்டில் நிரப்பு கொடுத்துவிடும். எந்த தரப்புக்கும் சிக்கல் இல்லை. இதற்கான பின்னணியில் உள்ள சாப்ட்வேரை ஆரம்பத்தில் எழுதினோம். முதலில் மும்பையில் உள்ள சில கிளைகளில் மட்டுமே இந்த வேலையை செய்தோம். அதன் பிறகு பெரும்பாலான கிளைகளில் விரிவுப் படுத்தினோம்.
இந்த நிலையில் இதற்கான பின்னணி டெக்னாலஜி மட்டுமே எங்களுடையது. பிரீபெய்ட் கார்டை வேறு நிறுவனத்திடம் வாங்கினோம். அதன் பிறகு நாங்களே கார்டுகளை வினியோகம் செய்யத் தொடங்கினோம். கிரெடிட் கார்டு, பிரீபெய்ட் கார்டு, டிராவல் கார்டு உள்ளிட்ட பல சேவைகளை நாட்டில் உள்ள முக்கியமான வங்கிகளுக்கு வழங்கி வருகிறோம்.
பை நவ் பே லேட்டர்
கார்டு மூலமான சேவைதான் எங்களுக்கு பிரதானம் என்றாலும் தற்போது ’பை நவ் பே லேட்டர்’ வளர்ந்து வரும் பிரிவாக இருக்கிறது. இதில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஒரு வாடிக்கையாளர்கள் பொருள் அல்லது சேவையை பெரும் இடத்தில் இதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும். அப்போதுதான், ‘பை நவ் பே லேட்டர்’ பெரிய வளர்ச்சி அடையும்.
உதாரணத்துகு ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ஷோரூம் அல்லது இ-காமர்ஸ் தளத்தில் பொருள் வாங்கும்போது பணம் செலுத்தும் சமயத்தில் பணத்தை பிரித்து கொடுத்தால் உங்களுக்கு நல்லது என்றால் வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள். கிரெடிட் கார்ட், நெட்பேங்கிங், வவுச்சர் என பல வசதிகள் இருக்கும்போது பை நவ் பே லேட்டர் என்பதையும் ஒரு பிரிவாக வழங்கி வருகிறோம்.
இந்தப் பிரிவு வளர வேண்டும் என்றால் பொருட்களை விற்கும் தளங்களும் இருக்க வேண்டும், கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை (என்.பி.எப்.சி) அதிக அளவுக்கு இணைக்க வேண்டும். அப்போதுதான் buy now pay later பெரிய வெற்றி அடையும். இப்போது, 12 என்.பி.எப்.சி.களையும் 40க்கும் மேற்பட்ட ஸ்டோர்களையும் மற்றும் இ-காமர்ஸ் தளங்களை இணைத்திருக்கிறோம், என்றார் பிரபு.
நிதி சார்ந்த தகவல்கள்
2014ம் ஆண்டு துவங்கப்பட்ட ‘M2P’ நிறுவனம், 2020-ம் ஆண்டு வரை இவர்களுடைய சொந்த நிதியிலே செயல்பட்டு வளர்ந்துள்ளது.
“நாங்கள் மூவரும் கணிசமான தொகையை முதலீடு செய்தோம். சந்தையில் வரவேற்பு கிடைக்கும் வரை நாங்கள் சம்பளமும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 10 கோடி ரூபாய் நிதி திரட்டினோம்.
அம்ரிஷ் ராவ் மற்றும் க்ரெட் நிறுவனர் குனால் ஷா மற்றும் வேறு சில முதலீட்டாளர்களிடம் இருந்து 10 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டினோம். அதன் பிறகு, 2020ம் ஆண்டே சீரிஸ் ஏ முதலீட்டை பெற்றோம்.
2021-ம் ஆண்டு சீரிஸ் பி முதலீட்டை பெற்றோம். 2022 ஆண்டு சீரியஸ் சி முதலீட்டை பெற்றோம். இன்சைட் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல், ஒமிடியார் நெட்வொர்க் உள்ளிட்ட பல நிறுவனங்கள் எங்களுடைய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
”எங்கள் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 60 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக மூன்று மடங்கு அளவு வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இடையில் இரு நிறுவனங்களை கையகப்படுத்தினோம். 2020-ம் ஆண்டுக்கு முன்பாக பணியாளர்களின் எண்ணிக்கை 100க்குள்ளாக மட்டுமே இருந்தது. தற்போது 650 ஊழியர்கள் உள்ளனர்,” என்றார் பிரபு.
எதற்கு நிதி
நடப்பு நிதி ஆண்டில் அதிக பணியாளர்களை எடுத்திருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளுக்கு என்ன தேவையோ அதற்குத் தேவையான ஊழியர்களை தற்போது பணியமர்த்தி உள்ளோம். அதனால், பணியாளர்களுக்கு அதிகம் செலவாகும். திறமையான பணியாளர்கள் தேவை என்பதால் கூடுதல் சம்பளத்தில் பணியமர்த்தி இருக்கிறோம்.
சென்னை, மும்பை தவிர சர்வதேச செயல்பாட்டுக்காக அபுதாபியில் கிளை தொடங்கி இருக்கிறோம். வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்வதற்கு பெரும் தொகை தேவைப்படும். அபுதாபி தவிர, நேபாளம், பிலிபைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் எங்களுகான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
அடுத்த கட்டம்?
சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்வதுதான் எங்களுடைய அடுத்தகட்ட இலக்கு. 2018-ம் ஆண்டு சமயத்தில் நாங்கள் கவனம் செலுத்திய வேலைக்கு தற்போது வருமானம் வந்துகொண்டிருக்கிறது. அதுபோல, தற்போது நாங்கள் செய்யும் வேலைக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ரிசல்ட் தெரியும், என பிரபு ரங்கராஜன் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் நடந்திருக்கும் வளர்ச்சியை பார்த்தால், சென்னையில் உருவாகும் அடுத்த யூனிகார்ன் நிறுவனமாக நீங்கள் வர வாய்ப்புள்ளதா எனக் கேட்டதற்கு,
“எங்களுக்கு வளர்ச்சிதான் முக்கியம். யூனிகார்ன் ஸ்டேடஸ் என்பது அதனுடைய துணை புராடக்ட்தான். அதற்காக யூனிகார்னை மரியாதை குறைவாகவோ அல்லது அதற்காக சந்தோஷப்பட மாட்டோம் என்பதோ அர்த்தம் அல்ல. யூனிகார்ன் ஆன பிறகும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன, ‘என தன்னடக்கத்துடன் பகிர்ந்தார் பிரபு.
ஃபின் டெக் துறைக்காக tether என்னும் கம்யூனிட்டியை உருவாக்கி இருக்கிறோம். ஃபின் டெக் தொடர்பாக நிகழ்ச்சிகள், அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம். இது தவிர வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்கிறோம்.
நாங்கள் மூவரும் சேர்ந்து 30-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்திருப்போம். இதில் முதலீட்டை விட அனுபவமே முக்கியம். எங்களுடைய அனுபவம் அவர்களுக்கு எப்படி பயன் அளிக்கிறது என்பதுதான் முக்கியம் என பிரபு நம்மிடம் கூறினார்.
அடுத்த சில ஆண்டுகளில் ஃபின் டெக் துறையின் முக்கிய நிறுவனமாக எம்2பி இருக்கக்கூடும் என்பதில் சந்தேமேயில்லை.