வீட்டு அலங்காரத்தை மெய்நிகரில் பார்த்து தேர்வு செய்ய உதவும் சென்னை ஸ்டார்ட்-அப்!
2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Pixel and Mortar அறைகளில் 3டி வடிவில் அலங்காரப் பொருட்களை காட்சிப்படுத்திப் பார்த்து அதற்கேற்ப தேர்வுசெய்ய உதவுகிறது.
நம் வீட்டையோ அலுவலக இடத்தையோ நாம் அவ்வப்போது அழகுப்படுத்த விரும்புவோம். இதை செய்வதற்கு முன்பு நம் மனதில் நிறைய கேள்விகள் எழும். எந்த மாதிரியான ஃபர்னிச்சர் வாங்கலாம்? எந்த நிறம் நம் இடத்திற்கு ஏற்றதாக இருக்கும்? இதுபோன்ற கேள்விகளை நாம் நமக்குள்ளே கேட்டுக்கொள்வோம். இந்த நிறத்தில் இப்படிப்பட்ட ஃபர்னிச்சரை இந்த இடத்தில் போட்டால் அழகாக இருக்குமா என்று கற்பனை செய்து பார்ப்போம். ஆனால், எல்லா நேரங்களில் நாம் கற்பனை செய்தபடி அமைந்துவிடுவதில்லை.
இந்தப் பகுதியில் தீர்வளிக்கிறது சென்னையைச் சேர்ந்த Pixel and Mortar ஸ்டார்ட் அப். ஆக்மெண்டட் ரியாலிட்டி தளம் மூலம் பயனர்கள் உட்புற அலங்காரங்களைக் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது.
Pixel and Mortar ஸ்டார்ட் அப்பை சித்தார்த் சந்திரசேகர் 2020ம் ஆண்டு நிறுவியுள்ளார். பயனர்கள் நிஜ உலகையும் டிஜிட்டல் உலகையும் இணைத்துப்பார்க்க இந்தத் தளம் உதவுகிறது. தேர்ந்த உட்புற வடிவமைப்பாளர்கள் மூட் போர்ட் உருவாக்குகின்றனர். பயனர்களின் தேவைக்கு ஏற்ப ஃபர்னிச்சர், விரிப்புகள், வால்பேப்பர், விளக்குகள் போன்ற அலங்காரப் பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பயனர்கள் தங்கள் அறையில் அலங்காரப் பொருட்கள் எப்படி காட்சியளிக்கும் என்பதை 3டி வடிவில் பார்க்கமுடியும். அப்படிப் பார்த்து பொருத்தமானவற்றைத் தேர்வு செய்யலாம்.
2022ம் ஆண்டில் இந்தத் தளம் முழுமையான செயல்பாட்டில் இருக்கும் என சித்தார்த் தெரிவிக்கிறார். இந்தத் தளம் வழியாக தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஃபர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார பிராண்டுகள் கையொப்பமிட்டுள்ளன.
ஆரம்பகட்டப் பயணம்
சித்தார்த்திற்கு கலை, காட்சிகள் போன்றவற்றில் எப்போதும் ஆர்வம் உண்டு. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் திரைத்துறையில் அனுபவமுள்ள இவர், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை விளம்பரப்படுத்தியிருக்கிறார். தென்னிந்திய திரைப்படம் ஒன்றை இயக்கிய அனுபவமும் இவருக்கு உண்டு.
1997ம் ஆண்டு இவர் Mitrra Media என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிராடக்ட் சார்ந்த டிசைன் சேவைகளை வழங்கும் டிசைன் ஏஜென்சியாக செயல்படுகிறது.
2013ம் ஆண்டு Pencil and Monk என்கிற நிறுவனத்தை நிறுவினார். பட்ஜெட் வீடுகள் முதல் ஆடம்பர விருந்தோம்பல் பிராஜெக்ட் வரை கவனம் செலுத்தும் உட்புற வடிவமைப்பு நிறுவனமாக இது செயல்படுகிறது.
”நிறைய வீடுகளில் பிராஜெக்ட் செய்த அனுபவம் கிடைத்தது. இந்தப் பிரிவில் வாய்ப்புகள் அதிகமிருப்பதும் அதேசமயம் செலவு அதிகம் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. ஒருவர் எப்படி அழகுப்படுத்துவது என கற்பனை செய்துபார்க்க முடியும். ஆனால், அதை வார்த்தைகளைக் கொண்டு விவரிக்க முடியாது. இதனால் மக்களால் தங்கள் தேவைகளை உணர்த்த முடியவில்லை. எனவே அவர்களது தேவைகளை அவர்களது கண்ணோட்டத்தில் இருந்து புரிந்துகொண்டு தீர்வு வழங்க முடிவு செய்தோம்,” என்கிறார் சித்தார்த்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவர்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர். வீடே பள்ளியாகவும் அலுவலகமாகவும் மாறிவிட்டது. இதனால் வீட்டின் உட்புற வடிவமைப்பிற்கான தேவை அதிகரித்தது. இருப்பினும் மொத்தமாக வீட்டைப் புதுப்பிப்பதில் செலவு அதிகம். எனவே வீடு முழுவதும் புதுப்பிக்காமல் அறையை மட்டும் டிசைன் செய்துகொள்ளும் புதிய தீர்வு உருவானது.
ஆக்மெண்டட் ரியாலிட்டி
ஒரு பிராஜெக்டில் ஈடுபடும்போது டிசைனர் ஒருவர் ஃபர்னிச்சரைத் தேடி சிறந்ததைத் தேர்வு செய்து சாஃப்ட்வேரில் இடுவார். அதன் பிறகு டிசைன் லே-அவுட் உருவாக்கி விலை பற்றிய விவரங்களை பதிவிடுவார். இந்த ஒட்டுமொத்த செயல்முறைக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த ஒட்டுமொத்த செயல்முறையை முடிப்பதற்கு டிசைனர் எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைக்கவேண்டும் என்பதே திட்டம். இதனால் செலவும் குறையும். மேலும், ஏராளமான ஃபர்னிச்சர் வகைகள் கிடைப்பதால் எது நம் இடத்திற்கு ஏற்றதாக இருக்கும் எனத் தீர்மானிப்பது மிகப்பெரிய சவால்.
Pixel and Mortar குழுவினர் ஏஆர் பயன்படுத்தி ஒரு தளத்தை உருவாக்குகின்றனர். ஃபர்னிச்சர், கார்பெட், பெயிண்ட், அலங்காரம் போன்றவை அறையில் எப்படி காட்சியளிக்கும் என்பதை 3டி வடிவில் பயனருக்குக் காட்டிவிடுகிறது. நம் அறைக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதைப் பயனர் தேர்வு செய்துகொள்ள இது உதவுகிறது.
”பெருந்தொற்று பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அதிகரித்துவிட்டன. அலுவலக சந்திப்புகள் ஜூம் காலில் நடக்கிறது. அந்த சமயத்தில் வீட்டை அலங்கரிக்கவேண்டியது அவசியமாகிவிட்டது. அதுமட்டுமின்றி பலர் சொந்த ஊருக்கு சென்று அங்கிருந்து வேலை செய்கின்றனர். இவர்களும் வீட்டை புதுப்பிக்கவேண்டியது அவசியமாகிவிட்டது. எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தேவை அதிகரித்திருக்கின்றன,” என்கிறார்.
புதிய வீடுகள் மட்டுமின்றி ஏற்கெனவே பயன்படுத்தி வரும் அறையை மாற்றியமைத்து தேவைக்கேற்ப புதுப்பிப்பதே Pixel and Mortar திட்டம்.
வருங்காலத் திட்டங்கள்
வணிக மாதிரி பற்றி சித்தார்த் விவரித்தபோது, உட்புற அலங்கார சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். அத்துடன் ஃபர்னிச்சர் மற்றும் டிசைன் வழங்குவோருடன் கமிஷன் அடிப்படையிலும் இந்நிறுவனம் செயல்பட உள்ளது.
“தனிப்பட்ட முறையில் செயல்பட்டு வரும் விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை 3டி முறையில் பயனர்களிடம் காட்டுவதற்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால், Pixel and Mortar நிறுவனத்தின்கீழ் விற்பனையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 3டி மாடலை உருவாக்கி குறிப்பிட்ட அறையில் காட்சிபடுத்துவதால் செலவு குறையும்,” என விவரித்தார்.
இந்தத் தளம் ஏற்கெனவே உருவாக்கபட்டு சோதனைக்கட்டத்தில் இருப்பதாக சித்தார்த் விவரித்தார். டிசைனர்கள் ஏற்கெனவே இணைந்துவிட்ட நிலையில் தளத்தை பயன்படுத்தும் விதம் பற்றி இவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டில் சந்தையில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்டார்ட் அப் ஓராண்டில் 50,000 அறைகளை அலங்கரிக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி அறைகளை அலங்கரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளன.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ரேயா கங்குலி | தமிழில்: ஸ்ரீவித்யா