கடல் மாற்றத்தின் போக்கை ஆய்வு செய்ய உதவும் சென்னை மீனவரின் அனுபவ அறிவு!
சென்னையைச் சேர்ந்த மீனவர் பாளையம் ஏழு ஆண்டுகள் கடலை, அதன் காற்று வீச்சை, நீரோட்டத்தை ஆய்வு செய்திருக்கிறார். அவரது அனுபவ ஆய்வு, முக்கிய தரவு பட்டியலின் அங்கமாகி இருக்கிறது.
“எங்களுக்கு கடல் தான் அம்மா, காற்று அப்பா...” என்கிறார் அண்ணா என்று அண்போடு அழைக்கபப்டும் எஸ்.பாளையம். 60 வயதில் அவர் கடல் பற்றிய கதைகளின் பொக்கிஷமாக திகழ்கிறார்.
சென்னையின் ஆரூர் ஆல்காட் குப்பத்தில், வசிக்கும் மீனவர்கள் பாளையத்தை பலவித தகவல்களுக்காக தொடர்பு கொள்கின்றனர். துணி துவைத்து காய வைக்க இன்றைய தினம் ஏற்றதா?, இன்று காலை காற்று சாதகமாக இருக்குமா?, சில ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல கோலா மீன் வங்கக் கடலில் மீண்டும் அபிரிமிதமாகுமா? போன்ற பல கேள்விகளோடு அவரை அணுகுகின்றனர்.
அண்மையில், சென்னையில் தங்க கடற்கரையில் இருந்து பெசண்ட் நகர் கடற்கரைக்கு கடலில் இருந்து ஒரு பேய் தங்களை பின் தொடர்வதாக அஞ்சிய குடும்பம் அவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டது.
இன்னொரு முறை, அம்மாவசை இரவில் கடலின் மேல்பகுதியில் வெளிச்சத்தை பார்த்து மிரண்டு போன குடும்பம் நள்ளிரவில் அவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. இந்த நிகழ்வு அமானுஷயம் என அவர்கள் அஞ்சினர்.
ஆனால், பாளையத்திற்கு அதை பார்க்காமலே என்ன என்று தெரிந்திருந்தது. இதை உணர்த்த, மணலை அகற்றி அங்கு தோன்றிய தண்ணீரில் வெளிச்சத்தை சுட்டிக்காட்டினார்.
“கடலின் இந்த ஒளியை 'கமரு' என்கிறோம். ஆழ்கடலில் இருந்து மேலே வரும் நீரோட்டத்தால் உண்டாகும் ஒளி இது. இந்த நிகழ்வு குறிப்பிட்ட வகை மீன்கள் மேலே வரச்செய்கிற்அது. நிலவு வந்ததும் இந்த மீன்கள் கடலுக்கு அடியில் சென்றுவிடும்," என்கிறார் பாளையம்.
இந்த வகை மீன்களை எளிதாக வலைவீசி பிடிக்க ஏற்ற தருணம் இது என்கிறார். அறிவியல் நோக்கில் பார்த்தால், ரசாயன ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு வகை பாசியால் இந்த ஒளி உண்டாகிறது.
இந்த நிகழ்வுக்கான அறிவியல் காரணத்தை பாளையம் அறியாவிட்டாலும், இந்த நிகழ்வு தொடர்பான நீரோட்டம் போக்கு, காற்று வீச்சு, நிலவின் சுழற்சி ஆகியவற்றை அறிந்திருக்கிறார்.
மீனவர்களை பொருத்தவரை இந்த அறிவு தான் வாழ்வாதாரத்திற்கு அடித்தளம். ஆய்வாளரும், சுற்றுச்சூழல்வாதியுமான நித்யானந்த் ஜெயராமன் இதை நன்கு உணர்ந்துள்ளார். தலைமுறை வழியாக கிடைக்கும் இந்த அனுபவ அறிவு, கடல் தொடர்பான அறிவியல் ஆய்வுக்கு துணையாக நிற்கும் என்று அவர் கருதுகிறார்.
அனுபவ அறிவு ஆய்வு
நித்யானந்த் ஜெயராமன், 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் வரை அடிக்கடி பாளையத்துடன் கடலில் நேரத்தை செலவிட்டுள்ளார். அதிகாலை முதல் மாலை வரை உடனிருப்பார். காலை நேரத்தில் அவர்கள் காற்றின் போக்கு, நீரோட்டம் போக்கு ஆகியவற்றை கவனித்தனர். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இவற்றின் மாற்றம், மீன்கள் நடமாட்டம் மீதான தாக்கம், அவற்றின் இடம்பெயர்வு ஆகியவற்றையும் பதிவு செய்தார்.
இந்த குறிப்புகள், கடலில் மாற்றம்: பருவங்களில் மாற்றம்: காலநிலை மாற்றத்திற்கான மீனவரின் அறிவியல், எனும் ஆய்வாக அமைந்தது. இந்த ஆய்வு ஜெயராமனின் இதழியல் ஆர்வம், பாளையத்தில் கடல் சார்ந்த அனுபவ அறிவின் ஒன்றிணைவாக அமைந்தது. இந்த ஆய்வு, கச்சன் எனும் தென்மேற்கு காற்று வாடை எனும் வடகிழக்கு காற்றாக மாறும் விதத்தை சுட்டிக்காட்டுகிறது. தமிழ் மாதமான புரட்டாசியில் (செப்டம்பர்- அக்டோபர்) இது நிகழும்.
புரட்டாசி மாத கடல் அமைதியாக, தெளிவாக, நீள நிறமாக இரவு நேர மீன்பிடித்தலுக்கு ஏற்றதாக இருக்கும்.
இருப்பினும், அதிக மீன்பிடித்தலை கொண்ட இந்த மாதம், ஆய்வு காலத்தின் போது சொற்ப மீன்பிடித்தலையே கொண்டிருந்தது. வட திசை காற்றின் வருகை தாமதமாகவே இதற்கு காரணம்.
“அனைத்து மீனவர்களும், அனுபவம் மூலமான அடிப்படை நிபுணத்துவம் கொண்டுள்ளனர். ஒரு சிலர் அறிவை பாதுகாத்து வருகின்றனர், என்றால் பாளையம் போன்றவர்கள் அறிவை உருவாக்குகின்றனர். அவர்கள் மாற்றத்திற்கு ஏற்ப புதுமையாக்கம் உண்டாக்கி அதை எதிர்கால தலைமுறைக்கு வழங்குகின்றனர்,” என்கிறார் ஜெயராமன்.
ஆனால், மீனவர் அறிவை, மேற்கத்திய அறிவியல் முறையுடன் ஒப்பிட முடியாது. இரண்டும் மாறுபட்ட கற்றல் முறை, என்கிறார்.
மீனவர்கள் பட்டறிவை, கட்டுக்கதை என்றோ, பழங்கதை என்றோ கருதி விடக்கூடாது என்றும் ஜெயராமன் கூறுகிறார். இது தினமும் கடலுக்கு செல்வதன் மூலம் அனுபவத்தில் பெறப்பட்டதாகும்.
கதை சொல்லிகள்
டிஜிட்டல் கலைஞர் பார்வதி நாயரின் கலைப்படைப்புகளில் தண்ணீரை மையமாகக் கொண்ட கருப்பொருட்களால் ஊக்கம் பெற்ற ஜெயராமன், பாளையம் ஆய்வு, சென்னை அருகே உள்ள தக்ஷின்சித்ராவில், 'லிவிங் ஓஷன்' எனும் நிரந்தர கண்காட்சியாகி இருக்கிறது. அறிவியல், கலை, கதை சொல்லுதலை இது இணைக்கிறது.
இந்த ஐந்தாண்டு ஆய்வை மையமாகக் கொண்டு பார்வதி நாயர், ஸ்ஸீக்கர் எனும் படத்தை உருவாக்கினார். மொழி, கலாச்சாரம், அன்மீக கலைவையை இது பிரதிபலிக்கிறது.
“இந்த படத்தின் கதை சொல்லியும், கலைஞரும் பாளையம் அண்ணா தான். கலைவெளியில் உருப்பெறக்கூடிய குறிப்பிட்ட அறிவை அவர் கடலில் இருந்து கொண்டு வருகிறார். கடலில் ஏற்படும் சீரழிவுகளை, அவற்றின் பாதிப்புகளை தனது பார்வையில் நம் முன்வைக்கிறார்,” என்கிறார் பார்வதி நாயர்.
“கடல் அவருடன் பேசுவதாக உணர்கிரேன். இந்த உணர்வை படம் முழுவதும் கொண்டு வர விரும்பினேன்...” என்கிறார்.
இந்த கண்காட்சி பாளையம் உருவாக்கி வலை அமைப்புகளையும் கொண்டுள்ளது. தென்னகத்தின் அழியும் நிலையில் இருக்கும் பறவைகள் தொடர்பான பார்வதி நாயரின் தி ஹாஷ்டேக் கலெக்டிவ் கலை படைப்பு மற்றும் மது விஸ்வனாதனின், பறவைகள் ஒலி, அலைகளின் ஓசை ஆகிய இரண்டு ஒலி அமைப்புகளையும் கொண்டுள்ளது.
பாளையம் போன்ற மீனவர்களுக்கு காற்றும், அலைகளும் தினசரி முடிவுகளுக்கான அடிப்படையாக அமைகிறது.
“பொதுவாக எட்டு திசைகளில் இருந்து காற்று வீசுகிறது. ஒன்பதாவது காற்றையும் அறிந்து வைத்துள்ளோம். புயல், மின்னல், பெரு மழைக்கு காரணமான குன் வாடை காற்று. இதை மட்டுபடுத்த தெற்கில் இருந்து வடக்கே வீசும் தேண்டி காற்று தேவை," என்கிறார் பாளையம்.
நான்கு நீரோட்டங்களையும் பட்டியலிடுகிறார். அவை தெற்கு நோக்கிய தேண்டி, வடக்கு நோக்கிய வன்னி, ஆழ்கடலில் இருந்து வரும் மெய்மறி மற்றும் மிகை சுனாமிக்கு வித்திடும் ஒலினி.
“புயல் வரும் நாட்களில், அதை கடலை நோக்குவதன் மூலமாக அல்லாமல், எதிர்திசையில் மின்னலின் இருந்து அறிகிறோம். பல ஆண்டுகளாக கடலுக்கு செல்லும் அனுபவத்தில் இருந்து இதை கற்றுள்ளோம்,” என்கிறார்.
முழுநேரமாக கடலுக்கு செல்வதில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பாளையம், மீனவர்களின் அனுபவ அறிவு, அவர்களின் உள்ளூர் மொழியுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார்.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி, தமிழில்: சைபர் சிம்மன்
ஆழ்கடல் பயணம்; நடுக்கடல் உணவு: மீனவர்களின் மறுபக்கத்தைக் காட்டும் மீனவ யூடிப்பர்!
Edited by Induja Raghunathan