ஆழ்கடல் பயணம்; நடுக்கடல் உணவு: மீனவர்களின் மறுபக்கத்தைக் காட்டும் மீனவ யூடிப்பர்!
அம்பை எய்தி கனவா மீன்களை வேட்டை செய்தல், கடலின் தரைமட்டத்தில் நின்று சங்கு எடுத்தல், பனை ஓலையில் மீன்பிடித்தல், நடுக்கடலில் படகிலே மீன்சாப்பாடு என கடல்சார் மீனவர்களின் வாழ்கையுடன், சமுத்திரத்தின் திகட்டாத அழகினை காட்சிப்படுத்தி வரும் யூடிப்பர் சக்திவேலின் பயணம்...
"குடிசை வீட்டில் தான் வளர்ந்தேன். வீட்டின் தளமே கடற்கரை மணல் தான். 12வது படிச்சு முடிக்கிறவரை நாங்க வெளிச்சத்தையே பார்த்ததில்லை. இன்னும் எங்க மக்கள் இப்படி தான் வாழுறாங்க. நாங்க எப்படி வாழுறோம். கடல்ல எவ்வளோ கஷ்டப்படுறோம்னு மக்களுக்கு தெரியப்படுத்தவும், எங்க தொழில் நலிவடைந்து வருகிற நிலையில் என் பிள்ளைகளுக்கு நாங்க எப்படி மீன் பிடிச்சோம்னு காட்டதான் யூ டியூப் சேனல் ஆரம்பித்தேன்..."
எனும் சக்திவேல் அவரது 'துாத்துக்குடி மீனவன்' சேனலின் வழியே மீனவர்களின் கஷ்ட நஷ்டங்கள், சவால்கள், சாகசங்களுடன் மீன்களின் பெயர், தரம், விலை என மக்கள் அறியாத மீன்உலகத்தை பற்றியும் பதிவிட்டுவருகிறார்.
கடலுக்கும் மீனவனுக்கும் இடையிலான ஆழமான உறவினை கதைகள் மற்றும் செய்திகளின் வழியே மட்டுமே அறிந்துவந்த நிலையில், மீனவர்களின் வாழ்க்கையினை தினந்தோறும் காண வழிவகைச் செய்துள்ளனர் யூடியூப்பில் கடலும், கடல் சார்ந்த வீடியோக்களை பதிவேற்றும் மீனவ யூடியூப்பர்கள். அதிலொருவரான சக்திவேலின் சேனல் தான் 'துாத்துக்குடி மீனவன்'.
5 ஆண்டுகளில் 6,00,000 சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள சக்திவேலின், ஒவ்வொரு வீடியோவும் பிரம்மிப்பை அள்ளித்தருகின்றன. அம்பை எய்தி கனவா மீன்களை வேட்டை செய்தல், கடலின் தரைமட்டத்தில் நின்று சங்கு எடுத்தல், பனை ஓலையில் மீன்பிடித்தல், நடுக்கடலில் படகிலே மீன்சாப்பாடு என கடல்சார் மீனவர்களின் வாழ்கையுடன், அரிய உரியனங்களை காட்டி சமுத்திரத்தின் திகட்டாத அழகினை காட்சிப்படுத்தி வருகிறார்.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த சக்திவேல், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில்லை, வேலைகிடைத்தும் வருமானம் இல்லை என்ற நிலையில் ஃபாரீனுக்கு பணிபுரிய சென்றார்.
ஆனால், அங்கும் ஏமாற்றப்பட்டதில் நாடு திரும்பினார். இல்லை, கடலுக்கு திரும்பினார். ஆம், கரை வாழ்க்கையில் கிடைத்த கசப்பான அனுபவங்களால், கஷ்டங்கள் நிறைந்ததும் எனினும் நிம்மதியை தருமென்று சொந்தத்தொழிலான மீன்பிடிப்புக்கு திரும்பியுள்ளார் சக்திவேல்.
இன்று 'துாத்துக்குடி மீனவன்' - ஆக, அவரது யூ டியூப் சேனல் வழியே உலகெங்கும் அறியப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறார். அவருடன் பேசினோம்...
"அப்பா பேரு மலைச்சாமி. அம்மா மரகதம். அப்பா, தாத்தா காலத்திலிருந்து எல்லோருக்கும் மீன்பிடித்தொழில் தான். மீனவத் தொழிலும் நலிவடைந்து கொண்டேயிருக்கு. அதுனால, நான் என் பிள்ளைகளுக்காச்சும் நாங்க என்ன வேலை பண்ணோம், எப்படிமீன் பிடிச்சோம்னு காட்டணும்னு நினைச்சு தான் யூ டியூப் சேனல் ஓபன் பண்ணேன். அது, நான் நினைச்சு பாக்காத அளவுக்கு எங்கயோ போயிட்டு.
3வது வீடியோ கரையிலிருந்த பாம்பு மீன்னு சொல்ற விலாங்குமீனை வீடியோ எடுத்து போட்டிருந்தேன். அது மில்லியன் வியூஸ் போயிருச்சு. அப்போ இருந்த வீடியோ கொஞ்சம் கொஞ்சமா வியூஸ் கிடைக்க ஆரம்பிச்சுருச்சு.
ஒவ்வொரு நாளும் மீன் பிடிக்க போகிறது, எந்த முறையில் மீன் பிடிக்கிறோம், என்ன மீன் பிடிக்கிறோம், மீனவர்களின் கஷ்டங்கள், சவால்கள், சாகசங்கள் என அனைத்தையும் வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். எங்களுடைய வாழ்க்கையை மக்களிடம் பகிர்ந்துகொள்ள யூடியூப் ரொம்ப உதவியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் யூடியூப் சேனல் தொடங்கி, அவர்களது பகுதியிலுள்ள மீன், அதன் விலை, எப்படி வாங்கணும், எங்க வாங்கணும்னு சொல்கிறார்கள். மக்களும் அதை பார்த்து தெளிவு அடைந்து கொள்கின்றனர். கடலுக்கும் எங்களுக்குமான பந்தம் ஆழமானது.
தொட்டுப் பிடிச்சு விளையாடுறத மத்தவங்களாம் கரைல விளையாடுவாங்கல. நாங்க அத கடலுக்குள்ள விளையாடுவோம். கடலுக்கு அடியில் யாரு அதிக ஆழத்துக்குபோய் மண் எடுத்து வர்றாங்கனு விளையாடுவோம். எப்படி மாடு அடக்கினா வீரன்னு சொல்வாங்களோ, அந்தமாதிரி மண்ண ஆழத்துல போய் எடுத்துவர்றவங்க தான் வீரன்னு சொல்லுவாங்க.
அப்படியே, ஆர்வம் அதிகமாகி சங்கு எடுக்க போறது, மீன் குத்திப்பிடிக்க போறதுனு விளையாட்டாக தான் சின்னவயசுல பண்ணிட்டு இருந்தேன். நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து கடல்ல தான் இருந்திருக்கேன். கடல் தான் எல்லாம், எனும் சக்திவேல் அங்கிட்டு, இங்கிட்டு என பேசும் துாத்துக்குடி தமிழிலுக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர்.
வீடியோ காணொலிகளின் வழியே மீனவ மக்களின் வாழ்வை ஆவணப்படுத்திப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சக்திவேலுக்கு, செல்போன் கையாளுதல் கைவந்த கலையெல்லாம் இல்லை. வீடியோ எடிட்டிங், கேமிரா ஆங்கிள், தண்ணீருக்குள் வீடியோ எடுப்பது என எந்த டெக்னாலஜியும் அவர் அறிந்திருக்கவில்லை. ஏன், நான்கு ஆண்டுகளுக்கு முன் சக்திவேல் சேனலை துவங்கையில் அவரிடம் நல்ல தரம் வாய்ந்த கேமிரா வசதியுடைய போன்கூட இல்லை.
சக்திவேலின் முயற்சியை பாராட்டி அவரது நண்பர் ஒருவர் ஸ்மார்ட் போன் ஒன்றை பரிசாக அளித்து ஊக்குவித்துள்ளார். ஆழ்கடலுக்குள் வீடியோ எடுக்க பாலீத்தின் கவருக்குள் ஸ்மார்ட்போனை வைத்து எடுக்கிறார்.
"ஒரு ஷாட் எடுப்பதற்கு குறைஞ்சது 10 முறையாச்சும் மூச்சை தம் கட்டி ஆழத்துக்கு போயி, மேலவந்து, வீடியோ எடுப்பேன். ஆழத்துக்குள் செல்லும்போது ஒரு கையில் கேமிரா வைச்சிட்டு ஒரு கையில தான் நீந்தி உள்ள போவேன். ஆழத்துக்குள்ள ஒரு கையில நீந்தினா எப்படியிருக்கும்னு பாத்துகோங்க. கை பயங்கரமா வலி எடுக்கும்.
வீடியோ எடுத்திட்டு, கடலிலிருந்து கரைக்கு வருவதற்குள்ளாகவே எடிட்டிங்கை முடிச்சிருவேன். கடற்கரையில மட்டும் தான் டவர் கிடைக்கும். வீட்டுக்கு போயிட்டா டவர் கிடைக்காது. ஒரு வீடியோ அப்லோடு ஆகுறதுக்கு 3 மணி நேரமாகும். கடலுக்கு போயிட்டு வந்தாலே பயங்கர பசி எடுக்கும். ஆனாலும், பசியில் கரையில கடந்து வீடியோவை அப்லோடிட்டுதான் வீட்டுக்கு போவேன்" எனும் அவரது, ஆழ்கடலுக்குள் சங்கு எடுக்கும் வீடியோ வேற லெவலில் வைரலாகியது.
கடலுக்கு சென்றதன் நினைவுகளாக என்றும் நிலைத்து இருப்பவை சங்குகள். வெண்நிற பளிங்கு தோற்றத்தால் ஈர்க்கும் சங்குகளை ஆழ்கடலில் இருந்து எடுப்பதற்கு மீனவர்கள் படும் கஷ்டங்களை, வெளிஉலகிற்கு சொல்லபடாத கதைகளை தத்ரூபமாய் காட்சிப்படுத்தியுள்ளார். யூடியூப்பில் 4.3 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ள அந்த வீடியோவின் பின்னணி குறித்து சக்தி பேசுகையில்,
"கடலின் மேல்மட்டத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிப்பது மட்டும்தான் மக்கள் பாத்திருப்பாங்க. ஆனா, கடலின் தரைமட்டத்தில் நின்று எப்படி சங்கு எடுக்கிறோம்னு வீடியோவில் பார்த்திட்டு எக்கச்சக்கமான மக்கள் பாராட்டினாங்க.
சங்கு எடுக்க போவதற்கு ஒரு ஆளின் எடைக்கு ஏற்றாற்போல, 5 கிலோ வெயிட்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, காலில் அலுமினியத்தட்டுகளை மாட்டி, படகிலிருக்கும் காற்று நிரப்பிய டேங்கிலிருந்து ஆக்ஸிஜனை பெற நீளமான பைப்பை எடுத்துக்கொண்டு கீழிறங்கிவிடுவோம். ஆனால், இதுவும் பாதுகாப்பனதில்ல. படகில் இருக்கும் காற்று டேங்க், சுத்தமான ஆக்ஸிஜன் மட்டும் நிரப்பியதல்ல. அதில், அதிகளவிலான நைட்ரஜன்களும் இருக்கும். கடலுக்குள் இருந்து சுவாசிக்கும் மீனவர்கள், அதை முறைப்படி சுவாசிக்க பழகியுள்ளனர். இம்முறை பயன்படுத்துவதால், இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.
தாத்தா காலத்தில் சுவாசிக்க இந்த பைப்பும் இல்லாமல், ஒரே மூச்சில் கடலுக்குள் இறங்கி சங்கு எடுத்துள்ளார்கள். ஆனால், அதற்கான எந்த ரெக்கார்டும் இல்லை. உயிருடன் உள்ள சங்கை நாங்க எடுக்கமாட்டோம். செத்து 10 வருஷத்துக்கு மேல மண்ணுக்குள் புதைந்திருக்கும் சங்கை தான் எடுப்போம். அதனால தான், காலில் அலுமினிய தட்டைக் கட்டி கொண்டு தோண்டி சங்கு எடுப்போம்.
கிட்டத்தட்ட தரையில் ஓடுவதை போன்று கடல்தரையில் ஓடிகிட்டு கடப்போம். 3 மணி நேரம் இதே மாதிரி கடலுக்குள் கடந்து சங்கு எடுப்போம். இவ்ளோ கஷ்டப்பட்டாலும் சங்கு அதோடு சைஸ், கலரு வச்சு ரூ.1,500 வரை தான் விற்கும். இப்போ மக்களுக்கு இதெல்லாம் வீடியோ மூலம் தெரியப்படுத்திருக்கோம்னு சந்தோஷமாகயிருக்கு," என்று மகிழ்வுடன் கூறினார் சக்தி.
கடலுக்குள்ளான வாழ்க்கை மட்டுமின்றி, கரையில் வாழும் மீனவர்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களது இருப்பிடங்களையும் காட்டி அவர்களது வாழ்க்கையையும் பதிவு செய்து வருகிறார்.
மாதத்தோறும் யூடியூப்பிலிருந்து கிடைக்கும் ரூ.20,000 வருவாயின் ஒரு பகுதியை அவர்களது சமூக மக்களுக்காக உதவிவருகிறார். அதுபோன்று, சமீபத்தில் அவரது பகுதியில் வசிக்கும் ஒரு வயதான தம்பதியினரை பற்றி எடுத்துரைத்திருந்தார். சக்தியின் முயற்சிக்கு கைகோர்த்த பலர் நிதியுதவி அளித்து, வயதான தம்பதியினரின் வீட்டில் சோலார் பேனல் பொருத்தி உதவிகளை செய்துள்ளனர்.
"நண்பர்கள், குடும்பத்தினர், சப்ஸ்கிரைபர்கள் அளிக்கும் ஆதரவு அளவற்றது. மற்றத் தொழில்களை காட்டிலும், மீனவத் தொழிலுக்கு சென்ற கணவன் வீடு திரும்புவானா என்ற பயத்தில் தான் வீட்டில இருப்பாங்க. அதுவும் என் மனைவி அருணா, கடல் வாழ்க்கைக்கும் துாரம். ஆனாலும், எனக்கு தோள் கொடுத்து வருகிறார். பாட்டி-தாத்தா பற்றி நான் சொல்வதை நம்பி, எண்ணற்ற முகம் தெரியாத நபர்கள் பணம் அனுப்பினர். இன்னும் சமூக மக்களுக்கு உதவிட வேண்டும்," என்று சக்தி கூறுகையிலே, சந்தோஷம், வலி, கஷ்டம், வியப்பு என அனைத்துவிதமான உணர்வினையும் வெளிப்படுத்தினார்.
துாத்துக்குடி மீனவன் யூடியூப் பக்கம் :