பெண்களின் உலகை நிதியறிவு உள்ளதாக்கும் 24 வயது சென்னை பெண்!
பிற்படுத்தப்பட்டப் பெண்களுக்கு நிதிமேலாண்மை பற்றிய கல்வியை அளிக்கின்றது சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் இவரது நிறுவனம்.
அனன்யா பாரெக், ‘Inner Goddess' 'இன்னர் காடஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மற்றும் துணை நிறுவனர். அவரது வயதில் உள்ள மற்றவர்களை விட அதிக புத்தகங்கள் வாசித்துள்ளார் எனலாம். சிறந்த கல்வி, வேலை மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை, உணரவைத்தது அனன்யாவின் கூட்டுக்குடும்பம். அந்தச் சூழல் தான் இந்த 24 வயது பெண்ணின் மனதும் தொழில்முனைவை நாடியதற்குக் காரணம்.
“இந்திய பாரம்பரியம், இறையாண்மை மற்றும் ஊதுவத்திகளின் நறுமணம் சூழ்ந்த மைலாப்பூரில் இருந்து வந்தவர் அனன்யா. 6 வயதில் இருந்தே புத்தகங்கள் என்றால் அவருக்கு விருப்பம். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எனது பெற்றோர் எனக்குள் விதைத்த மாபெரும் விதை," என்கிறார் அவர்.
இந்தப் பழக்கம் காரணமாக, காலம் உருண்டோட உலகைப் பற்றிய புரிதல் அவருக்கு அதிகமாகியது. அது மட்டுமன்றி படிப்பதோடு நிறுத்தாமல் அதனை முயற்சித்து பார்ப்பது தன்னை மேலும் அறிவது என அனன்யாவை புத்தகங்கள் சிறிது சிறிதாக செதுக்கியுள்ளன. இது ஆரம்பமாக இருக்க, அவரின் குடும்பத்தில் ஒவ்வொரு தலைப்பிலும் அனைவரும் கூடி விவாதிப்பதும் இவருக்கு உதவியுள்ளது.
"சிறுவயதிலேயே பாலின பாகுபாட்டை தெளிவாக புரிந்துகொண்டேன் நான். எனது எண்ணங்கள் மற்றும் கேள்விகளை எண்ணுக்குளேயே வைத்துக் கொள்ளாமல் எப்போதும் அவற்றை எனது பெற்றோரிடம் பகிர்ந்துகொள்வேன். பின்னர் வயதாகும் பொழுது சமுதாயக் கட்டமைப்பின் காரணம், பொருளாதார ஏற்றத்தாழ்வின் பின்புலம் ஆகியவற்றை உணர்ந்தேன்.”
சென்னையில் அவரது பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு அவர் சென்றதன் தாக்கமாக சிறுவயதிலேயே அவரது மனதில் சமூக சேவையில் விதையாக விழுந்தது. நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரிடமிருந்து கொடையாக நிதி பெற்று அந்த குழந்தைகளுக்கு அவர் தேவையான பேனா பென்சில்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அன்று விழுந்த அந்த விதை இன்று ஒரு இன்னர் காடஸ் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது.
இயற்பியல் மற்றும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் நாட்டம் இருந்த காரணத்தால் SRM பல்கலைகழகம் சென்று பயின்றுள்ளார். ஆனாலும் பெண்கள் உரிமை, கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் தான் மனம் லயித்துள்ளது. இதன் காரணமாக இரண்டாம் ஆண்டோடு படிப்பை நிறுத்திவிட்டார் அனன்யா.
என்ன செய்கிறது இன்னர் காடஸ்?
பெண்களுக்கு நிதி மேலாண்மை பற்றி புரியவைப்பது, பணம் சார்ந்த கவலைகள், மன நலம் மற்றும் அவர்களாக முதலீடு செய்வது போன்றவற்றை கற்பிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது இன்னர் காடஸ். மூன்று மணிநேர வகுப்புகள் மூலம் கற்பிப்பது இந்நிறுவனத்தின் முறையாகும்.
வளரும் பருவத்தில், பெண்களின் சிக்கல், பாலின பாகுபாடு, அவர்களைச் சுற்றிய மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை படித்ததன் காரணமாக அவரின் வீட்டில் இருந்த பெண்களோடு இது சம்பந்தமான உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. பல நேரங்களில் பெண் என்ற காரணத்தாலேயே பலரின் வாழ்வு பெரிய அல்லது சிறிய மாற்றங்களை சந்தித்துள்ளதை அவர் கண்டார்.
இவற்றால் எழுந்த கோவமும், மனதில் விதையாக விழுந்த லட்சியமும் உந்தித்தள்ள, அனன்யா ஆலமரமாக எழத்துவங்கினார். பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் கல்வியை தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டார். இப்பொழுது தனது நிறுவனம் மூலம் இந்த சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கியுள்ளார்.
செப்டம்பர் 2016ல் துவங்கிய ‘இன்னர் காடஸ்’ சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் இதுவரையிலும் 10,000 பெண்களிடம் தங்கள் பணிமூலம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுபதிற்கும் மேற்பட்ட வகுப்புகள் நடத்தியுள்ளனர். சென்னையில் பிரபலமான பேச்சாளர் மற்றும் AIESEC முன்னாள் மாணவர் என்ற வகையில் அனன்யா பல உலக மாநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டுள்ளார்.
"அந்த நேரத்தில் பெண்கள் முன்னேற்றம் பற்றிய பேச்சு அதிகரித்திருந்தது. பெண்ணியம் மற்றும் சம உரிமை என்றால் என்ன என்று பலரும் உணரத் துவங்கினர். இந்தியாவில் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் சென்னைக்கு தகவல்கள் சிறிது தாமதமாகத்தான் வந்து சேரும். மேலும் பெங்களூரு போன்ற நகரத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில் சென்னை சற்று பிற்போக்கு மனநிலை கொண்ட நகரமே.”
இதன் காரணமாகவே சென்னையை மையமாக வைத்து இது தொடர்பாக சரியான புரிதலை பெற ஆசான்களை தேடியுள்ளார். முதலில் Arabella Advisors நிறுவனத்தின் இணை இயக்குனர் தன்வி கிரோத்ரா மற்றும் i-sekai நிறுவனர் கார்னெலியா கன்சே ஆகியோரிடம் உதவி கோரினார்.
பலதரப்பட்ட துறைகளில் பெண்களில் முன்னேற்றம் தான் இன்னர் காடஸின் குறிக்கோளாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்டத் துறையில் இருந்து வேலையை துவங்குமாறு அனன்யாவிற்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே நிதி மேலாண்மை பற்றிய அறிவை கற்பிப்பதே சரியான துவக்கமாக இருக்கும் என தேர்வு செய்தார் அனன்யா.
16 முதல் 25 வரை பின்தங்கிய நிலையில் நிதி குறித்த எவ்வித புரிதலும் இல்லாத பெண்களுக்கு இன்னர் காடஸ் தனது சேவையை வழங்குகிறது. அது மட்டுமன்றி முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளை அணுகி அவர்களோடு இணைந்து அங்குள்ள பெண்களுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர்.
ரூ.300–ரூ.20,000 வரை நேரம் மற்றும் கற்பிக்கும் விஷயங்களை பொருத்து கட்டணம் மாறுபடுகின்றது. 2018-19 நிதியாண்டில் ரூபாய் 6 லட்சமும் நிதியாண்டு 19-20ல் ரூபாய் 3 லட்சமும் வருமானமாக வந்துள்ளதாக அனன்யா கூறுகிறார். 2018 ஆண்டிற்கு பிறகு முழுவதும் வணிக நோக்கமில்லா பாதையில் பயணிக்கிறது இன்னர் காடஸ்.
சிக்கலின் துவக்கத்தை சரிசெய்தல் :
பல சிக்கல்கள் உருவாவதன் காரணம் இளம் வயதில் பெண்களுக்கு நிதி சார்ந்த பழக்கங்கள் இல்லாமல் இருப்பதுதான் என அனன்யா மற்றும் அவரது குழுவினர் கூறுகின்றனர். ஏதேனும் சிக்கல் வரும் வேளையில் அல்லது இளம் வயதிலேயே பொறுப்புகள் வரும் நேரத்தில் தான் நிதி பற்றிய எண்ணம் அவர்களுக்கு வருவதையும் காணமுடிகிறது. திடீர் என கணவன்களை இழந்த பெண்கள் பலரின் கதைகள் உள்ளது இவர்களிடம்.
“திடீர் என அவர்களுக்கு என்ன செய்வது என்று புரியாது. வீட்டின் செலவுகளை அவர்கள் சமாளிக்க வேண்டும். ஆனால் அது எப்படி என எவரும் அவர்களுக்குக் கற்றுத் தரவில்லை. நமது கல்வி முறை இவற்றை அவர்களுக்கு கற்பிப்பதில்லை. இதன் காரணமாக பெண்கள் பின் தங்கிவிடுகின்றனர்.
16 – 25 வயதுள்ள பல பெண்களிடத்தில் இந்த சிக்கல் பொதுவாக இருக்கின்றது. கல்வி எதிர்காலம், வாழ்க்கை போன்றவற்றை அவர்கள் தீர்மானிக்கும் நேரத்தில் அவர்கள் பிரச்சனையின் பிடியில் சிக்குகின்றனர். மற்ற வீடுகளில் இது சாதாரண முடிவுகளாக இருக்கலாம் ஆனால் பின்தங்கிய சமுதாயப் பெண்களுக்கு பல நிதிச்சிக்கல்கள் நிறைந்து நம்பிக்கை இல்லா காலம் அது.
“இப்போது எங்கள் நோக்கம் நிதி மேலாண்மை பற்றிய அறிவை இது போன்ற பல பெண்களுக்கு புகட்டுவது தான். அதன் மூலம் அவர்களாகவே சரியான முடிவுகள் எடுக்க உதவுவது தான்,” என்கிறார் அனன்யா.
தற்பொழுது மனிதவள அமைச்சகத்திடம் தனது குழு நிதி மேலாண்மை குறித்து நமது பாடத்திட்டத்தில் சேர்க்கும் வண்ணம் ஒரு பெரிய சிலபசை உருவாக்க முயன்று வருகின்றார். அத்தோடு இளம் பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியோரின் உரிமைக்காக பாடுபட இளம் தலைவர்களை ஆதரிக்கும் மற்றும் உருவாக்கும் வைபி அறக்கட்டளையில் ஒரு ஃபேலோஷிப்பும் செய்து வருகிறார்.
அவரது எண்ணம் பெண்கள் முன்னேற்றம் என்பது வெறும் சமூக இயக்கமாக இல்லாமல் பல மடங்கு வளரவேண்டும் என்பதே.
ஆங்கிலத்தில்: சம்பத் | தமிழில் : கெளதம் தவமணி