‘கிரிக்கெட்டை புரிந்து கொள்ள சென்னை பல விதங்களில் உதவியது’ - தோனி நெகிழ்ச்சி!
ஐபிஎல் கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியதற்காக சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு சென்னையில் இன்று பிரம்மாண்டமான முறையில் வெற்றி விழா நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அணியின் கேப்டன் தோனிக்கு கௌரவப் பரிசு வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ரசிகர்களால் செல்லமாக 'தல' என அழைக்கப்படும் தோனி தலைமையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் பிரம்மாண்ட வெற்றி விழாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடத்தியது. இந்த வெற்றி விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தார். இதேபோல், சென்னையில் உள்ள நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
2007ஆம் ஆண்டு, முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதித்த தோனி, கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்தும் தனது 40வது வயதில் தனது தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்திருக்கிறார்.
தனது இந்த வெற்றிப் பயணம் பற்றி விழாவில் பேசிய தோனி,
"பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிவிட்டு சென்னை வந்தேன். சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது. கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம். கிரிக்கெட்டை புரிந்து கொள்ள சென்னை பல விதங்களில் உதவியது. சென்னை அணியின் ரசிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். 2008-ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு என்னை எடுப்பார்கள் என நினைக்கவில்லை. எனது கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் தான் இருக்கும்," என்றார்.
அதனைத் தொடர்ந்து, இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்,
"முதல் அமைச்சராக அல்ல, தோனியின் ரசிகனாக பாரட்டு விழாவுக்கு வந்துள்ளேன். நான் மட்டுமல்ல எனது பேரப்பிள்ளைகளும், தலைவர் கருணாநிதியும் தோனியின் ரசிகர்கள்தான். சென்னை என்றாலே சூப்பர்தான். மீண்டும் ஒருமுறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் இந்த விழாவில் கலந்து கொண்டாலும் வெள்ள பாதிப்பு, நிவாரணப்பணிகள் குறித்தே நான் சிந்தித்து கொண்டிருக்கிறேன்.
நெருக்கடியான காலத்தில் சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன். சென்னை மேயராக இருந்த போது காட்சி போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கபில் தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தது தோனி.
”தோனியின் சொந்த மாநிலம் ராஞ்சியாக இருந்தாலும் தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். தமிழர்கள் பச்சைத்தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். எத்தனை பரபரப்பு இருந்தாலும் எத்தனை நெருக்கடி இருந்தாலும் கருணாநிதியும் தோனியும் கூலாக இருப்பார்கள். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை யாராலும் மறக்க முடியாது. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் தோனிதான்.”
ஐபிஎல் போட்டியில் தனது ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டவர் தோனி. ஒரு அணியை உருவாக்கியவர்தான் சிறந்த ஆளுமையாக அறியப்படுவார். ஆளுமைத் திறன் கொண்டவராக தோனி இருப்பதால்தான் அனைவராலும் தோனி பாரட்டப்படுகிறார். எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்பு தான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. அது அரசியலுக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும், என்றார். இறுதியாக,
“வீ வாண்ட் யூ டு லீட் சிஎஸ்கே ஃபார் மெனி மோர் சீசன்ஸ்... (நீங்கள் மேலும் பல சீசன்களில் விளயாடி சிஎஸ்கே அணியை வழி நடத்திட வேண்டும்),” என்று ஆங்கிலத்தில் தோனிக்கு அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக தோனி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அடுத்த ஆண்டு (2022) நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்வது பற்றி தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
"இதுபற்றி நான் யோசிக்க வேண்டும். அதற்கு நிறைய நேரம் உள்ளது. நாம் நவம்பர் மாதத்தில் இருக்கிறோம். ஐ.பி.எல். 2022 போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். எனவே ஐ.பி.எல். 2022 போட்டியில் விளையாடலாமா? என்பது பற்றி முடிவு செய்ய நேரம் அதிகம் இருக்கிறது. அவசரகதியில் அந்த முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை," எனக் கூறினார்.
இதனால் அடுத்த ஐபிஎல்-இல் தோனி விளையாடுவாரா அல்லது மாட்டாரா என்ற குழப்பம் அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், தோனியின் ரசிகர்களை அதிக நேரம் கவலைப்படவிடவில்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
வெற்றி விழாவில் பேசிய சிஎஸ்கே அணி நிர்வாகம், ஐபிஎல் 2022 போட்டியில் சென்னை அணியில் நிச்சயம் தோனி விளையாடுவார் என அறிவித்து, தோனியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக இருந்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னை அணி ஐ.பி.எல் போட்டியில் வாகை சூடியது. 2011 ஆம் ஆண்டும், 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. பின்னர் சூதாட்ட புகாரில் சிக்கி 2 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைசெய்யப்பட்டது.
பிறகு 2018ம் மீண்டும் ஐ.பி.எல்லில் களமிறங்கியது சென்னை அணி. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் களமிறங்கிய போதும், அசத்தலாக கோப்பையைக் கைப்பற்றி அனைவரையும் அசர வைத்தது சென்னை கிங்ஸ் அணி. அடுத்த சில ஆண்டுகள் கோப்பை கை நழுவிய போதும், மீண்டும் கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இந்த நான்கு முறையும், தோனியின் தலைமையிலேயே சென்னை அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது.
சென்னை அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியதற்காகவே இன்றைய வெற்றி விழாவில் கேப்டன் தோனிக்கு சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.