தீபாவளி பரிசாக கார், பைக் - ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த சென்னை நகைக்கடை அதிபர்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
வரும் 24ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி வந்தாலே அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவன பணியாளர்கள் வரை அனைவருமே போனஸ் குறித்த அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருப்பது வழக்கம்.
பெரிய நிறுவனங்கள் முதல் சிறு குறு வியாபாரிகள் வரை தங்களிடம் பணியாற்றுபவர்களுக்கு புத்தாடை, பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ் உடன் இயன்ற அளவிலான பணத்தையும் தீபாவளி பரிசாக கொடுப்பார்கள்.
ஆனால், பிரபல நகைக்கடையின் உரிமையாளர் ஒருவரோ தனது கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கார், பைக் ஆகியவற்றை தீபாவளி பரிசாக கொடுத்து ஆனந்த கண்ணீரில் நனைய வைத்துள்ளார்.
தீபாவளி போனஸ் சர்ப்ரைஸ்:
சென்னை தியாகராய நகர் மற்றும் மதுரையில் இயங்கி வரும் சலானி ஜூவல்லரி என்ற நகைகடையின் உரிமையாளர் ஜெயந்திலால் சலானி, இவர் நகை வியாபாரிகள் சங்க தலைவராகவும் உள்ளார். இவரிடம் 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சலானி ஜூவல்லரியின் 10ம் ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகை சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
அதில் நிறுவனத்தின் உயர்வுக்காக அயராமல் பணியாற்றிய ஊழியர்கள் குடும்பத்துடன் பங்கேற்கக்கூடிய நிகழ்ச்சி ஒன்றிற்கு சலானி ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு படைத்த நகைக்கடை அதிபர், யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
கார், பைக் பரிசு:
சலானி ஜூவல்லரி வளர்ச்சிக்காக பணியாற்றிய 10 ஊழியர்களுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள மாருதி ஸ்விஃப்ட் காரும், 20 ஊழியர்களுக்கு இருசக்கர வாகனமும் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த பரிசுகளுடைய மொத்த மதிப்பு சுமார் 1.2 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் ஜெயந்திலால் சலானி கூறுகையில்,
“ஒரு மாத போனஸ் தொகையானது உடனே செலவழிந்து விடும். ஆனால், கார், பைக் போன்றவற்றை பரிசளிக்கும் போது அதனை ஊழியர்களும், அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் நினைவில் கொள்வார்கள். மேலும், உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். நடுத்தர குடும்பத்தினருக்கு கார், பைக் வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு, அந்த கனவை நனவாகும் போது அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது,” என்றார்.
ஊழியர்கள் அல்ல உறவுகள்:
தனது ஊழியர்கள் தனது குடும்பத்தைப் போன்றவர்கள் என்றும், எல்லா ஏற்ற தாழ்வுகளிலும் தன்னுடன் இணைந்து பணியாற்றியவர் என்றும் ஜெயந்தி லால் தெரிவித்துள்ளார்.
"அவர்கள் ஊழியர்கள் மட்டுமல்ல, எனது குடும்பத்தினர். எனவே, அவர்களுக்கு இதுபோன்ற ஆச்சரியங்களை அளித்து அவர்களை எனது குடும்ப உறுப்பினர்களைப் போல நடத்த விரும்பினேன். இது எனக்கு முழு மன மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு உரிமையாளரும் தங்கள் ஊழியர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்களது உழைப்பை மதிக்க வேண்டும்,” என்கிறார்.
இதுவெறும் தொடக்கம் தான் என்றும், அடுத்தடுத்து இதுபோன்ற பல நிகழ்வுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளது ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மனசு தான் கடவுள்:
லட்சம் அல்ல கோடிக்கணக்கான பணியாளர்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், தனது நிறுவனத்தின் ஏற்ற, இறக்கங்களில் உடன் இருந்த ஊழியர்களை நெகிழ வைத்துள்ள சலானி, மற்றொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்துள்ளார்.
அதாவது, ஊழியர்களுக்கு, கார், பைக் கொடுத்தது மட்டுமல்ல அதற்கான பதிவு, வரிகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி, அதற்கான ஆவணங்களையும் ஊழியர்களிடம் வழங்கியுள்ளார்.
மேலும், வாகனங்களின் டேங்கையும் ஃபுல் செய்து கொடுத்து ஊழியர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார்.
400 வீடுகள்,1260 கார்கள்- ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுத்து அசத்திய கலக்கல் முதலாளி!