சீரிஸ் ஏ சுற்று நிதியாக ரூ.275 கோடி திரட்டிய சென்னை நிறுவனம்!
இந்த நிதி கொண்டு விஸ்பிரைட் நிறுவனம் தனது ஆய்வு வசதியை மேம்படுத்த இருப்பதோடு, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அயல்நாடுகளுக்கான சப்ளை சைன் நிர்வாகத்தில் உதவும் டிஜிட்டல் ஸ்டார்ட் அப் நிறுவனமான
Freight ஏ சுற்று நிதியாக ரூ.275 கோடி திரட்டியுள்ளது. சமபங்கு மற்றும் கடன் சார்ந்த இந்த சுற்றில், டைகர் குளோபல் தலைமையில், ஆக்சிலர் வென்சர்ஸ், பவுண்டமண்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.இந்த நிதி கொண்டு நிறுவனம் தனது ஆய்வு வசதியை மேம்படுத்த இருப்பதோடு, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
'விஸ் ஃபிரைட்' (Wiz Freight) சென்னையைச் சேர்ந்த தொடர் தொழில்முனைவோர் ராஜ்குமார் கோவிந்தராஜன், ராம்குமார் ராமசந்திரன் ஆகியோரால் 2020ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனம் வளரும் சந்தைகளில் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் அயல்நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்தை தனது தொழில்நுட்ப மேடையில், இ-காமர்ஸ் மேடையின் இலகு தன்மையோடு அணுகும் வசதியை அளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் இந்த சேவை, கொள்முதல் அளவை உடனடியாக கண்டறிவது, டைனமிக் விலை, சரியான பாதை கண்டறிதல், தானியங்கி ஆவணமாக்கல் உள்ளிட்ட வசதிகளை அளிக்கிறது.
சர்வதேச ஷிப்பிங் சந்தை 2 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக இருந்தாலும், பல்வேறு இடைத்தரகர்களுடன் மிகவும் பிளவுபட்டதாக இருக்கிறது. ’விஸ் ஃபிரைட்’ இந்தப் பிரிவில் வளரும் சந்தைகளில் சரக்கு கையாள்பவர்கள் மற்றும் அனுப்பி வைப்பவர்கள் இடையே பணியாற்றும் நிறுவனமாக திகழ்கிறது. டிஜிட்டல் புல் ஸ்டேக் முறையில் நிறுவனம் செயல்திறன் மிக்க சேவையை அளிக்கிறது.
லாஜிஸ்டிக்ஸ் சேவை
350க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனம், 15 இடங்களில் செயல்பாடுகளை கொண்டிருப்பதோடு, அதானி, மகிந்திரா, டாடா, ஆதித்ய பிர்லா உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவை வழங்குகிறது. சென்னையில் உள்ள நிறுவனத்தில் அதி நவீன மையம், மாதந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு பரிவர்த்தனையை கண்காணித்து 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை வழங்குகிறது.
ஏற்கனவே லாபகரமாக இயங்கும் நிறுவனம் தனது காலாண்டு வருமானத்தை இரட்டிப்பாகி வருவதாகத் தெரிவித்துள்ளது. பெங்களூரு மற்றும் சிங்கப்பூரில் இரண்டு புதிய ஆய்வு மையங்களையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. தனது ஊழியர் எண்ணிக்கையையும் இரு மடங்காக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வருவாயை 400 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 15 நாடுகளில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவனம் ஏ சுற்று நிதியாக ரூ.275 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. சமபங்கு மற்றும் கடன் சார்ந்த இந்த சுற்றில், டைகர் குளோபல் தலைமையில், ஆக்சிலர் வென்சர்ஸ், பவுண்டமண்டல், அராலி வென்சர்ஸ், ஸ்டிரைட் வென்சர்ஸ், அல்டேரியா கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த முதலீடு, இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறையில் மிகப்பெரிய ஏ சுற்று நிதியாக கருதப்படுகிறது. இந்த நிதி கொண்டு நிறுவனம் தனது ஆய்வு வசதியை மேம்படுத்த இருப்பதோடு, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
“பெருந்தொற்று மற்றும் சர்வதேச அரசியல் நெருக்கடி காரணமாக சர்வதேச வர்த்தகம் மிகுந்த ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த சூழலில், பத்து மடங்கு கப்பல் நிலை அறிதல், இடர் எதிர்கொள்ளும் மார்க சேவை, பல நிறுவன சேவை வாய்ப்பு போன்றவை மூலம் வாடிக்கையாளர்கள் நிலைமையை கையாள உதவுகிறோம்,” என்று விஸ் ஃபிரைட் சி.இ.ஓ ராம்குமார் கோவிந்தராஜன் கூறியுள்ளார்.
"வளரும் சந்தைகளில் டிஜிட்டல் அயல் நாடு போக்குவரத்துக்கான சேவையில் முன்னணி வகிக்கும் விஸ் ஃபிரைட் குழுவுடன் இணைந்து செயல்படுவதில் உற்சாகம் கொள்கிறோம்,” என்று டைகர் குளோபல் பாட்னார் கிரிபின் ஸ்க்ரோடர் கூறியுள்ளார்.
தொகுப்பு: சைபர் சிம்மன்