400 மில்லியன் டாலர் நிதி உயர்த்தல் மூலம் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்த சென்னை நிறுவனம்!
யூனிபோர் நிறுவனம் புதிய மூலதனத்தை, குரல் ஏ.ஐ, கம்ப்யூட்டர் விஷன், டோனல் தீர்வுகள் ஆகியவற்றை மேம்பத்த பயன்படுத்துவதோடு, சர்வதேச அளவில்லான விரிவாக்கத்திற்கு, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய விரிவாக்கத்திற்கு பயன்படுத்த உள்ளது.
சென்னை மற்றும் கலிபோர்னியாவைச்சேர்ந்த உரையாடல் சார்ந்த தானியங்கி ஸ்டார்ட் அப்’பான யூனிபோர் (Uniphore) ஈ சுற்று நிதியாக 400 மில்லியன் டாலர் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் யூனிபோர் நிறுவனம் மொத்தம் 610 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. அண்மை நிதிச்சுற்றில், அமெரிக்காவைச்சேர்ந்த வென்சர் முதலீட்டு நிறுவனம் என்.இ.ஏ தலைமை வகித்தது. 2.5 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் இது அமைந்துள்ளது. மார்ச் கேபிடல் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுடன் புதிய நிறுவனங்களும் இந்த சுற்றில் பங்கேற்றன.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, என்.இ.ஏ.வென்சர் பாட்னர் ஹிலாரி கோப்லோ மெக் ஆடம்ஸ் (Hilarie Koplow-McAdams) நிறுவன இயக்குனர் குழுவில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி இதுவரை நிறுவனம் திரட்டியதில் அதிகபட்சமாக அமைகிறது. புதிய மூலதனத்தை, குரல் ஏ.ஐ, கம்ப்யூட்டர் விஷன், டோனல் தீர்வுகள் ஆகியவற்றை மேம்படுத்த பயன்படுத்துவதோடு, சர்வதேச அளவில்லான விரிவாக்கத்திற்கு, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய விரிவாக்கத்திற்கு பயன்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
“உரையாடல்கள், தரவுகளை புரிந்து கொள்வது மற்றும் இவற்றில் இருந்து பெறப்படும் உள்ளொளிகள் ஒவ்வொரு வர்த்தகத்துக்கும் முக்கியமானவை,” என்று யூனிபோர் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. உமேஷ் சச்தேவ் கூறியுள்ளார்.
“எங்களின் வலுவான உரையாடல் தானியங்கி இஞ்சின், நிறுவனங்கள் வளர்ச்சிக்கு மட்டும் அல்லாமல், வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொள்ளவும் உதவும் வகையில் வலிமையான, புதுமையான தீர்வுகளை அளிக்கிறது.
”இந்தத் துறையில் இது உற்சாகமான காலம். யூனிபோரில் வாடிக்கையாளர்கள் பரப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நிகரில்லாத திறமையாளர்கள் இயக்குனர் குழுவில் இணைகின்றனர். நிறுவனங்களுக்கு வெற்றியை வளர்த்தெடுக்க, உலகம் முழுவதும் உள்ள வர்த்தகங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்,” என்று உமேஷ் கூறியுள்ளார்.
2008ல் உமேஷ் சச்தேவ், ரவி சரோகி ஆகியோரால் சென்னையில் துவக்கப்பட்ட யூனிபோர், உரையாடல் ஏஐ, செயல்முறை தானியங்கிமயம், ரோபோடிக் செயல்முறை ஆகியவை இணைந்த தானியங்கி மேடையை உருவாக்கியுள்ளது.
நிறுவனம் தனது தலைமைக்குழுவை வலுப்படுத்தும் வகையில் அண்மையில், பாலாஜி ராகவனை சி.டி.ஓவாக, ஆண்ட்ரூ தால்கெம்பரை முதன்மை மக்கள் அதிகாரியாக மற்றும் வினோத் முத்துகிருஷ்ணனை டெவலப்பர் மேடைகள் மூத்த துணைத்தலைவராக நியமித்துள்ளது.
2021ம் ஆண்டு நிறுவனம் இரண்டு முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்தியது. உணர்வு ஏ.ஐ சார்ந்த சேவைகளுக்காக எமோஷன் ரிசர்ச் லேப் மற்றும் குறைந்த கோடு சேவைக்காக ஜகாடா (Jacada) ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தியது. கடந்த ஆண்டு நிறுவனம் சோரன்சன் கேபிடல் பாட்னர்சிடம் இருந்து 140 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.
"யூனிபோர் தொழில்நுட்பம் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் நிறுவனம் மேற்கொண்டுள்ள முன்னேற்றத்தை பார்க்கும்போது, நிறுவன எதிர்கால பாதையில் மற்றும் இந்த புதிய நிதிச்சுற்றில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்,” என்று , என்.இ.ஏ.வென்சர் பாட்னர் ஹிலாரி கோப்லோ மெக் ஆடம்ஸ் கூறியுள்ளார்.
“நாம் மேலும் அதிகமான விர்ச்சுவல் மாதிரியில் செயல்படும் போது, நிறுவனங்கள் போட்டி நோக்கில் சாதகமான அம்சங்களை பெற யூனிபோர் போன்ற தொழில்நுட்பங்கள் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில்: மினாட்சி சங்க்வான் | தமிழில்: சைபர் சிம்மன்