கொரோனா சூழலில் ரூ.6,500 கோடி குடியிருப்புத் திட்டங்களை வகுத்துள்ள சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனம்!
2004ம் ஆண்டு துவக்கப்பட்ட ‘காஸாகிராண்ட்’ ரூ.1,800 கோடி விற்றுமுதலுடன், சென்னை, பெங்களூரு மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள 90 குடியிருப்பு திட்டங்களில் 15,000 க்கும் மேல் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
கொரோனா காரணமாக, வீடு வாங்குபவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘காஸாகிராண்ட்’ ‘Casagrand', புதிய குடியிருப்புத் திட்டத்டை துவக்கியுள்ளது. இந்நிறுவனம், சென்னையின் மனப்பாக்கத்தில், குழந்தைகளை மையமாகக் கொண்ட காஸாகிராண்ட் உடோப்பியா எனும் 673 வீடுகள் கொண்ட திட்டத்தைத் துவக்கியுள்ளது.
இந்த குடியிருப்புத் திட்டம், குழந்தைகளுக்கான வீஆர் கேம்கள், 3டி மலையேற்றம், கற்றல் மையங்கள், நீர்ச் சறுக்குகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆனால், கொரோனா சூழலில் ஏன் இத்தகைய திட்டத்தை துவக்க வேண்டும்?
எஸ்.எம்.பி ஸ்டோரிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், காஸாகிராண்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், அருண் எம்.என், இந்த திட்டம் பற்றி விளக்குகிறார்.
“வீடு சொந்தமாக இருப்பதன் அவசியத்தை மக்கள் கொரோனா பாதிப்பில் உணர்ந்துள்ளனர். உண்மையில், வீடு வாங்க விருப்பம் கொண்டவர்கள் முதலீடு செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது. குறைவான வீட்டுக்கடன் வட்டி விகிதம், சலுகைகள், குறைந்த இடர் கொண்ட துறையில் பாதுகாப்பான முதலீடு ஆகியவறை இதற்கான காரணங்கள். எதிர்பாராத விதமாக ரியல் எஸ்டேட் துறை சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது,” என்கிறார் அவர்.
ரியல் எஸ்டேட் நிறுவனமான 99acres.com நடத்திய ஆய்வில் வீடு வாங்கும் விருப்பம் கொண்டவர்களில் 60 சதவீதத்தினர் அடுத்த 12 மாதங்களில் வீடு வாங்க ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் புதுமை
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முனைவது காஸாகிராண்ட் நிறுவனம் மட்டும் அல்ல. பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதுமையாக்கம் மூலம், வீடுகளை விற்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில் வீடுகளை விற்க, தில்லியைச் சேர்ந்த ‘குல்ஷன் ஹோம்ஸ்’ வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் சென்றடைந்து வருகிறது. மெய்நிகர் உலா மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என நிறுவனம் நம்புகிறது.
மும்பை நிறுவனமான, ரஹேஜா ரியாலிட்டியும் டிஜிட்டல் வழியை நாடியுள்ளது. நிறுவனம் கொரோனா சூழலிலும் டிஜிட்டல் முறையில் தனது குழுவை ஒருங்கிணைத்துள்ளது. டிஜிட்டல் வழிகள் மற்றும் சமூக ஊடகங்களை நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்நிறுவனங்களைப் போலவே Casagrandம், டிஜிட்டல் வாய்ப்பை உணர்ந்துள்ளது.
“டிஜிட்டல் துறையில் எங்கள் 60 சதவீத விளம்பரத்தைத் திட்டமிட்டுள்ளோம். மற்ற 40 சதவீதம் பிற மேடைகளில் அமையும்,” என்கிறார் அருண்.
வாடிக்கையாளர் மீது கவனம்
2004ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் துவங்கப்பட்டது முதல் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிப்பதை அருண் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் கொரோனா சூழல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.
வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் திட்டங்கள் தாமதமாகலாம் எனும் அச்சம் கொண்டிருப்பதை எதிர்கொள்கின்றன. ஆனால் அருண், குறித்த நேரத்தில் திட்டத்தை முடிக்கும் அணுகுமுறையில் உறுதியாக உள்ளார்.
“வீடு வாங்குபவரின் வலியை புரிந்து கொள்கிறோம். எனவே குறித்த நேரத்தில் முடிப்பது எங்கள் முக்கிய நோக்கம். இதை மாற்றிக்கொள்ள முடியாது. எல்லாவற்றையும் இதற்கேற்பவே திட்டமிடுகிறோம். இது ஒட்டுமொத்த செலவு அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது,“ என்கிறார் அவர்.
மேலும், வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி கொண்டதாக வீடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருவது குறித்தும் நிறுவனம் ஊக்கம் கொண்டுள்ளது. சிறிய வீடுகளுக்கு பதிலாக பெரிய வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக நிறுவனம் கருதுகிறது.
ரியல் எஸ்டே துறையில் அனைத்து விதமான சேவைகளையும் வழங்கும் நோக்கத்துடன் அருண், உள் அலங்கார சேவைகளுக்கான DoMyHome, வசதிகள் நிரிவாகத்திற்கான Casagrand Prop Care, ஆன்லைன் தீர்வுகளுக்கான RealtyCompass மற்றும் தொழில் பூங்காக்களுக்கான Casagrand DistriPark ஆகிய துணை நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனங்களை இயக்கும் பொறுப்பை தொழில்முறை வல்லுனர்களிடம் ஒப்படைத்துள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கான Casagrand Tranquil குடியிருப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அருண் துவக்கியுள்ள லாண்டரி சேவையான ‘லாண்டரி பாய்’ நிறுவனமும் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர்