ரூ.3.5 கோடி நிதி முதலீடு பெற்ற 21000 ரூபாயில் சென்னை இளைஞர் தொடங்கிய டிசைன் நிறுவனம்!
சில தொழில்களுக்கான திட்டத்தை பார்க்கும்போது இந்தத் திட்டம் பெரிய வெற்றிபெரும் என நாம் நினைப்போம். ஆனால் நடைமுறையில் அந்த தொழில் திட்டம் பெரும் தோல்வியை அடையும்.
ஆனால் சில தொழில் திட்டங்களை பார்க்கும்போது இதில் என்ன வாய்ப்பு இருக்க முடியும் என நமக்கு தோன்றும். ஆனால் அப்படி நாம் நினைக்கும் நிறுவனம் பெரிய வெற்றியை பெரும். அப்படிப்பட்ட ஒரு வெற்றியை அடைந்த தொழில்தான் Cover It Up.
மொபைல் கவர்கள், டி-சர்ட் டிசைன், நோட்டுபுத்தகங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் இயங்கி வருகிறது Cover It Up. 2014ம் ஆண்டு ஒரு ஃபேஸ்புக் பக்கமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த நிதி ஆண்டில் ரூ.6.50 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு 3.50 கோடி ரூபாய் அளவுக்கு ஏஞ்சல் முதலீடு திரட்டி இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரொனக் சர்தாவுடன் உரையாற்றினேன். குறுகிய காலத்தில் நிறுவனம் வளர்ச்சியடைந்த விதத்தை நம்மிடம் பகிந்துகொண்டார்.
சென்னையில் உள்ள கல்லூரியில்தான் பிபிஏ படித்தேன். படிக்கும்போது அடிக்கடி போன் கவர்களை மாற்றுவேன். அது நண்பர்களுக்கு பிடித்துபோகவே அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பித்தேன். இவ்வளவு எதிர்பார்ப்பு வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
“இதனை ஒரு பொழுதுபோக்குகாகவே ஆரம்பக் கட்டத்தில் தொடங்கினேன். பலவிதமான விசாரிப்புகள் வந்தன. ஆரம்பத்தில் 1, 10 என இருந்த ஆர்டர்கள் ஆயிரக்கணக்கில் உயர்ந்தது. அதனால் பொழுதுபோக்காக இல்லாமல் மொத்த கவனத்தையும் தொழிலில் செலுத்தினேன். மேலும் இனி போன் கவர்களை வாங்கி விற்பது மட்டுமல்லாமல், நானே வடிவமைத்து விற்பனை செய்ய முடிவெடுத்து மெஷின் வாங்கினேன். இப்போது 10-க்கும் மேற்பட்ட பிரிண்டிங் மெஷின்கள் உள்ளன,” என ரோனக் கூறினார்.
இந்த தொழிலிலுக்கான முதலீடு மற்றும் லாபம் குறித்து கேட்டதற்கு தொழில்முனைவோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடத்தை ரோனக் கூறினார்.
தொழிலுக்காக அப்பா 21,000 ரூபாய் ஆரம்பகால முதலீட்டாகக் கொடுத்தார். அந்த தொகையை வைத்துதான் தொழிலை வளர்த்தேன். மேலும் இது முதல் நாளில் இருந்தே லாபம் கிடைத்துவரும் தொழிலாகவே இருந்தது. மற்ற தொழில்களைப் போல காசை செலவழித்து வளர்ச்சியை உருவக்கவில்லை எனக் கூறினார். மேலும் தொழில் விரிவடையும்போது கிரிக்கெட், சினிமா மெர்சண்டைஸ்களையும் எடுக்கத் தொடங்கினோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் உடன் இணைந்தோம். அதேபோல தர்பார், பிகில், ஆங்கிலப் படங்கள் பலவற்றின் மெர்சண்டைஸ் எடுத்தோம். இதனால் வாடிக்கையாளர்களிடம் பெரிய அளவுக்கு வரவேற்பு இருந்தது எனக் கூறினார்.
வாடிக்கையாளர்களைப் பற்றி கேட்டதற்கு, ”எங்களது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள். தற்போது 30 வயதுக்குள் இருப்பவர்கள் கூட எங்கள் வாடிக்கையாளர்களாக மாறிவருகிறார்கள்.
”இப்போது வரை ஆன்லைனில் மட்டுமே நாங்கள் விற்பனை செய்கிறோம். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் அதிக வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் டெல்லியில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் ஏஞ்சல் முதலீட்டை வைத்து முதல் கட்டமாக சென்னையில் ஒரு ஸ்டோர் திறக்கலாம் என திட்டமிட்டிருக்கிறோம்,” என ரோனக் கூறினார்.
போன் கவர்களை தொடர்ந்து, அடுத்த கட்டமாக போன்களை விற்கும் திட்டம் இருக்கிறதா என்னும் கேள்விக்கு சிறப்பான பதிலை அளித்தார் ரோனாக்.
போன்களை விற்பதற்கு அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. நாங்கள் எதற்கு? நாங்கள் ஒரு டிசைன் நிறுவனம். டிசைன் நிறுவனமாக தொடரவே விரும்புகிறோம். நாங்கள் டி-சர்ட்களில் வித்தியாமான டிசைன்களை அச்சடித்துக் கொடுப்போம். ஆனால் டி-சர்ட் தயாரிப்பதோ விற்பதோ செய்யவிரும்புவதில்லை.
அதேபோல, போன்களுகான கவர்களைக் கொடுப்போம். நோட்பேட், காலாண்டர் போன்றவை கூட நாங்கள் டிசைன் செய்ததாகவே இருக்குமே தவிர நாங்கள் விற்பனை டீலர் போல செயல்படவிரும்பவில்லை.
”ஒரு டிசைன் நிறுவனமாக இருக்கும் அத்தனை வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலிக்க விரும்புகிறோம். கடந்த நிதி ஆண்டில் 1.2 லட்சம் பொருட்களை விற்பனை செய்தோம். நடப்பு நிதி ஆண்டில் 1.5 லட்சம் புராடக்ட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்,” என ரோனக் கூறினார்.
அடுத்தகட்ட திட்டம் குறித்து கேட்டதற்கு, ‘ நாங்கள் டிசைன் நிறுவனம். வாடிக்கையாளர்கள் எங்களிடம் வருவதற்கு முக்கியக் காரணம் டிசைன்தான். அதனால் டிசைன் பிரிவில் அனுபவமிக்க பணியாளர்களை நிறுவனத்தில் இணைக்க வேண்டும். இதன் மூலம் புதுப்புது புராட்க்ட்களை உருவாக்க முடியும்.
எங்களுடைய வாடிக்கையாளர்கள் ட்ரெண்டுக்கு ஏற்ப மாறத் தயாராக இருப்பார்கள். மூன்று மாததுக்கு மேல் போன் கவர்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதனால் காலத்துக்கு ஏற்ற டிசைன்களை உருவாக்க வேண்டியதும் அதற்கு ஏற்ற பணியாளர்களைத் தயார் படுத்துவதுமே அடுத்த கட்டத்துக்கு செல்ல வழிவகுக்கும். மேலும் தற்போது கிடைத்திருக்கும் நிதியில் டெக்னாலஜிக்காக கொஞ்சம் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம் எனக் கூறினார்.
நிறுவனத்தில் இணை நிறுவனர்கள் உள்ளார்களா என்னும் கேள்விக்கு, நான் ஹாபியாக ஆரம்பித்ததால் இணை நிறுவனர்கள் என யாரும் இல்லை. நானே என் தேவைக்கு ஏற்ப ஆட்களை பணியமர்த்திக்கொண்டேன்.
தற்போது 45 நபர்கள் வரை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். அதேபோல தற்போது முதலீடு செய்திருப்பர்கள் கூட ஏற்கெனவே எனக்கு பழக்கம் இல்லை. நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் மூலமாகவே எனக்கு முதலீட்டாளர்கள் கிடைத்தார்கள்.
அடுத்த நிதி ஆண்டில் 25 கோடி ரூபாய் வருமானத்தை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம் என ரோனக் கூறினார்.