மாதம் ரூ.25 கோடிக்கு ஃபோன் கவர்கள், இயர்போன் விற்பனை: சகோதரர்களின் சக்சஸ் ஃபார்முலா!
பைலைட் கெளரவ் தனது கஸின் அமித்துடன் 2014ல் தொடங்கிய நிறுவனம், ஸ்மார்ட்ஃபோன் கவர்ஸ், ப்ளூடூத் இயர்போன்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையில் கொடிகட்டிப் பறப்பது எப்படி?
பிலிப்பைன்ஸில் கமர்ஷியல் பைலட் பயிற்சியை முடித்த கெளரவ் கத்ரி தொழில் முனைவர் ஆகவேண்டும் என்றே விரும்பினார். அது 2014ல் ஃப்ளிப்கார்ட்டிலும் அமேஸான் இந்தியாவிலும் ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட்ஃபோன் கவர்கள், ப்ளூடூத் இயர்ஃபோன்கள் முதலான எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் விற்பனை வேகமெடுத்த காலகட்டம்.
இந்த இ-காமர்ஸ் தளங்களில் ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனை கோலோச்சத் தொடங்கிய காலக்கட்டத்தில், இவ்விரு சந்தைகளிலும் வெளிநாட்டு முதலீடுகள் கொட்டப்பட்டன. குறிப்பாக, அளவுக்கு அதிகமான தள்ளுபடி விலைகளில் ஸ்மார்ட்ஃபோன்கள் விற்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஸ்மார்ட்ஃபோன் கவர்கள் முதலான செல்போன் சார்ந்த பொருள்களின் சந்தையும் முளைத்தது. இந்த ஏரியாவில்தான் தடம் பதிக்க விரும்பினார், குருகிராமைச் சேர்ந்த கெளரவ்.
"ஸ்மார்ட்ஃபோன் கவர்கள் பிரிவில் நல்ல முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன். இதை என் கஸின் அமித்திடம் சொன்னபோது, அவரும் ஆர்வத்துடன் கரம்கோத்தார்," என்கிறார் 30 வயது கெளரவ்.
ஃபேஷன் மேனேஜ்மென்ட் துறையைச் சேர்ந்த 38 வயது அமித், சர்வதேச ஃபேஷன் பிராண்ட்களுக்கு சப்ளை செயின் பார்ட்னராக தொழில்புரிந்து வந்தார். கெளரவும் அமித்தும் ஒன்றாகத்தான் வளர்ந்தார்கள் என்றாலும், அவர்கள் தங்கள் இளம் வயதில்தான் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள்.
புதிதாக தொழில் தொடங்குவதன் மூலம் மீண்டும் அந்த நெருக்கத்தை மீட்டெடுக்க நினைத்தனர். அப்படித்தான் தங்களது சேமிப்புப் பணமான ரூ.7.18 கோடியுடன் 'நாய்ஸ்' (Noise) எனும் நிறுவனத்தை 2014ல் அவர்கள் தொடங்கினர்.
என்ன இயங்குகிறது 'நாய்ஸ்'?
கெளரவும் அமித்தும் சீன தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஸ்மார்ட்ஃபோன் கவர்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்தனர். இ-காமர்ஸ் தளங்களில் ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனை சக்கைப்போடு போடத் தொடங்கிய காலகட்டத்தில் இவர்களது முதல் முயற்சியே மகத்தான வெற்றி கண்டது. நிறுவனம் தொடங்கிய முதல் சில ஆண்டுகளில் மொபைல் ஆக்ஸசரீஸ் விற்பனையில் 'நாய்ஸ்' சிறப்பிடம் பெற்றதாகச் சொல்கிறார் கெளரவ்.
ஆனால், இந்தக் களத்தில் 'நாய்ஸ்' மட்டுமே இல்லை. நல்ல சந்தைப் போக்கு நிலவியதால், சின்னச் சின்ன நிறுவனங்கள் தொடங்கி, முறைப்படுத்தாத நிறுவனங்கள் வரை பலரும் போட்டி போட்டு விற்பனை செய்தனர். இதனால், நல்ல பிராண்டுகளும் போட்டியை சமாளிக்கக் கூடிய விலையை நிர்ணயிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
"ஸ்மார்ட்ஃபோன் ஆக்ஸசரீஸ் சந்தை என்பது எளிதில் யார் வேண்டுமனாலும் நுழையக் கூடியது. இதனால், தரமற்ற பிராண்டுகளின் வருகையும், கச்சிதமற்ற சின்னச் சின்ன நிறுவனங்களும் உள்ளே புகுந்ததால், அனைத்து நிறுவன பொருள்களின் விலையும் கடும் சரிவை சந்தித்தன. இதனால், எங்கள் நிறுவனத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எங்களின் நிகர லாபம் பெருமளவு பாதிக்கப்பட்டதுடன் இழப்புகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது," என்கிறார் கெளரவ்.
ஆனால், தங்கள் நிறுவனம் மென்மேலும் பாதிப்படையாமல் நிமிர்ந்து நிற்க, கொஞ்சமும் காத்திருக்காமல் 'நாய்ஸ்' நிறுவனர்கள் இருவரும் செயல்படத் தொடங்கினர். ஸ்மார்ட் வியரபில்ஸ் மற்றும் ப்ளூடூத் இயர்போன்கள் குறித்து ஆய்வு செய்தனர். அவற்றை தங்களது தயாரிப்புப் பட்டியலில் இணைத்தனர்.
இவ்விரு தயாரிப்புகளையும் 'நாய்ஸ்' 2018ல் தொடங்கியது. உயர்தர வசதிகளுடன், வாங்கத்தக்க விலையில் நல்ல தரமான ஸ்மார்ட் வியரபில்ஸ் மற்றும் ப்ளூடூத் இயர்போன்களைத் தருவதுதான் இவர்களது வியூகத்தின் சிறப்பம்சம்.
வெற்றி வியூகம் இதுதான்...
சீனாவில் பெரிய அளவில் ஒரிஜினல் டிசைன் தொழிற்சாலைகளுடன் கரம்கோத்த 'நாய்ஸ்', தங்களது தயாரிப்புகளின் செலவினத்தை குறைத்துக்கொண்டது. குறிப்பாக, மொத்த விற்பனைக்காக மிகப் பெரிய அளவில் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் சீன நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தது நல்ல பலனைத் தந்தது.
இதுகுறித்த விவரிக்கும் கெளரவ்,
"உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளுக்காக நல்ல தரமான பொருள்களை தயாரித்து வழங்கவே விரும்பினோம். இதற்காக, சிறந்த ஆலைகளுடன் கரம்கோத்தோம். இதன்மூலம் தயாரிப்புச் செலவும் குறைந்து, தரமான தயாரிப்புகளையும் விற்பனை செய்ய முடிந்தது," என்கிறார்.
தங்கள் தொடர்பில் உள்ள உற்பத்தி ஆலைகளிடம் இருந்து தங்களது தயாரிப்புகளை இறுதி செய்வதற்காக, 'நாய்ஸ்' தனியாகவே ஒரு ஆர் அண்ட் டி மற்றும் டிசைம் டீம்களை வைத்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, மற்ற பிராண்டுகள் நிர்ணயித்திருக்கும் விலையைவிட குறைந்த விலையில் தங்களது பொருள்களை சந்தையில் விற்கப்படுகின்றன.
அதேநேரத்தில், பிரபலமான பிராண்டுகளில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களும் தங்களது பொருள்களிலும் இருப்பதை உறுதி செய்துகொள்கின்றனர்.
ஜேபிஎல், ஜாப்ரா, சென்ஹெய்ஸர், சோனி, ரியல்மீ மற்றும் அமேஸ்ஃபிட் ஆகியவை பிரபலமான போட்டியாளர்களாக உள்ளனர். இந்த நிலையில், தங்களது புதிய தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஃபீட்பேக் வாங்குவது, ஒவ்வொரு மாதமும் புதிய தயாரிப்புகளை வெளியிடுவது, தற்போது தரப்படும் சலுகைகளை உயர்த்துவது முதலான நடவடிக்கைகள் மூலம் போட்டியாளர்களை எதிர்கொள்வதாகச் சொல்கிறார் கெளரவ்.
இந்தியாவில் 2018ல் நாய்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'ட்ரூலி ஒயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள்' முன்னோடியான ஒன்று என்கிறார் அவர். இதுபற்றி விவரிக்கும் போது,
"அசல் ஒயர்லெஸ் இயர்போன்களை பொறுத்தவரையில், எங்களுக்கு முன்பே போஸ், ஆப்பிள் மற்றும் ஜாப்ரா ஆகிய நிறுவனங்கள் சந்தையில் தடம் பதித்தனர். ஆனால், அவர்களுடைய தயாரிப்புகளின் விலை மிக மிக அதிகம். நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை குறைந்த விலையில் தருகிறோம்," என்கிறார் கெளரவ்.
நாய்ஸ் நிறுவனம் தள்ளுபடி தருவதை தங்களது பொருள்களின் மதிப்பைக் குறைப்பதாகக் கருதுகிறது. அதேநேரத்தில், சற்றே மந்தமாக விற்பனையாகும் மாடல்களுக்கு மட்டும் சலுகை விற்பனையைக் கடைபிடிக்கிறது. தங்களது ப்ரோடக்டுகளின் விலையை ரூ.2,000 முதல் ரூ.7,000 வரை நிர்ணயித்துள்ளது. இந்நிறுவனத்தில் அதிகம் விற்பனையாவது ரூ.3,000 முதல் ரூ.5,000 வரையிலான விலைகொண்ட மாடல்கள்தான்.
சீனாவின் மிகப் பெரிய உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, புத்தாக்கத்தில் கவனம் செலுத்தி, லாபத்தைக் குறைத்து விற்பனை செய்வதுதான் 'நாய்ஸ்' நிறுவனத்தின் சக்சஸ் ஃபார்முலா. இந்த உத்திகள்தான் தங்களது விற்பனையை வெகுவாகக் கூட்டி, நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைக்கத் துணைபுரிவதாகச் சொல்கிறார் கெளரவ்.
நாய்ஸ் நிறுவனம் வசம் இப்போது 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும் நான்கு ப்ரோடக்டுகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.
"ட்ரூலி ஒயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் மற்றும் ஸ்மார்ட் வியரபில்ஸ் பிரிவில் நாங்கள் முன்னணி பிராண்டாக உருவெடுத்திருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் ரூ.25 கோடிக்கு விற்பனையாகிறது," என்று பெருமிதமாகச் சொல்கிறார் கெளரவ்.
ஓர் ஆண்டுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட ப்ரோடக்ட் மட்டுமே அதிகளவில் ரிட்டர்ன் வந்துகொண்டிருந்தது. உடனடியாக அந்த ப்ரோடக்டின் விற்பனையை நிறுத்திய நாய்ஸ் நிறுவனம், அதுகுறித்து வாடிக்கையாளர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் விற்பனைக்கு செய்தது.
மெட்ரோ நகரங்களின் 18 முதல் 25 வயது வரையிலான மில்லினியல்ஸ்தான் நாய்ஸ் நிறுவனத்தின் இலக்கு. தற்போது, இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு பகுதிகளிலும் சிறு கடைகள் மற்றும் ஸ்டோர்கள் மூலம் ஆஃப்லைனிலும் விற்பனை நடந்து வருகிறது.
"எங்களது ஆஃப்லைன் வியூகத்துக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. நாங்கள் ஆஃப்லைன் விற்பனையைத் தொடங்கி ஏழு மாதம்தான் ஆகிறது. அதற்குள் எங்கள் மொத்த வருவாயில் 10 சதவீதத்தை ஆஃப்லைன் தந்துவிட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆஃப்லைன் விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
எங்களது நிறுவனத்தை மென்மேலும் விரிவுப்படுத்த, நாட்டிலுள்ள மிகப் பெரிய ரீடெயில் ஸ்டோர்களுடன் கரம்கோக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆன்லைன் - ஆஃப்லைன் ஆகிய இரு சந்தைகளிலும் இன்னும் தீவிரமாக செயல்படப்போகிறோம். நாய்ஸ் நிறுவனத்தின் ஆண்டு நிகர விற்பனையை ரூ.500 கோடியாக உயர்த்த விரும்புகிறோம்," என்கிறார் கெளரவ் நம்பிக்கையுடன்.
ஆங்கிலத்தில்- ரிஷப் மன்ஸூர் | தமிழில்: ப்ரியன்