2 ஊழியகள், 2 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘இஸ்திரிபெட்டி’ வளர்ச்சிக் கதை!
சென்னையைச் சேர்ந்த ’இஸ்திரிபெட்டி’ இன்று ஓயோ, ஃபோர்ட் போன்ற பெரிய வாடிக்கையாளர்களுக்கு ஸ்டீம் அயர்ன் மற்றும் சலவை சேவைகளை வழங்குகிறது.
முதல் அபிப்ராயம் என்பது ஒருவரது தோற்றத்தை வைத்து உருவாகிறது. நேர்த்தியான ஆடைகளுக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே சுத்தமான, அயர்ன் செய்யப்பட்ட ஆடைகளையே விரும்புவார்கள்.
நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் உடைகளை சலவை செய்து தருபவருடன் ஏதோ ஒரு வகையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்போம். வேலையின் தரம் நிறைவாக இல்லாதது, துணிகளில் கறைகள் படிந்திருப்பது, தொலைந்து போயிருப்பது, சேதமாகியிருப்பது இப்படி பல்வேறு காரணங்களுக்காக நாம் சண்டையிட்டிருப்போம்.
மக்கள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண ‘இஸ்திரிபெட்டி’ ‘Isthri Petti' என்கிற நிறுவனத்தை 2017-ம் ஆண்டு நிறுவியுள்ளார் சந்தியா நம்பியார். இந்நிறுவனம் துணி பராமரிப்பு சேவை வழங்குகிறது. இங்கு துணிகள் மிகவும் கவனமாக கையாளப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ப துணிகள் துவைக்கப்பட்டு அயர்ன் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
ஸ்டீம் அயர்ன் மற்றும் சலவை வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் பி2பி மற்றும் பி2சி வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறது.
”நறுமண அயர்னிங் முறையில் அயர்ன் செய்து ஃப்ரெஷ்ஷான, சுத்தமான துணிகளை எங்கள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்க விரும்புகிறோம். இவை புதிது போன்றே வாசனையுடன் இருக்கும்.
இந்தியாவில் சலவை என்பது ஒழுங்குபடுத்தப்படாத பிரிவாகவே உள்ளது. ’இஸ்திரிபெட்டி’ அறிமுகம் செய்தவன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சோர்வளிக்கும் இந்த வேலையில் இருந்து விடுதலையளித்து மகிழ்ச்சியையும் திருப்தியையும் வழங்க விரும்புகிறோம்,” என்றார் சந்தியா.
சென்னையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் வீடு, அலுவலகம் என வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்தில் இருந்து சலவை செய்யவேண்டிய துணிகளை சேகரித்து சலவை செய்து மீண்டும் டெலிவர் செய்துவிடுகிறது. இதனால் துணிகளை சலவை செய்பவர்களுடன் அன்றாடம் போராடவேண்டிய அவசியம் இருக்காது. பண பரிவர்த்தனைகளும் நேரம் விரயமாவதும் தவிர்க்கப்படும்.
துவக்கம்
இந்தியர்கள் பயன்படுத்தும் ஆடை வகைகளைப் பொறுத்தவரை துணிகளைச் சலவை செய்வதும் அயர்ன் செய்வதும் விரும்பத்தகாத பணிகளில் ஒன்றாகவே உள்ளது. ”நான் பணியில் இருந்ததால் துணி துவைக்கும் வேலை என்பது வெறுப்பை ஏற்படுத்தியது. கறை படிவது, துணிகள் தொலைந்துபோவது போன்ற பிரச்சனைகளுக்காக சலவை செய்பவர்களுடன் போராடவேண்டியிருந்தது,” என்றார்.
”இதுவே என்னை சிந்திக்க வைத்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த சேவை அவசியமான ஒன்றாகும். இருப்பினும் இது பழமையான முறையிலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் அருகில் இருக்கும் கடைகளைத் தொடர்புகொண்டு மளிகை பொருட்கள் பெறப்பட்டது. செயலிகள் வடிவில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்ற சேவை சலவை பிரிவில் இல்லாததைக் கண்டு அதை உருவாக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது,” என்றார்.
மனிதவளப் பிரிவில் பணியாற்றி வந்த சந்தியா சலவைத் துறை குறித்து ஆராய்ந்தபோது இந்தத் துறை ஒழுங்குபடுத்தப்படாமலும் அதிகம் ஆராயப்படாமலும் தொழில்முறை அணுகுமுறையின்றி இருப்பதையும் உணர்ந்தார். ஒத்த சிந்தனையுடைய நண்பர்களுடன் இந்தத் திட்டம் குறித்து கலந்துரையாடினார். அவ்வாறு உருவானதுதான் ’இஸ்திரிபெட்டி’.
2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையின் நுங்கப்பாக்கத்தில் சிறிய அளவில் ஸ்டீம் அயர்ன் செய்யப்படும் யூனிட்டாக தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் பள்ளிக்கரணையில் ஒரு தொழிற்சாலையாக மாறியுள்ளது. இங்கிருந்து சலவை மற்றும் ஸ்டீம் அயர்ன் சேவைகள் வழங்கப்படுகிறது. விருந்தோம்பல் பிரிவில் உள்ள பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் சில்லறை வர்த்தக வாடிக்கையாளர்களுக்கும் சேவையளிக்கிறது.
OYO மற்றும் Compass நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது இஸ்திரிபெட்டி நிறுவனத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
”நாங்கள் நகர் முழுவதும் உள்ள OYO நிறுவனங்களுக்கு சேவையளிக்கிறோம். ஃபோர்ட், ஷெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் Compass வாயிலாக சேவையளிக்கிறோம். எங்களைப் போன்ற ஸ்டார்ட் அப்களுக்கு இது ஒரு வலுவூட்டும் அனுபவமாகும்,” என்றார் சந்தியா.
சவால்கள்
இஸ்திரிபெட்டி அதன் வணிகத்தை நிறுவும் சமயத்தில் பல்வேறு சவால்களை சந்தித்தது. வழக்கமான அயர்னிங் முறையுடன் ஒப்பிடுகையில் ஸ்டீம் அயர்னிங் முறை எவ்வாறு மாறுபட்டது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, துணிகளின் பாதுகாப்பையும் தரத்தையும் உறுதிசெய்வது, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களையும் வேலைக்குச் செல்பவர்களையும் சேவை சென்றடையும் வகையில் குறைந்த கட்டணம் நிர்ணயிப்பது போன்றவை இதில் அடங்கும்.
எனினும் சந்தையில் சாதகமான சூழல் இருப்பதாக சந்தியா குறிப்பிடுகிறார்.
“சந்தையில் பி2பி, பி2சி என இரு பிரிவுகளிலும் மிகப்பெரிய அளவில் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஐடி பூங்கா, நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவை அதிகரித்திருப்பதால் கடந்த இரண்டாண்டுகளில் விருந்தோம்பல் மற்றும் தங்குமிட வசதி தொடர்புடைய துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகிறது. எனவே பி2பி மற்றும் பி2சி பிரிவுகளில் சலவை வணிகத்தில் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன,” என்றார்.
2019-ம் ஆண்டில் சலவை பராமரிப்பு பிரிவு 3,963 மில்லியன் டாலர் மதிப்புடையது என்றும் 2023-ம் ஆண்டு வரை 3.7 சதவீதம் ஆண்டு வளர்ச்சி இருக்கும் என்றும் மதிப்பிடப்படுவதாக Statista குறிப்பிடுகிறது.
இந்த ஸ்டார்ட் அப் PickMyLaundry, Urban Dhobi, Tooler போன்ற சலவை மற்றும் அயர்னிங் ஸ்டார்ட் அப்களுடன் சந்தையில் போட்டியிடுகிறது. எனினும் தரமான சேவை, டெலிவரி நேரம், குறைவான கட்டணங்கள் போன்றவை இஸ்திரிபெட்டி நிறுவனத்தை வேறுபடுத்திக் காட்டும் தனித்துவமான அம்சங்கள் என்று சந்தியா சுட்டிக்காட்டுகிறார்.
முதலீடு மற்றும் வருவாய்
இஸ்திரிபெட்டி நிறுவனம் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஸ்டார்ட் அப் 15 ஊழியர்களுடன் செயல்படுகிறது.
தற்சமயம் 350-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் 3 கிலோ துணிகளைத் துவைப்பதற்கு 200 ரூபாயும் 3 கிலோ துணிகளை துவைத்து அயர்ன் செய்வதற்கு 300 ரூபாயும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அத்துடன் 15 கிலோ துணிகளுக்கு ஃபேமிலி பேக்கேஜ் கட்டணமாக 900 ரூபாயும் நிர்ணயித்துள்ளது. முதலீடு குறித்து சந்தியா பகிர்ந்துகொண்டபோது,
“இஸ்திரிபெட்டி ஆரம்பத்தில் 2 லட்ச ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது. துணிகளை அயர்ன் செய்துகொடுக்கும் சேவை மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் துணிகளைத் துவைக்கும் சேவைக்கு அதிக தேவை இருப்பதை உணர்ந்து அதுவும் இணைத்துக்கொள்ளப்பட்டது. பி2பி மற்றும் பி2சி வாடிக்கையாளர்களின் சேவைக்காக துவைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு ஏஞ்சல் முதலீட்டாளர்கள் உதவியுடன் 11 லட்ச ரூபாய் நிதி உயர்த்தப்பட்டது. அடுத்தகட்டமாக செயல்பாடுகளை விரிவடையச் செய்ய முதலீட்டாளர்களை எதிர்நோக்கியுள்ளோம்,” என்றார்.
2017-ம் ஆண்டு இந்த ஸ்டார்ட் அப்பின் விற்றுமுதல் 4.2 லட்ச ரூபாய். இன்று ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. தற்போதுள்ள வசதிகளைக் கொண்டு ஒரு விற்பனைக்கு 5 லட்ச ரூபாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த சேவைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதால் அடுத்த ஆண்டில் நகரின் முக்கியப் பகுதிகளில் கூடுதலாக சில்லறை வர்த்தக யூனிட்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
”நீண்ட கால நோக்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளித்து வேலை வாய்ப்பு வழங்கி அவர்களுக்காக ஃப்ரான்சைஸ் முறையை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இது அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதுடன் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிறப்பாக ஒருங்கிணையவும் வழிவகுக்கும்,” என்றார் சந்தியா.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா