60 லட்சம் டர்ன்ஓவர் – சர்வதேச தரத்தில் சாக்லேட் ப்ராண்ட் நிறுவிய சென்னை தொழில் முனைவர்!
சாக்லேட் தயாரிப்பு துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் சாக்லேட் தயாரிப்பில் ஈடுட்ட நிதின் கார்டியா சாக்லேட் தயாரிப்பில் பயிற்சியளிக்கும் அகாடமி ஒன்றையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்தியர்கள் பெரும்பாலும் இனிப்பை ரசித்து சாப்பிடுவார்கள். எத்தனையோ இனிப்பு வகைகள் பிரபலமாக இருந்தாலும்கூட சாக்லேட் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.
யூகே-வைச் சேர்ந்த கேட்பரி நிறுவனம் இந்திய சாக்லேட் சந்தையில் மிகப்பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. இருப்பினும் எத்தனையோ மேட் இன் இந்தியா பிராண்டுகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து பிரபலமாகி வருகிறது.
அத்தகைய பிராண்டுகளில் ஒன்று சென்னையைச் சேர்ந்த kocoatrait. இந்நிறுவனத்தை நிறுவியவர் நிதின் கார்டியா. இவர் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் Cocoatrait நிறுவினார்.
ஆர்வம் தொழிலாக மாறியது
யூகே-வில் சில்லறை வர்த்தக மேலாண்மை பிரிவில் முதுநிலை பட்டம் முடித்த நிதின், கோத்ரேஜ் குழுமத்தில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். மேலும், பல நிறுவனங்கள் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் பிரிவில் வணிகத்தில் ஈடுபட வழிகாட்டியுள்ளார்.
2014-ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு சாக்லேட் வணிகத்தில் ஈடுபடத் தீர்மானித்தார். உலகின் ’சாக்லேட் மெக்கா’ என்றழைக்கப்படும் பெல்ஜியம் சென்றார். 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு செய்தார்.
பெல்ஜியம் சாக்லேட்டுகளில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட நிதின், இந்தியாவிலேயே இந்தப் பிரிவில் சிறப்பிக்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தார்.
பெல்ஜியம் பயணத்தின் போது சாக்லேட் விற்பனையாளர் மார்டின் கிரிஸ்டி என்பவரை சந்தித்தார். பின்னாட்களில் இவரே நிதினின் ஆலோசகராக மாறி வழிகாட்டத் தொடங்கினார்.
நிதின் சாக்லேட் தயாரிப்பு மற்றும் சுவை பற்றிய பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள மார்டின் உதவியுள்ளார். குறிப்பாக சாக்லேட் தயாரிப்பு முறைகளில் ஒன்றான பீன்– டூ-பார் முறை நிதினைப் பெரிதும் கவரந்தது.
அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இந்தத் தயாரிப்பு முறை முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருந்தது.
”பீன்– டூ-பார் சாக்லேட் தயாரிப்பு முறையில் விவசாயிகளிடமிருந்து கோக்கோ கொட்டைகள் வாங்கப்படும். இவற்றை பிரித்தல், தரப்படுத்துதல், வறுத்தல், வெளிப்புற தோல் நீக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இறுதித் தயாரிப்பு தயாராகிவிடும்,” என்று விளக்குகிறார் நிதின்.
இந்தப் பிரிவு குறித்து நன்றாக கற்றறிந்துகொண்ட நிதின், செய்லபாடுகளைத் தொடங்கினார்.
நிதினின் அப்பா ஆட்டோமொபைல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் நிதினிற்காக ஒதுக்கிக் கொடுத்த அறையில் நிதின் வேலையைத் தொடங்கினார்.
சிறியளவில் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபடுவதே அவரது திட்டம்,. இதற்குத் தேவைப்படும் இயந்திரங்களில் சிலவற்றை வாங்கினார். சிலவற்றை நிதினே வடிவமைத்து உருவாக்கினார். இந்த ஏற்பாடுகள் முடிந்ததும் 36 மணி நேரம் எடுக்கக்கூடிய சாக்லேட் தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
Cocoashala மற்றும் Kocoatrait
விரைவில் நிதினின் மனைவி பூனம் கார்டியா வணிக செயல்பாடுகளில் இணைந்துகொண்டார். சாக்லேட் தயாரிப்பு பற்றி பயிற்சியளிக்க அகாடமி திறக்கலாம் என்கிற யோசனையை பூனம் முன்வைத்துள்ளார்.
2015-ம் ஆண்டு பூனம், நிதின் இருவரும் இணைந்து சாக்லேட் தயாரிப்பில் பயிற்சியளிக்கும் அகாடமியான Cocoashala நிறுவினார்கள்.
”இது நான்கு நாட்கள் நடக்கும் பயிற்சி. சென்னையில் நாங்கள் தத்தெடுத்த விவசாய நிலத்தில் இருந்து முதல் நாள் கோக்கோ கொட்டைகள் வாங்கப்படும். அடுத்த மூன்று நாட்களில் அந்த கொட்டைகள் பிராசஸ் செய்யப்படும்,” என்கிறார் நிதின்.
ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவர்களது அகாடமியில் இணைந்தார்கள். இன்று மிகச்சிறப்பாக பயிற்சியளித்து வளர்ச்சியடைந்துள்ள Cocoashala டர்ன்ஓவர் 20 லட்ச ரூபாய்.
”வெளிநாட்டவர்கள் சாக்லேட் கோர்ஸ்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். இந்தியர்களுக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் தயங்கினார்கள். எங்களுக்கு சொந்தமாக பிராண்ட் இல்லாததே இந்தத் தயக்கத்திற்குக் காரணம்,” என்று நிதின் விவரித்தார்.
இதன் காரணமாக Kocoatrait என்கிற சொந்த பிராண்ட் உருவாக்கினார்கள். இது மேட் இன் இந்தியா சாக்லேட் தயாரிப்பு. 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆம்ஸ்டர்டம் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் இந்த பிராண்ட் அறிமுகமானது.
கழிவுகளற்ற தயாரிப்பை உருவாக்கவேண்டும் என்பதில் நிதின் உறுதியாக இருந்தார். பேக்கேஜ் செய்வதற்கு மரக்கூழ் அல்லது பிளாஸ்டிக் பயன்படுத்தவில்லை. ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளில் உருவாகும் காட்டன் கழிவுகள், கோக்கோ கொட்டைகளின் ஓடுகள் போன்றவற்றைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் தயாரிக்கக் கற்றுக்கொண்டார். பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இதைக் கற்றறிந்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் Kocoatrait 7,000 சாக்லேட்கள் விற்பனை செய்துள்ளது. இந்த பிராண்ட் 12 வகையான சாக்லேட்களை விற்பனை செய்கிறது. 190 ரூபாய் முதல் 235 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் 60 லட்ச ரூபாய். Cocoashala அகாடமி மூலம் 25 லட்ச ரூபாய், உபகரணங்கள் மற்றும் கோக்கோ கொட்டைகள் ட்ரேடிங் மூலம் 25 லட்ச ரூபாய், Kocoatrait மூலம் 10 லட்ச ரூபாய் என பெறப்படுகிறது.
போட்டி மற்றும் சவால்கள்
நிதின் தனது வணிக பயணத்தில் குறிப்பிட்டு சொல்லுபடியான சவால்கள் எதையும் சந்திக்கவில்லை என்கிறார். இருப்பினும் இந்தத் துறை சார்ந்த சவால்கள் மற்றும் போட்டி குறித்து விவரித்தார்.
“இந்தியாவில் பீன் – டு-பார் சாக்லேட் துறையின் தற்போதைய விற்பனை அளவு 10 கோடி ரூபாயாக இருக்கிறது. சர்வதேச சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறு துளி மட்டுமே. இதுதவிர கேட்பரி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுடன் எங்களைப் போன்ற சிறு பிராண்ட் போட்டியிடுவது கடினம்,” என்கிறார்.
தற்போது இந்தியாவில் கிடைக்கும் கோக்கோ கொட்டைகள் சிறந்த தரத்துடன் இருப்பதில்லை என்று குறிப்பிடும் நிதின் அரசு அமைப்புகளுடனும் சில தனியார் நிறுவனங்களுடனும் இது தொடர்பாக பணியாற்றி வருகிறார்.
அதிக முதலீடு, சிறியளவில் தொடங்குவதற்கான உபகரணங்கள் கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் இந்திய சாக்லேட் துறை வளர்ச்சியடையாமல் உள்ளது.வரும் நாட்களில் மேலும் பல்வேறு வகைகளை இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார் நிதின்.
”பீன் –டு-பார் சாக்லேட்களுக்கான தேவை 200 சதவீதம் அதிகரித்துள்ளது. கோக்கோ சதவீதம் அதிகமுள்ள சாக்லேட் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தற்போதுள்ள தயாரிப்பில் 70 சதவீத கோக்கோ உள்ளது,” என்கிறார்.
வெயிலில் உலரவைக்கப்பட்டு தயாரிக்கப்படும் Raw Chocolate அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு நோய் எதிர்பாற்றலை மேம்படுத்தும் உணவில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் இதற்கு பெரிதும் உதவக்கூடிய Raw Chocolate மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா