இந்திய ராணுவத்துக்கு உதவப் போகும் சென்னை ட்ரோன் நிறுவனம்!
ராணுவத்துக்கு பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய ட்ரோன்களை ஸ்டார்ட்அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் தயாரித்து வழங்க உள்ளது.
ராணுவத்துக்கு பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய ட்ரோன்களை ஸ்டார்ட்அப் நிறுவனமான ’கருடா ஏரோஸ்பேஸ்’ தயாரித்து வழங்க உள்ளது என அறிவிப்பு வந்துள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம்:
2015ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு சென்னை மற்றும் குர்கானில் ட்ரோன் தயாரிப்புக்கான இரண்டு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 200 நபர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
டெலிவரி, கண்காணிப்பு, விவசாயம், பாதுகாப்பு போன்ற பணிகளுக்கான ட்ரோன்களை உருவாக்கி வருகிறது கருடா ஏரோஸ்பேஸ். கடந்த நிதி ஆண்டில் ரூ.16 கோடி வருவாய் ஈட்டியுள்ள இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

2024ம் ஆண்டில் ஒரு லட்சம் ட்ரோன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து தீவிரமாக வேலை செய்து வருகிறது.
மத்திய அரசின் 'கிஷான் ட்ரோன் சுவிதா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தார். அதில், ‘கருடா ஏர்ஸ்பேஸ்’ வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அதோடு, இந்நிறுவனம் கேரள மாநிலம் இடுக்கி மலைப்பகுதியில் சிக்கிக் கொண்ட பாபு என்ற இளைஞரை மீட்பதற்கான ட்ரோன் சேவையை வழங்கியது.
தற்போது வேளாண் துறையை அடுத்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ராணுவத்தில் கால்பதித்துள்ளது.
ராணுவத்திற்கு ட்ரோன் சப்ளை:
எம்.எஸ். தோனி ஆதரவு பெற்ற உள்நாட்டு ஆளில்லா விமான உற்பத்தியாளரான கருடா ஏரோஸ்பேஸ், நவீன போர்க்காலத்திற்கு ஏற்ற வகையில் ட்ரோன்களை இயக்கத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க உள்ளது.
சென்னையை தளமாகக் கொண்ட ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான இது, தொழில்நுட்பக் குழுவை அனுப்பி, மாற்றங்களை மேற்கொள்ளவும், தேசத்திற்கான தங்கள் கடமைகளைச் செய்யும்போது, காலக்கெடு மற்றும் செயல்பாட்டு வேகத்தை பராமரிக்க ராணுவத்திற்கு உதவவும் அழைக்கப்பட்டுள்ளது.
இராணுவம் தனது அன்றாட நடவடிக்கைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க விரும்புகிறது. மேலும், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் நெட்வொர்க்குகளைக் கண்டறிதல், தடுப்பதன் மூலம் சிறப்புப் பணிகளின் செயல்திறனை அதிகரிக்கவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் நடைமுறைகளை ஆய்வு செய்து, கண்காணிப்பு மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதன் மூலம் இந்திய வீரர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க அவர்களின் ‘மேக் இன் இந்தியா’ ட்ரோன்கள் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஒரு தீர்வு வழங்கப்பட உள்ளது.
ஆளில்லா விமானங்களை மிகவும் திறம்பட பயன்படுத்த, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிபுணத்துவம் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத் துறையில் அவர்களுக்கு இருக்கும் அறிவைப் பயன்படுத்திக் கொள்ள ராணுவம் முடிவெடுத்துள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,
"கருடா ஏரோஸ்பேஸ், இந்திய ராணுவத்திற்குத் தேவையான தனித்துவமான ட்ரோன்களை வடிவமைத்து கொடுப்பதன் மூலமாக தனது வரலாற்றில் குறிப்பிடத்தக்க முத்திரையை பதித்துள்ளது. இந்திய ராணுவம் தனது போர்த்திறன் கட்டமைப்புகள் மற்றும் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக பன்நோக்கு ட்ரோன்கள் பயன்பட உள்ளன. இது நமது பாதுகாப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்ய உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "எங்கள் ட்ரோன்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் விரைவான கற்றல் கொண்ட இயந்திரங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன," என்றும் தெரிவித்துள்ளார்.