ரூ.150 கோடி இலக்குடன் சென்னை இளைஞரின் ட்ரோன் நிறுவன பயணம்!
பள்ளி, கல்லூரி காலத்தில் பிரபல நீச்சல் வீரராக இருந்த அக்னீஷ்வர், பின்னர் தொழில்முனைவில் கால்பதித்து, ட்ரோன்களின் தேவைகளை அறிந்து சென்னையில் ‘Garuda Aerospace' தொடங்கி, ரூ.150 கோடி வருவாய் இலக்குடன் பயணிக்கிறார்.
ரூ.16 கோடியில் இருந்து ரூ.150 கோடியை வருவாய் இலக்கு வைத்துள்ள சென்னை ஸ்டார்ட்-அப் ‘
’ பற்றி தெரிந்துகொள்ள அதன் நிறுவனர் அக்னீஷ்வரை சந்திக்கச் சென்றிருந்தேன்.அது அக்னீஷ்வரின் அறை. அந்த அறை முழுதும் விருதுகளாக நிரம்பி இருந்தது. விருது என்றவுடன் பள்ளி ஆண்டு விழா விருது (மாணவர்களுக்கு இதுவும் முக்கியம் என்பதில் மாற்று இல்லை) என ஸ்ருதியை குறைத்துக்கொள்ள வேண்டாம். அந்த அறையில் இருந்த விருதுகள் அனைத்தும் சர்வதேச விருதுகள். நீச்சலில் இந்தியாவுக்காக பங்கேற்று வெற்றி பெற்ற விருதுகள் அவை.
விளையாட்டை முக்கியமாகக் கருதிய ஒருவர் தற்போது எப்படி தொழிலில் களம் இறங்கினார்? ட்ரோன்களில் எப்படி ஆர்வம் வந்தது, ’கருடா ஏரோஸ்பேஸ்’ எப்படி செயல்பட்டுவருகிறது என்னும் பல கேள்விகளுடன் நிறுவனர் அக்னீஷ்வர் உடன் உரையாடினேன். ஸ்டார்ட் அப் குறித்து மட்டுமல்லாமல் நீச்சல் குறித்தும் தெரிந்துகொண்டேன்.
அக்னியின் தொடக்கம்
சிறு வயதில் எனக்கு நுரையீரல் சம்பந்தமான ஒரு சிறிய சிக்கல் இருந்தது. அந்த சிக்கலை போக்கவேண்டும் என்றால் நீச்சல் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதனால் நீச்சல் கற்றுக்கொள்ளச் சென்றேன். ஆனால், கற்றுக்கொள்ளத் தொடங்கிய சில ஆண்டுகளிலே நீச்சலை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன்.
14 வயதில் இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டார் அக்னீஷ்வரன். 17வயதில் தெற்காசிய போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளார். (இதுபோல பல பதக்கங்களை பெற்றவர்). அதற்குச் சான்றாகவே அவரின் அறை முழுவதும் விருதுகளும் சான்றிதழ்களும் இருந்தன.
”நீச்சலில் பல விருதுகள் பெற்றாலும் மில்லி செகன்ட் வித்தியாசத்தில் ஒலிம்பிக்கில் இந்தியாவுகாக கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தேன். இருப்பினும், சில ஆண்டுகள் நீச்சலில் கலந்துகொண்டு விருதுகளை பெற்றாலும் ஒலும்பிக்கில் கலந்துகொள்ள முடியாதது பெரிய கவலையாகவே இருந்தது. அதன் பிறகு, இதர விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்,” என்றார்.
ஒரு அகாடமி தொடங்கினேன். ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பிரத்யேக குணம் இருக்கும். நீச்சலில் போட்டியாளர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை. நாம் நம்முடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து முடித்திருந்தால் இறுதியில் யார் வெற்றி என்பது தெரியும். மற்றவர்கள் எப்படி நீந்துகிறார் என்பது குறித்து கவலைப்பட தேவையில்லை.
“இதே விஷயத்தைத்தான் என்னுடைய இதர வேலைகளிலும் நான் பின்பற்றுகிறேன். நான் என்னுடைய வேலையை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவேனே தவிர மற்றவை குறித்து கவலைப்படுவதில்லை.”
நீச்சல் டு ட்ரோன்
அந்த சமயத்தில் குழந்தைகளுக்கான இளம் கண்டுபிடிப்பாளர் நிகழ்ச்சியை உருவாக்கத் திட்டமிட்டேன். இதனை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. அப்போது வெற்றியாளர்களை கவுரவிப்பதற்காக மேலே இருந்து சாக்லேட் கொட்டினோம். அப்போதுதான் எனக்கு ட்ரோன் குறித்து தெரிந்தது. பின்னர், ட்ரோன் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொண்டேன்.
நான் என்னுடைய வேலையை மட்டுமே பார்ப்பேன் எனக் கூறியிருந்தேன். ஆனால், எப்போதெல்லாம் தேவைப்படுமோ அப்போதெல்லாம் துறைசார்ந்த வல்லுநர்களின் உதவியை பெற்றுக்கொள்வேன். அதுபோல ட்ரோன் குறித்து பல விஷயங்களைப் படித்தேன். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியை நாடினேன். அதனால் ட்ரோன்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு 2015ல் 'Garuda Aerospace’ எனும் ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கினேன்.
”ட்ரோன் என்றாலே டெலிவரி, கேமரா உள்ளிட சில விஷயங்களுக்கு மட்டுமே பயன்படும் என்னும் பொதுபுரிதல் இருக்கிறது. ஆனால் ட்ரோன்களை வைத்து பல விஷயங்களை செய்ய முடியும், செய்திருக்கிறோம். விவசாயம், பொருட்களை எடுத்துச் செல்லுதல், ராணுவத்துக்கு உதவி என பல இடங்களிலும் பயன்படுத்த முடியும்,” என்கிறார்.
சோலர் பேனல்களை சுத்தம் செய்வது என்பது முக்கியமான பணி. ஆனால், இதனை சுத்தம் செய்ய அதிக தண்ணீர் செலவானது. ஆனால் எங்களுடைய ட்ரோன்களை மூலம் மிக மிக குறைந்த அளவு நீரை பயன்படுத்தி பேனல்களை சுத்தம் செய்கிறோம், என ட்ரோன்களின் தேவைகளை அடுக்கினார்.
கருடா ஏரோஸ்பேஸ் செயல்பாடுகள்
ட்ரோன்களில் ஆரம்பத்தில் சேவையை மட்டுமே வழங்கினோம். அதாவது, நிறுவனங்களுக்கு தேவையான ட்ரோன்களை பைலட்களுடன் அனுப்பி வைப்போம். சேவை முடிந்தவுடன் அந்த ட்ரோன் வேறு நிறுவனங்களின் சேவைகாக அனுப்பி வைப்போம். இதுதான் எங்களுடைய செயல்பாடாக இருந்தது.
ஆனால், கோவிட்டுக்கு முன்பு வரை ‘கருடா ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துக்கு பெரிய வருமானம் இல்லை. ட்ரோன் என்பது அவசியமில்லாததாகவே தெரிந்தது. ஒரு கட்டத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. நிறுவனத்தை மூடலாமா என்று கூட யோசித்தேன். அப்போதுதான் கோவிட் வந்தது.
கோவிட் காலத்தில் ட்ரோன்களுக்கு நிறைய ஆர்டர்கள் வந்தது. பல இடங்களில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்தது. தவிர ட்ரோன் பயன்படுத்தி பல வேலைகளை செய்ய முடியும் என்பதையும் நிறுவனங்கள் புரிந்துகொண்டன.
இதுவரை நாங்கள் ட்ரோன்களை சேவையாக மட்டுமே கொடுத்து வந்தோம். இனி ட்ரோன்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். விவசாயத்துக்கு ட்ரோன்களை விற்பனை செய்ய இருக்கிறோம். இதன் மூலம் புதிய தொழில்முனைவோர்கள் உருவாகுவார்கள் என நாங்கள் கருதுகிறோம், என்றார்
ட்ரோன்களை வாங்குபவர் அதன் சேவைகளை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். பல விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் வாங்கிய ஆறு மாதங்களில் ட்ரோனுக்கு முதலீடு செய்த தொகையை திருப்பி எடுக்க முடியும். தவிர ட்ரோன் வாங்குவதற்கு கடன் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயத்தில் பல தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும்.
இந்தத் திட்டம் அறிமுகம் செய்த பிறகு, 2500 ட்ரோன்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2024ம் ஆண்டில் ஒரு லட்சம் ட்ரோன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம்.
மத்திய அரசின் 'கிஷான் ட்ரோன் சுவிதா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் துவக்கிவைத்தார். அதில், ’கருடா ஏர்ஸ்பேஸ்’ வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அதோடு, இந்நிறுவனம் கேரள மாநிலம் இடுக்கி மலைப்பகுதியில் சிக்கிக் கொண்ட பாபு என்ற இளைஞரை மீட்பதற்கான ட்ரோன் சேவையை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
நிதி சார்ந்த தகவல்கள்
நாங்கள் சேவை சேவை நிறுவனமாக இருக்கும்போது நிதிபெரிதாக தேவைப்படவில்லை. ஆனால், தற்போது உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பதால் முதலீடு திரட்டும் பணியில் இருக்கிறோம். தற்போது இரு இடங்களில் ஆலை இருக்கிறது. சுமார் 200 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை மற்றும் குர்கானில் ஆலை செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதை போல நான் ஓடிக்கொண்டிருப்பேன். அதே சமயத்தில் தேவைப்படும் ஆலோசனையயை பெற்றுக்கொள்வேன். என்னுடைய நிறுவனத்தின் இணை நிறுவனர் என யாரும் கிடையாது. ஆனால் 12-க்கும் மேற்பட்ட சிஎக்ஸ்ஒ-கள் உள்ளனர்.
”கடந்த நிதி ஆண்டில் 16 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியிருந்தோம். லாப வரம்பும் 24 சதவீதம் என்னும் அளவில் இருக்கிறது. இதுவரை 4 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டி இருக்கிறோம். கிரிக்கெட் வீரர் தோனி முதலீடு செய்திருக்கிறார். தற்போது உற்பத்திக்கு கூடுதல் முதலீடு தேவைப்படுவதால் 30 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறோம். சர்வதேச அளவில் பல முக்கியமான முதலீட்டாளர்களுடன் முதலீடு செய்ய முன்வந்திருகிறார்கள். விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,” என்றார்.
ஆர்டர் நன்றாக இருக்கிறதே நடப்பு நிதி ஆண்டு விற்பனை எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, கடந்த நிதி ஆண்டில் ரூ.16 கோடி மட்டுமே இருந்தது. ஆனால், இதனை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டிலே எட்டிவிட்டோம். நடப்பு நிதி ஆண்டில் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை வருமானம் இருக்கும். இதனை நோக்கி உழைத்துக்கொண்டிருக்கிறோம் என விடை கொடுத்தார் அக்னீஷ்வர்.
வளர்ந்துவரும் துறையாக ட்ரோன் இருக்கிறது. மிக கணிசமான நிறுவனங்கள் இருக்கும் இந்த துறையில் சென்னை நிறுவனம் இருக்கிறது.