வீடு வாடகைக்கு விடனுமா? சென்னை இளைஞர் தொடங்கிய வீட்டு பராமரிப்புச் சேவை நிறுவனம்!
வாடகைக்கு குடியிருப்பவர் முதல் வீட்டுப் பராமரிப்புச் சேவைகள் என அனைத்தையும் வழங்கும் நிறுவனம் தொடங்கியுள்ளார் நிஜாம்.
Findbhk சென்னையைச் சேர்ந்த நிறுவனம். கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான நிஜாம், ராஜேந்திர பிரசாத் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் சொத்து மேலாண்மை (Property aggregator) சேவைகளை வழங்குகிறது.
நிஜாம்; அண்ணா பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கோடிங் மீது ஆர்வம் ஏற்பட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச கணிணி மூலம் கோடிங் கற்றுக்கொண்டார். கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக Clazzmate என்கிற போர்டலை தொடங்கினார். ஆனால் இந்த முயற்சி எதிர்பார்த்த அளவிற்கு பலனளிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் கூப்பன் மற்றும் டீல்கள் மூலம் பணத்தை சேமிக்க Mypaisa என்கிற வலைதளத்தை தொடங்கினார். இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கேம்பஸ் மூலம் தேர்வாகி மும்பைக்கு மாற்றலானார். ACC நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதேசமயம் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பான வலைப்பக்கத்தை தொடங்கினார்.
2017-ம் ஆண்டு மேஜிக்பிரிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் ரியல் எஸ்டேட் துறையில், முறையான சொத்து மேலாண்மை நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை என்பதை உணர்ந்து குடியிருப்பு வீடுகள் வாடகைப் பிரிவில் முழுமையான சேவையளிக்கவேண்டும் என்று விரும்பினார்.
துவக்கம் மற்றும் நோக்கம்
குடியிருப்பு வீடுகள் சந்தை ஒழுங்குபடுத்தப்படாத சந்தையாகவே உள்ளது. வாடகைக்கு வீடு தேவைப்படுவோர் Magicbricks அல்லது 99acres மூலம் வீட்டு உரிமையாளர்கள் அல்லது முகவர்களின் தொடர்புகளைப் பெறமுடியும். ஆனால் ஒவ்வொரு உரிமையாளரின் அட்வான்ஸ் தொகையும் விதிமுறைகளும் மாறுபடும்.
கூடுதல் வருவாய்காக பலர் குடியிருப்புப் பிரிவில் முதலீடு செய்கின்றனர். ஆனால் அவர்களது பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக நேரம் செலவிட்டு வீடுகளில் வாடகைக்கு ஆட்களைக் குடியமர்த்த முடியாமல் பல நாட்கள் வீட்டை பூட்டியே வைத்துள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் சிலருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதுகூட தெரிவதில்லை,” என்கிறார் நிஜாம்.
எனவே வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்போர் என இரு தரப்பினரின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண விரும்பினார் நிஜாம். இந்த நோக்கத்துடன் 1.3 லட்ச ரூபாய் முதலீட்டுடன் Findbhk எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினார். 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் முறையாக இது நிறுவப்பட்டது.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு Ninjacart நிறுவனத்திலும் பின்னர் சென்னையைச் சேர்ந்த ஐடி சேவை வழங்கும் ஸ்டார்ட் அப்பிலும் பணியாற்றியவர் பிரசாத். நிஜாம் Findbhk தொடங்கிய இரண்டு மாதங்களில் பிரசாத்தையும் இணை நிறுவனராக இணைத்துக்கொண்டார்.
ஓலா வாடகைக் கார் சேவைகளை தொகுத்து வழங்குவது போல் குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு விடுவது தொடர்பான முழுமையான சேவையை வழங்கவேண்டும் என்பதே நிறுவனர்களின் நோக்கம்.
செயல்பாடுகள்
இந்நிறுவனம் வீட்டு உரிமையாளர்களின் சொத்துக்களை முறையாக பராமரிக்கும் வகையில் இரண்டு மாத டெபாசிட்டுடன் நிலையான விதிமுறைகள் மற்றும் வரையறைகள் வகுத்து இலவச பராமரிப்பு சேவையை வழங்குகிறது.
வீட்டு உரிமையாளர்களின் தலையீடு இருப்பதில்லை. தேவையற்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. டெபாசிட் தொகை குறைவு, தனித்தேவைக்கேற்ற ஃபர்னிஷிங் போன்ற வசதிகள் இருப்பதால் பணிபுரியும் ஊழியர்களும் குடும்பமாக வசிப்பவர்களும் இந்தச் சேவையை விரும்பி நாடுகின்றனர்,” என்றார் நிஜாம்.
இந்த ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்ட குறுகிய காலகட்டத்திலேயே வீட்டு உரிமையாளர்களுக்கு நிலையான வருவாய் ஈட்டித் தரும் திட்டங்களை அறிமுகப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்தி பலருக்கு சேவையளித்து வருகிறது.
கமிஷன் சார்ந்த இந்த வணிக மாதிரியின்படி ஒரு வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு 2,000 ரூபாய் சராசரியாக சேவைக் கட்டணம் பெறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
சமீபத்திய கொரோனா தொற்று சூழலானது இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை மாற்றியமைக்கச் செய்தது. வீடுகளுக்கான வாடகை சேவையளிப்பதிலேயே இந்நிறுவனம் முக்கியக் கவனம் செலுத்தியது. ஆனால் கோவிட் பெருந்தொற்று காரணமாக அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. வாடகைக்கு வீடுகளுக்கான தேவை குறைந்தது. இதனால் வீடுகள் காலியாகவே இருந்தன.
இந்நிறுவனர்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு சிறு தொகையாக 12 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்கள். அந்தத் தொகையும் பயன்படுத்தப்பட்ட நிலையில் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் கோவிட்-19 பெருந்தொற்று சூழலை எதிர்த்துப் போராடத் தீர்மானித்தனர்.
ஸ்டோரேஜ் சேவைக்கான திட்டமிடல்
இவர்களது வாடகைதாரர்களில் ஒருவர் இந்த ஆண்டு இறுதி வரை சென்னை திரும்பப் போவதில்லை என்றும் வாடகையை கொடுக்க இயலாததால் வீட்டைக் காலி செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களது நிலையை உணர்ந்த நிறுவனர்கள் சம்மதித்துள்ளனர்.
இது அந்த தனிப்பட்ட ஒரு நபரின் நிலை மட்டுமல்ல. சென்னை முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த ஊழியர்களின் ஒட்டுமொத்த நிலையும் இதுதான். வாடகை செலவைக் குறைக்க இடமாற்றத்திற்காக பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் சேவைகளுக்கு செலவிடுகின்றனர். ஆனால் இவர்கள் அடுத்த நான்கைந்து மாதங்களில் இதை மீண்டும் செய்யவேண்டியிருக்கும்.
இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட நிறுவனர்கள் இதற்குத் தீர்வுகாணத் தீர்மானித்தனர். இவர்களது மாத வாடகைச் செலவில் 90 சதவீதம் வரை குறைய உதவும் வகையில் காலியாக உள்ள குடியிருப்புகளை சேமிப்புப் பகுதிகளாக மாற்றி ஸ்டோரேஜ் அதாவது வீட்டு சாமான்களை வைத்துக் கொள்ளும் இடமாக மாற்றினார்கள். சமூக வலைதளங்களில் இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மக்கள் இந்தச் சேவையைப் பயனுள்ளதாகக் கருதியதால் தகவல் வேகமாகப் பரவத் தொடங்கியது. இரண்டு நாட்களிலேயே 50-க்கும் மேற்பட்டோர் இது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர். தங்கும் விடுதிகளில் தங்கியிருப்பவர்களும் திருமணமாகாத ஆண்களுமே அதிகம் விசாரித்துள்ளனர்,” என்றார் நிஜாம்.
இது ஒருபுறம் இருக்க வீட்டு உரிமையாளர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சிலர் தங்களது இடங்கள் காலியாக வைத்திருப்பதற்கு பதில் இதுபோன்ற சேவை மூலம் சிறு தொகையை ஈட்ட விரும்பி நிறுவனர்களைத் தொடர்புகொண்டுள்ளனர்.
நிறுவனர்கள் இந்த சேவைக்கான செயல்முறைகளை கவனமாக திட்டமிட்டனர். பொருட்களை சேமிக்க விரும்புவோர் ஒரு நாள் முன்பு இவர்களிடம் தெரிவித்தால் உரிமையாளர்களின் பிரதிநிதியின் முன்னிலையில் பொருட்களை பேக் செய்து அருகிலுள்ள சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்வார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு தெரிவித்துவிட்டு உரிமையாளர்கள் பொருட்களை திரும்ப எடுத்துச் செல்லலாம். இவர்களிடம் மாத வாடகை வசூலிக்கப்படுகிறது.
“ஆனால் வீட்டு வாடகையை ஒப்பிடும் போது இந்த ஸ்டோரேஜ் இடத்துகான வாடகை மிகக்குறைவு. 300 ரூபாயில் தொடங்கி ரூ.2500 வரை பொருட்களின் அளவுக்கு ஏற்றார் போல் கட்டணம் அமையும். அதனால் பல மாதங்கள் பூட்டிக்கிடக்கும் வீட்டுக்கு வாடகை தர விரும்பாதவர்கள், இந்த வசதியை நாடத்தொடங்கினார்கள்.”
வருவாய் மற்றும் வாடிக்கையாளர்கள்
கோவிட் காரணமாக வீட்டு வாடகைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு நிறுவனர்கள் அதிக வருவாயை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சேமிப்பு சேவை மூலமாகவும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்காக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மொபைல் பிராடக்ட் மூலமாகவும் இந்த நிதியாண்டில் 20 லட்ச ரூபாய் விற்றுமுதல் எதிர்நோக்குகின்றனர்.
இந்நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் 30-40 அழைப்புகள் தினமும் வருகின்றன. இவர்களது தளத்துடன் பயனர்கள் இணைந்திருப்பதும் 200% சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 12 வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்துள்ளனர். மேலும் பல புக்கிங் உறுதியாகும் நிலையில் உள்ளன.
செப்டம்பர் மாத இறுதிக்குள் 200 வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்க விரும்புகின்றனர். சமூக வலைதளங்களில், குறிப்பாக லிங்க்ட்இன் மூலம் பலர் ஆதரவளித்து வருகின்றனர்.
இந்நிறுவனம் தொடந்து பல புதுமையான சேவைகளை வழங்கி உரிமையாளர்களையும் வாடகைக்கு இருப்போர்களையும் சிறப்பாக ஒருங்கிணைக்கும் புள்ளியாக செயல்பட திட்டமிட்டுள்ளது.
வலைதளம்: Findbhk.com