டேட்டா அடிப்படையில் வாகனங்கள் நிர்வாகம், செயல்திறன் மேம்பட உதவும் சென்னை ஸ்டார்ட் அப்!
சுய நிதியில் உருவாக்கப்பட்ட சென்னையைச்சேர்ந்த ஸ்டார்ட் அப்பான நெஷ்.லைவ் (Nesh LIVE) தரவுகளை சேகரித்து அலசுவதன் மூலம், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு ஸ்டேக் வாகன இணைப்பு தீர்வுகளை வழங்குகிறது,
எதிர்காலத்தில் ஓட்டுனர் இல்லாத வாகனங்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பற்றி டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க் குறிப்பிட்டது முதல் இணைக்கப்பட்ட வாகனங்களின் கருத்தாக்கம் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு உற்பத்தியாளர்களிடம் இருந்து பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்டாடிஸ்டா தகவல் படி, உலகில் 236 மில்லியன் இணைக்கப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் மும்மடங்காகி 850 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்வாகனங்களை ஊக்குவித்து வரும் நிலையில் இணைக்கப்பட்ட வாகனங்கள் சார்ந்த தீர்வுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
நெஷ் டெக்னாலஜிஸ் என பதிவு செய்யப்பட்டுள்ள நெஷ்.லைவ் (Nesh.Live) உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தப் பிரிவில் செயல்பட்டு வருகின்றன.
2012ல் வெங்கட்நாதன் துவங்கிய சென்னையைச் சேர்ந்த ‘நெஷ் லைவ்’ ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு இணைக்கப்பட்ட வாகனங்களுக்கான முழு ஸ்டேக் சாஸ் (full-stack SaaS) தீர்வுகளை வழங்குகிறது.
இந்தத் தீர்வு மூலம் தயாரிப்பு நிறுவனங்கள் தரவுகளை சேகரித்து, கிளவுட் சேவைக்கு அனுப்பி வைத்து அலசி, இஞ்சின் செயல்பாடு, ஓட்டுனர் செயல்பாடு குறித்த அறிக்கைகளை அளிக்க முடியும்.
“வாகன பாதுகாப்பு, செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் அனைவருக்குமான சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வர்த்தகத்தில் இருக்கிறோம்,” என்று நெஷ் லைவ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ வெங்கட் யுவர் ஸ்டோரியிடம் கூறுகிறார்.
“லாரிகள், கார்கள் அல்லது இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்குமான பாதுகாப்பு, செயல்திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ஏனெனில், விபத்துகளை குறைப்பதற்காக நிறைய செயல்முறைகளும் கட்டுப்பாடுகளும் கொண்ட நாட்டில் பாதுகாப்பான போக்குவரத்தை மேம்படுத்துவது முக்கியம், என்கிறார் அவர்.
சேவையின் செயல்பாடு
வாகனத்தில் வடிவமைப்பு கட்டத்திலேயே இந்த ஸ்டார்ட் அப் நெஷ் லைவ் மென்பொருள் சேவையை நிறுவுகிறது. இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் நெஷ் லைவ் கிளவுட் மேடைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
“வாகனத்தில் பல்வேறு சென்சார் புள்ளிகளில் இருந்து தரவுகளை சேகரிப்பதன் மூலம் வாகனங்களை மேலும் பாதுகாப்பாகவும், செயல்திறன் மிக்கதாகவும் ஆக்க உதவுகிறோம்,” என்கிறார் வெங்கட்.
செயற்கை நுண்ணறிவு மூலம், கிளவுட்டில் சேமிக்கப்படும் தரவுகள் அலசப்பட்டு, உற்பத்தியாளர்கள், உரிமையாளர்கள், சேவை நிறுவனங்கள், கார் நிறுவன உரிமையாளர்களுக்கு உதவக்கூடிய புரிதல் மற்றும் முடிவுகளுக்கான குறிப்புகள் அளிக்கப்படுகின்றன.
“குறிப்பிட்ட சூழல்களுக்கு ஏற்ப செயல்படுவதற்கான தரவுகள் புள்ளிகளை அளிப்பதோடு, சில சூழல்களில் பிரச்சனைகளை முன் கூட்டியே கண்டறிந்து தவிர்க்கவும் வழி செய்கிறோம்,” என்கிறார் வெங்கட்.
ஐந்து மின்வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மூன்று முன்னணி ஆட்டோ, டிரக் உற்பத்தி நிறுவனங்களுடன் இந்த ஸ்டார்ட் அப் இணைந்து செயல்படுகிறது. கடந்த 24 மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை சேவையில் இணைத்துக்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த சேவை தினமும் 100 மில்லியன் தரவு புள்ளிகளை அலசி ஆராய்கிறது. மாதத்திற்கு மூன்று பில்லியன் தரவு புள்ளிகளை ஆய்வு செய்கிறது. தனது இயந்திர கற்றல் அல்கோரிதமை வாகனங்களை இயக்க சோதித்துப் பார்த்து 50 பில்லியன் புள்ளிகளை சேகரித்துள்ளது.
வாகன பொறியியல் கட்டத்தில் துவங்கி, தரவுகளை சேகரிக்க பல்வேறு சென்சார் புள்ளிகளை கண்டறிவது வரை, நெஷ் லைவ் மின்வாகன உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டெலிமேடிக்ஸ் கட்டுப்பாடு யூனிட்கள் மூலம் இது செய்யப்படுகிறது. பேட்டரி வகை மற்றும் ரிசார்ஜ் நிலை அறிவது வரை இது பயன்படும்.
கிளவுட்டிற்கு வாகன தரவுகள் மாற்றப்படுவதும், ஒவ்வொரு உற்பத்தியாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. பேட்டரி செயல்பாடுகள், சாலை, வானிலை விவரங்கள், டயர் அழுத்த நிலை, கணிப்பு ஆய்வுகள் ஆகிய செயல்பாடுகள் மூலம் புதிய மின்வாகன ஓட்டுனர்களுக்கு சரியான கணிப்புகள் வழங்கப்படுகின்றன.
“இந்த புரிதல்கள், மின்வாகன உற்பத்தி நிறுவனங்கள் இணைக்கப்பட்ட வாகன அம்சங்களை வழங்க உதவுவதோடு, பேட்டரி ரகம், மூலப்பொருட்கள் தேர்வு போன்றவற்றுக்கான ஆய்வு வழிகாட்டி தகவல்களையும் அளிக்கின்றன,” என்கிறார் வெங்கட்.
ஓட்டுனர் புள்ளிவிவரங்கள், வாகன நிலை குறித்த தகவல்கள், மற்ற வாகனங்களுடன் செயல்திறன் ஒப்பீடு ஆகிய புரிதல்கள் பயனாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன.
“முன்கூட்டியே செயல்பட வழி செய்வது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நிறைய செலவுகளை மிச்சம் செய்ய உதவுகிறோம்,” என்கிறார் வெங்கட்.
சேவை உருவாக்கம்
நெஷ்லைவ் 2016 முதல் சந்தையில் இருக்கிறது. வாகன இணைப்பு தீர்வுகளை வழங்கத் துவங்குவதற்கு முன், நிறுவனம் கால்டாக்சி நிறுவனங்களுக்கான மொபைல் செயலிகளை உருவாக்கித் தந்தது.
“டிரக் ஓட்டுனர்களுக்கான செயலிகள், தீர்வுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம். ஆறு ஆண்டுகளுக்கு முன் இத்துறை ஆரம்ப நிலையில் இருந்தது. பெரும்பாலான சேவைகளை விற்பனைக்கு பிந்தைய சந்தைக்கு உருவாக்கியதாக உணர்ந்தோம்,” என்கிறார் வெங்கட்.
விற்பனைக்கு பிந்தைய சந்தையை விட, மூல உற்பத்தி சந்தைக்கான சேவையை உருவாக்கத் தீர்மானித்ததாக கூறுகிறார். தரவுகளின் தரம் இந்த பிரிவில் சிறப்பாக இருப்பதும் இதற்கான காரணம்.
சேவை நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட உரிமையாளர்கள் தேவைகளையும், நிறுவனம் கருத்தில் கொள்ளத்துவங்கியது.
முழுவதும் சுயநிதியால் இயங்கும் நிறுவனம், இந்தியாவில் இருந்து பிரகாசமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாக 2017ல் ஸ்டான்போர்டு பல்கலையால தேர்வானது. நிறுவனம் 50 பேர் கொண்டு குழுவை பெற்றுள்ளது. 30 பேர் தொழில்நுட்பப் பிரிவில் உள்ளனர். இந்த நிறுவனத்தை துவக்கும் முன் வெங்கட், விர்டுசா நிறுவனத்தின் சேவைகள் பிரிவு துணைத்தலைவராக இருந்தார்.
பின்னர் அவருடன், கிரிதர் ஜோஷி பொறியியல் பிரிவு தலைவராக இணைந்தார். அதற்கு முன் அவர் மேம்மைஇந்தியா நிறுவன துணைத்தலைவராக இருந்தார்.
2021 நிதியாண்டில் வருவாயில் 300 சதவீத வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்க்கிறது.
பெருந்தொற்று ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பாதித்தாலும், இந்த நிறுவனம் வளர்ச்சி கண்டது. குறைந்த எண்ணிக்கை காரணமாக புதுமைகளை புகுத்த முடிந்ததாக அவர் கூறுகிறார். இது வாடிக்கையாளர் நிறுவனங்களை கவர்ந்தது.
எதிர்காலத் திட்டம்
ஸ்கவுட்டோ, எக்செல்போர்ஸ், ஆட்டோமோவில் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரிவில் போட்டியாக உள்ளன. பெரும்பாலான போட்டியாளர்கள் விற்பனைக்கு பிந்தைய பிரிவில் உள்ளதாக வெங்கட் கூறுகிறார்.
எதிர்காலத்தில் காப்பீடு, வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவர்களின் செயல்பாட்டிற்கு தரவுகள் மூலம் உதவ விரும்புகிறது.
“மூல தயாரிப்பு நிறுவனங்களுடன் செயல்படுவதால், தரவுகள் மூலம் பயனுள்ள புரிதலை அளிக்க முடிகிறது. மதிப்பு கூட்டல் சேவைகள், கணிப்பு தகவல்கள் மூல தயாரிப்பு நிறுவன நிலையில் இணையும் போது நல்ல பலன் அளிக்கின்றன,” என்கிறார்.
குளோபல் இண்டஸ்ட்ரி அனலிஸ்ட்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு 2022ல் ஆடோமேட்டிவ் மென்பொருளுக்கான மதிப்பு 19.5 டாலராக இருக்கும் என்றும், 2026ல் இது 28.9 பில்லியன் டாலராக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: ஐஸ்வர்யா லட்சுமி | தமிழில்: சைபர் சிம்மன்