சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவிடும் சென்னை SCAN அமைப்பு!
சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகள் உதவி வலைப்பின்னல் அமைப்பான ஸ்கேன் – (SCAN), சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் குடும்பங்களுக்கு கல்வி, மன நலம் மற்றும் பணி வாய்ப்பு தொடர்பான வழிகாட்டுதலை வழங்கும் ஆதரவு குழுவான விளங்குகிறது.
சென்னையைச் சேர்ந்த தேவிகா* மற்றும் அவரது கணவர், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு கொண்ட தங்கள் மகன் கண்ணனுக்கு* நகரை பிடித்தமான வகையில் சுற்றிப்பார்க்க ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தனர்- எப்போதும் போனை தன்னுடன் வைத்திருக்க வேண்டும்! அவரது போனில் டிராக்கிங் செயலி, பேமெண்ட் செயலி மற்றும் அவசர உதவி எண்கள், எஸ்.ஓ.எஸ் அழைப்பு எண்கள் உள்ளன.
பெற்றோர்களால் இத்தகைய முன்னேற்பாடுகள், கண்காணிப்பை மீறி கோவிட் பொது முடக்கத்தின் போது கண்ணன் காணாமல் போனார்.
“காலை 6 மணிக்கு அப்பாவுடன் சைக்கிளில் சென்றான், ஒரு தவறான திருப்பத்தில் அவனை தொலைத்து விட்டோம்,” என்கிறார் தேவிகா.
கண்ணன் காணாமல் போன மூன்று மணி நேரத்திற்குள் ஸ்கேன் (SCAN) அமைப்பின் இணை நிறுவனர், நிர்வாக அறங்காவலர் கோபிநாத் ராமகிருஷ்ணன், மற்ற மாற்றுத்திறனாளி செயற்பாட்டாளர்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து கண்ணன் புகைப்படத்தை அருகாமை காவல் நிலையங்கள், பொது இடங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். 16 மணி நேரம் கழித்து, நள்ளிரவில் கண்ணன் சென்னை தி.நகரில் கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறை அவரை கண்டறிந்து வீட்டில் ஒப்படைத்தனர்.
2017ல் அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்ட ’ஸ்கேன்’, அதன் உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து, தமிழ்நாட்டில் சிறப்புத் தேவை கொண்ட 10 முதல் 15 குழந்தைகள், இளைஞர்களை இதுவரை மீட்டுள்ளது.
சிறப்புத்தேவை கொண்டவர்கள் காணாமல் போகும் போது கண்டுபிடிக்க உதவுவதோடு, சிறப்புத்தேவை கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கான உதவி குழுவாகவும் செயல்படுகிறது.
காணாமல் போனவர்கள் தேடல்
மாற்றுத்திறனாளிகள் செயல்பாட்டாளர் வைஷ்னவி ஜெயகுமார் காணாமல் போகும் சிறப்புத்தேவை கொண்ட குழந்தைகள், பெரியவர்கள் பற்றிய பிரத்யேக புள்ளிவிபரங்கள் தேவை என்கிறார். ஏனெனில், அவர்களைத் தேடி கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிக்கலாக இருக்கிறது.
“காணாமல் போகிறவர்கள் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வழங்கப்படும் 24 மணி நேர அவகாசம் சிறப்புத்தேவை கொண்டவர்கள் விஷயத்தில் ஆபத்தாக அமையலாம். உதாரணத்திற்கு, ஆட்டிஸம் அல்லது டிமென்சியா பாதிப்பு கொண்டவர்கள் தாங்களே உணவு அல்லது தண்ணீர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மேற்கில் உள்ளது போல, உடல், மனம் அல்லது வளர்ச்சி சவால்களுக்கு ஏற்ப ஊதா எச்சரிக்கை முறையை இந்தியாவிலும் உருவாக்குவது ஏற்றதாக இருக்கும்,” என்கிறார்.
காணாமல் போன சிறப்புத்தேவை கொண்டவர்களைக் கண்டறிய பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பட்டியலையும் ஸ்கேன் அமைப்பு வெளியிட்டுள்ளது.
“2019ல், காணாமல் போன சிறப்புத் தேவை கொண்டவரை கண்டறிவது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டோம். உதாரணமாக அவர்கள் கண்களை பார்த்து பேசத் தயங்கலாம். கீழே பார்த்துக்கொண்டிருக்கலாம். செல்லுமிடம் பற்றி தயக்கம், நிச்சயம் இல்லாத நடையை கொண்டிருக்கலாம்,” என்கிறார் ராமகிருஷ்ணன்.
தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் கழக செயல் இயக்குனர் எல்.வி.ஜெயஸ்ரீ, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது இரண்டு குழந்தைகள் காணாமல் போன போது, ஸ்கேன் தொடர்புகளை தான் சார்ந்திருந்தார்.
“கோபி தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக குழந்தைகள் கிடைத்துவிட்டனர். அனைத்து செய்தி பகிர்வுகளையும் சமூக ஊடக பதிவுடன் இணைக்குமாறும் வழிகாட்டினார்,” என்கிறார் அவர்.
ராமகிருஷ்ணன் முதலில் செய்வது காணாமல் போனவர்கள் பற்றிய துல்லியமான, பொருத்தமான தகவல்களை திரட்டுவது தான்.
“இந்த தகவல்களை ஃபேஸ்புக் அல்லது இணையதளத்தில் இடம்பெற வைக்க வலியுறுத்துகிறோம். வாட்ஸ் அப்பில் பகிர்ந்தால், ஃபார்வேர்டு செய்திகளால் தேதி குழப்பம் ஏற்படலாம்,” என்கிறார்.
“நகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் வகையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இந்த எண்ணை பதிவில் இணைப்போம். குழந்தை காணாமல் போன பகுதியில் உள்ள ரெயில்வே காவலர்கள், சட்டம் ஒழுங்கு, மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்வோம்,” என்கிறார்.
பெற்றோர் குழு
வளர்ச்சி சவால்கள் கொண்ட குழந்தையின் தந்தையான ராமகிருஷ்ணன், 2011ல் தனது மனைவி மணி மற்றும் இன்னொரு தம்பதியுடன் இணைந்து ஸ்கேன் அமைப்பை துவக்கினார். சிறப்புத்தேவை கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் சந்திப்பதற்கு, தினசரி சவால்கள் குறித்து விவாதிப்பதற்கு, பழக்க வழக்க சிகிச்சையாளர்கள் பற்றி அறிவதற்கான குழுவாக இது அமைந்தது.
இந்த குழுவில் இருந்த பெண்மணி ஒருவரின் சிறப்புத் தேவை மையத்தில் குழுவினர் தொடர்ச்சியாக சந்தித்தனர். இந்த சந்திப்புகள் இசை, நடனம், சமையல், கலை நிகழ்ச்சிகள், பெற்றோர் பயிலரங்குகள் ஆகியவற்றுக்கான இடமாக மாறியது.
இந்த மையம் மூடப்பட்டவுடன், கபே அல்லது பள்ளி, பொது இடங்களில் மாதம் ஒரு முறையேனும் இந்த சந்திப்பு தொடர்ந்தது. இவற்றில் பிள்ளைகள், பெற்றோர்கள் தங்களை மறந்து உற்சாகமாக இருக்க வாய்ப்பு உண்டானது.
இந்தக் குழுவைச் சேர்ந்த மோனாலி பாலா, சங்கீதா சிவகுமார், விக்னேஷ் ஈஸ்வர், ராக்பேண்ட்7ஈவன் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். இந்த கலைஞர்கள் கட்டணம் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மன அழுத்தம் இல்லாமல் பொழுதுபோக்கில் மூழ்கியிருக்கச் செய்கின்றனர்.
“இதில் பங்கேற்பதில் இசைக் கலைஞர்களும் மகிழ்ச்சி அடைவதை காண்கிறோம்,” என்கிறார் ராமகிருஷ்ணன்.
“ஒரு முறை சாரங்கி கலைஞர் ஒருவர் எங்கள் குழந்தைகளால் சூழப்பட்டு, உற்சாகமாக கத்திக்கொண்டு, ஆடிபாடிக்கொண்டும் அந்த இசைக்கருவியை தொட்டுப்பார்த்தனர். இந்த அனுபவம் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் தொடர்ந்து வருகை தருகிறார்,” என்கிறார்.
“பொதுமக்களும் இணைந்து எங்களைப்போலவே உற்சாகம் கொள்ளும் போது வெற்றி உணர்வு உண்டாகிறது. இது தான் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை,” என்கிறார்.
வழக்கமான அரங்கம் அல்லது இடத்தில் அனுபவிக்க முடியாத வகையில் எங்கள் குழந்தைகள் இசை, நடனத்தை அனுபவிக்க முடிவது தான் கவனிக்க வேண்டிய விஷயம் என்கிறார் ஐடி ஊழியரும், 10 வயது ஆட்டிஸம் குழந்தையின் தாயுமான ரம்யா ஜெயராமன்.
அவரது மகன் குறைபாடு கண்டறியப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஸ்கேன் கூட்டங்கள் தான் அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைகிறது. இந்த காலம் சிறப்புத்தேவை குழந்தை பெற்றோர்களுக்கு சவாலானதாக அமையலாம்.
“அவனை பீச், மால்கள், தியேட்டர்களுக்கு அழைத்துச்செல்வேன். ஏனெனில், சமூக தொடர்பை அளிக்க விரும்பினேன். ஆனால், ஒரு பெற்றோராக, அவர்கள் வித்தியாசமாக உணர வைக்கப்பட்டு, வெறித்து பார்க்கப்பட்டு, அல்லது விளையாடும் இடங்களில் என் மகன் தள்ளிவிடப்படுவதை பார்த்துள்ளேன்,” என்கிறார் ரம்யா.
“என் மகனுக்கு நான்கு வயதாக இருந்த போது ஸ்கேனை தெரிந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சிகளில் மகனை கடிந்து கொண்டால் அல்லது வேறு விதமாக நடந்து கொண்டால் என்னையே கண்டிப்பார்கள். எந்த தடையும் இல்லாமல் நாமாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுவதால் நான் வீட்டில் இருப்பது போல உணர்கிறேன்,” என்கிறார்.
பணி வாய்ப்பு
சிறப்புத்தேவை கொண்ட குழந்தைகளின் தாய்மார்கள் அவர்களை கவனித்துக்கொள்ள கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருப்பது பணி வாய்ப்பை பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாற்றுத்திறனாளி குழந்தை இருக்கும் போது, அடிக்கடி மருத்துவ கவனம் தேவைப்படலாம் மற்றும் பொருத்தமான குழந்தைகள் நல சேவையை பெறுவது செலவு மிக்கதாகலாம் என்கிறது வாஷிங்டனின் பெண்கள் கொள்கை ஆய்வு அமைப்பு.
டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்களாக இருக்கும் பல அம்மாக்கள் இருபது ஆண்டுகளாக பணி செய்யவே இல்லை என்கிறார் ராமகிருஷ்ணன். இதற்குத் தீர்வாக, ஸ்கேன் அறங்காவலரான தீபா விஜய், தானும் சிறப்பு குழந்தையின் தாய், குடும்ப வர்த்தகத்தை நடத்தி வருபவர் இந்த குழுவில் உள்ள சிறப்பு குழந்தை அம்மாக்கள் மீண்டும் பணிக்கு திரும்ப உதவும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
பல பெற்றோர்கள் குறிப்பாக சிறப்பு குழந்தையின் அம்மாக்கள், குறைபாடு கண்டறியப்பட்டவுடன் வேலையை விட்டுவிடுகின்றனர். சிகிச்சையின் ஆரம்ப காலத்தில் குழந்தைகளை கவனித்துக்கொள்வதே நேரத்தை எடுத்துக்கொள்கிறது, பின் வீட்டில் உள்ள வயதானவர்களை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது,” என்கிறார் தீபா.
“இது அம்மாக்களை உணர்வு நோக்கில் உலர வைத்து, மனச்சோர்வு போன்றவற்றுக்கு உள்ளாக்குகிறது. உண்மையைச் சொல்வது என்றால், குழந்தைகளை கவனித்துக்கொள்வது தவிர இந்த பெண்கள் அவர்கள் மனதுக்கு பிடித்தவற்றில் ஈடுபட வாய்ப்பு இருக்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளுக்கான சிகிச்சையும் செலவு மிக்கது என்பதால், கூடுதல் வருவாய் நல்லது தான். ஆனால், எல்லாவறையும் விட, நிதி சுதந்திரம் அவர்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது,” என்கிறார் தீபா.
அண்மை மாதங்களாக அவர் சட்ட நிறுவனங்கள், நிதி, பார்மா, ஐடி நிறுவனங்களுடன் சிறப்பு குழந்தைகளின் அம்மாக்களுக்கு ஏற்ற வளைந்து கொடுக்கும் பணி நேரத்த வழங்குவது பற்றி பேசி வருகிறார். அவர்களுக்கு மென் திறன் பயிற்சி அளித்து மீண்டும் பணி வாய்ப்பு பெறவும் உதவி வருகிறார்.
சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களால் ஸ்கேன் நடத்தப்படுவதால், காப்பீடு திட்டமிடல், நிதி நிர்வாகம், பெற்றோர்கள் உடல்நலம் பாதிப்பு அல்லது மரணத்திற்கு பின் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு, சிகிச்சை மற்றும் தினசரி உதவிகள் (வளர்ச்சி சவால் கொண்டவர்கள்) போன்ற ஆதரவு வழங்குவதற்கான குழுவாகவும் விளங்குகிறது.
“ஒரு நிறுவனம் கல்வி, பயிற்சி, பணி வாய்ப்புகளை வழங்கலாம், ஆனால் அதன் பிறகு என்ன செய்வது என்பது பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் அளிக்கும் கூட்டறிவால் சாத்தியம்,” என்கிறார் ஜெயஸ்ரீ. இதுவே ஸ்கேன் அமைப்பின் முக்கியப் பங்காக, குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆதரவு அமைப்பாக அமைகிறது,” என்கிறார்.
(*கோரிக்கைபடி பெயர் மாற்றப்பட்டுள்ளது)
ஆங்கிலத்தில்: சரண்யா சகர்பாணி | தமிழில்: சைபர் சிம்மன்
ஆட்டிசம், பார்வையற்ற மாற்றுத் திறனாளி சிறுவர்களை மேடைப் பாடகர்கள் ஆக்கும் பின்னணிப் பாடக நண்பர்கள்!
Edited by Induja Raghunathan