Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

பசுமையான, சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்க செயல்படும் சென்னை ‘அகல் ஃபவுண்டேஷன்’

சென்னையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான 'அகல் ஃபவுண்டேஷன்' பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட்கள் போன்ற இடங்களில், கழிவுகளை முறையாக பிரித்தெடுப்பது குறித்தும் அகற்றுவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

பசுமையான, சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்க செயல்படும் சென்னை ‘அகல் ஃபவுண்டேஷன்’

Wednesday February 20, 2019 , 4 min Read

சென்னையில் உள்ள ஷ்ரைன் வேளாங்கண்ணி க்ளோபல் பள்ளியைச் (SVGS) சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவரான ஆதித்யா பிள்ளை குப்பைகள் நிறைந்த ஒரு தொட்டியை ஆர்வமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார். இளம் மாணவர் ஒருவர் இவ்வாறு செய்வது வழக்கத்திற்கு மாறானதுதான். ஆனால் ஆதித்யாவின் செயலுக்கு ஒரு காரணம் உண்டு.

”குப்பைகளை தூக்கியெறியவேண்டிய அவசியமில்லை என்கிற மிகப்பெரிய பாடத்தை நான் கற்றுக்கொண்டேன். அவற்றை நம்மால் பல்வேறு விதங்களில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்த முடியும்,” என்றார் ஆதித்யா.

ஆதித்யாவின் இந்தக் கருத்தைப் பலரும் ஆமோதிக்கின்றனர். ஆதித்யாவைப் போன்றே சுமார் 600 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அகல் ஃபவுண்டேஷனின் (Agal Foundation) ’த்ராஷ் ’தி ட்ராஷ்’ திட்டத்தில் (Thrash the Trash) பங்களிக்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான அகல் ஃபவுண்டேஷன் குப்பைகளற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான திட்டங்களை வடிவமைத்து, பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களைக் கொண்டு அவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை ஷ்ரைன் வேளாங்கண்ணி க்ளோபல் பள்ளியின் தலைவர் சுதா மகேஷ் கூறுகையில்,

”குழந்தைகள் குப்பைகளைக் கொண்டு பல்வேறு புதுமைகள் படைப்பதைப் பார்க்கிறோம். அப்புறப்படுத்தப்பட்ட ஷூ பெட்டிகளைக் கொண்டு டேபிள், பழைய அட்டைப்பெட்டியைக் கொண்டு பேட்டரியால் இயங்கும் விளக்கு, ப்ளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு பல்வேறு விதங்களில் பயன்படுத்தக்கூடிய கப் ஹோல்டர்கள் போன்வற்றை மாணவர்கள் உருவாக்கினர். இதைப் பார்க்கும்போது வருங்கால தலைமுறையினர் குப்பைகளில்லா சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை பிறக்கிறது,” என்றார்.

இந்த முயற்சி எவ்வாறு துவங்கப்பட்டது?

வஜிதா ஹமீத், கார்த்திகேயன் முருகன் இருவரும் 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ள நிவாரப்பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரது சிந்தனையும் ஒத்திருந்தது. இவர்களால் உருவானதுதான் அகல் ஃபவுண்டேஷன்.

வஜிதா ஹமீத் சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்தார். கார்த்திகேயன் முருகன் உள்ளூர் சில்லறை வர்த்தகர். இவர்கள் இருவரும் கழிவுகள் அகற்றப்படுவதில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படாததே இயற்கை வளங்களின் அழிவிற்கும் ஆரோக்கிய சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கிறது என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு கன மழை மட்டுமே காரணம் அல்ல. நகரில் காணப்படும் மோசமான கழிவு அகற்றல் முறையும் இதில் பெரும் பங்களிக்கிறது. நீர்நிலைகளில் திடக் கழிவுகளைக் கொட்டுவதும் குப்பைகளை கால்வாய்களில் கொட்டுவதுமே இத்தகைய பேரழிற்குக் காரணம் என CAG வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வஜிதா, கார்த்திகேயன் இருவரும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண விரும்பினர். முறையான கழிவு மேலாண்மைக்கான உத்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருவரும் ஒன்றிணைந்தனர். தற்போது இவர்களது அறக்கட்டளை சுத்தமான, பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் பணியில் வருங்காலத் தலைமுறையினரை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

”எங்கள் நிறுவனம் அரசு சாரா நிறுவனமாகும். பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட்கள் போன்ற இடங்களில் கழிவுகளை முறையாக பிரித்தெடுப்பது குறித்தும் அகற்றுவது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறோம்,” என்றார்.

கழிவு மேலாண்மை

ஆசிரியர்கள் உட்பட சுமார் 25 தன்னார்வலர்கள் அகல் ஃபவுண்டேஷனில் பணியாற்றுகின்றனர். இவர்கள் அமர்வுகள் ஏற்பாடு செய்தும் டிஜிட்டல் உள்ளடக்கம் உருவாக்கியும் மக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் மேற்கொண்ட சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1.  த்ராஷ் தி ட்ராஷ் சாம்ப்ஸ்

இந்த கற்றல் திட்டம் 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இன்றளவும் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

“இந்தத் திட்டத்திற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கிறோம். இது 9 முதல் 11 வயது வரையிலும் உள்ள குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது. செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த முயற்சி மூன்று மாட்யூல்களாக பிரிக்கப்பட்டு 23 வாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது,” என்றார் அகல் ஃபவுண்டேஷன் கார்த்திகேயன் முருகன்.

முதல் மாட்யூலில் கதை சொல்லுதல், படல் வரைதல், பாட்டு பாடுதல் போன்றவை மூலம் சுத்தமான சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும். இரண்டாவது மாட்யூலில் ரெட்யூஸ், ரீயூஸ், ரீசைக்கிள் ஆகிய மூன்றையும் குறித்து விளக்கமளிப்படுகிறது. இறுதி மாட்யூல் ’இன்னோவேடிவ் ரீசைக்ளர்ஸ்’.

கழிவுகளை பிரித்தெடுத்தல் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான புதுமையான தீர்வுகளை குழந்தைகள் முன்வைக்க ஊக்குவிப்பதில் இந்த மாட்யூல் கவனம் செலுத்துகிறது. திட்டத்தின் இறுதியில் அகல் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

2.  பெண்கள் சுகாதாரம் தொடர்பான சமூக கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிதல்

மாதவிடாயின்போது ஏற்படும் வலியை போக்குதல், சானிட்டரி நாப்கினை அப்புறப்படுத்துதல் என பெண்களின் சுகாதாரம் தொடர்பான பல்வேறு அம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் 2016-ம் ஆண்டு அகல் கருத்தரங்கம் ஏற்பாடு செய்தது.

”மகளிர் நல மருத்துவர்கள் அடங்கிய குழு தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிரொலியாக பல்வேறு பள்ளிகளில் பெண்கள் தாங்கள் பயன்படுத்திய சானிட்டரி நேப்கின்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அப்புறப்படுத்த உதவும் வகையில் கழிவறைகளில் எரிஉலைகளை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது,” என்றார் வஜிதா.

இளம் உள்ளங்களை ஊக்குவித்தல்

அகல் ஃபவுண்டேஷன் மேற்கொண்ட முக்கிய முயற்சிகளில் ஒன்று த்ராஷ் தி ட்ராஷ் திட்டம். இளம் குழந்தைகளின் உள்ளங்களில் படைப்பாற்றல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தின் மாட்யூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

”திட்டம் முடிவடைந்த பிறகு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு தாங்களும் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்கிற உணர்வு எங்கள் பள்ளியைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளிடமும் ஏற்பட்டது. எங்கள் பள்ளியைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து குப்பை சேகரித்தல் மற்றும் மறுசுழற்சி பிரச்சாரம் மேற்கொண்டோம். அது மட்டுமல்லாது பள்ளி வளாகத்தில் உயிர் உரம் உற்பத்தி செய்யும் பணியையும் துவங்கியுள்ளோம்,” என்றார் சுதா.

த்ராஷ் தி ட்ராஷ் முயற்சியை நான்கு பள்ளிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்த பிறகு Paris Peace Forum தங்களது மாநாட்டில் பங்கேற்க அகல் ஃபவுண்டேஷனுக்கு அழைப்பு விடுத்தது. எனினும் போதுமான வளங்கள் இல்லாத காரணத்தால் அகல், பங்கேற்க இயலாமல் போனது.

இதன் நிறுவனர்கள் தொடர்ந்து சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

“இயற்கையான சுற்றுச்சூழலை நாம் பாதுகாப்பது அவசியம். நாங்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் இன்னமும் ஏராளமாக உள்ளது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நம் நாட்டில் கழிவுகள் பொறுப்பற்ற முறையில் வகைப்படுத்தப்படாமல் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்றார் கார்த்திகேயன்.

ஆங்கில கட்டுரையாளர் : ரோஷ்னி பாலாஜி | தமிழில் : ஸ்ரீவித்யா