பிரபல Cleartrip நிறுவனத்தை சிஇஒ ஆக வழிநடத்தும் தமிழர் ஐயப்பன் ராஜகோபால்!
இணைய பயண ஏற்பாடு நிறுவனமான கிளியர்டிரிப் சி.இ.ஓவாக இளம் அதிகாரி ஐயப்பன் ராஜகோபால் நிறுவனத்தை அதன் வர்த்தக இலக்குகளுக்கு ஏற்ப வழிநடத்தி வருகிறார்.
இணைய பயண ஏற்பாடு நிறுவனமான '
' 'கிளியர்டிரிப்'-இன் சி.இ.ஓ. ஆன சென்னையைச் சேர்ந்த இளம் அதிகாரி ஐயப்பன் ராஜகோபால், நிறுவனத்தை அதன் வர்த்தக இலக்குகளுக்கு ஏற்ப வழிநடத்தி வருகிறார். நிறுவனத்தின் வர்த்தக தொலைநோக்கு மற்றும் உத்திகளுக்கும் வழிகாட்டி வருகிறார்.யார் இந்த ஐயப்பன் ராஜகோபால்?
சென்னையில் பிறந்து, வளர்ந்த ஐயப்பன், வர்த்தக நிர்வாகத்துறையில் அனுபவமிக்கவர். XLRI ஜாம்ஷெட்பூரில் இருந்து மார்க்கெட்டிங் மற்றும் நிதித்துறையில் பிஜிடிஎம் பெற்றவர். சீமென்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் துறையில் தன் பணிவாழ்க்கையை துவங்கியவர், எம்பிஏ படித்த பிறகு ஐடிசி நிறுவனத்தில் உதவி மேலாளராக இணைந்தார். பின்னர், ஃபிளிப்கார்ட் குழுமத்தில் இணைந்தார்.
ஃபிளிப்கார்ட் மார்க்கெட் பிளேசை அறிமுகம் செய்த குழுவில் இடம்பெற்ற ஐயப்பன், படிப்படியாக முன்னேறி, 2018ல் மிந்த்ராவில் முதன்மை வர்த்தக அதிகாரியாக விளங்கினார். ஃபேஷன் துறையில் Myntra வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
நிர்வாகம், வர்த்தக வளர்ச்சி, விற்பனை, விநியோகம் உள்ளிட்ட துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்ற நிலையில், 2021 அக்டோபரில் ஐயப்பன், இணைய பயண ஏற்பாடு நிறுவனமான கிளியர்டிரிப் (Cleartrip) சி.இ.ஓவாக பொறுப்பேற்றார்.
ஃபிளிப்கார்ட் குழுமத்தில் 9 ஆண்டுகள் இருந்த போது, ஃபிளிப்கார்ட் மார்க்கெட்பிளேஸ் உருவாக்கம், மின்னணு வர்த்தகம், எதிர்கால வர்த்தகம், ஸ்மார்ட்போன் வர்த்தகம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
இந்திய இ-காமர்ஸ் துறையில் அனுபவமிக்கவர்களில் ஒருவரான ஐயப்பன், ஸ்மார்ட்போன், ஃபேஷன், மின்னணு மற்றும் பர்னீச்சர் உள்ளிட்ட பிரிவுகளில் அனுபவம் பெற்றுள்ளார். ஐடிசி நிறுவனத்தில் இருந்த போது, 2010ல் எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழின் ’யங் லீடர்’ விருது பெற்றிருக்கிறார்.
கிளியர்டிரிப் நிறுவனத்தில்,
அவர் ஊழியர்கள் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். மதிப்பு சார்ந்த புதுமையாக்கமே நிறுவன வளர்ச்சிக்கு உதவும் எனும் நம்பிக்கை கொண்டவர் இந்திய பயணத் துறை மாற்றத்திற்கு தயாராக இருப்பதாகவும் நம்புகிறார்.
சென்னையை சேர்ந்தவரான ஐயப்பன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகராக இருப்பதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகராகவும் விளங்குகிறார். இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை விரும்புவர் ஓய்வு நேரத்தில் நீண்ட தொலைவு பயணங்கள் மற்றும் திரைப்படம் பார்ப்பதை விரும்புபவர்.