மரம் ஏற இனி சிரமம் இல்லை; வந்தாச்சு ‘மர ஸ்கூட்டர்’ - 50 வயது விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பாலானோருக்கு மரம் ஏறுவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த கவலையை போக்கும் விதமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மரத்தில் ஏற உதவும் ஸ்கூட்டர் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பாலானோருக்கு மரம் ஏறுவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த கவலையை போக்கும் விதமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மரத்தில் ஏற உதவும் ஸ்கூட்டர் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
கர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூருவைச் சேர்ந்தவர் 50 வயதான கணபதி பட், இவர் தினமும் காலையில் ஒரு சிறிய மோட்டர், இருக்கை, ஒரு செட் சக்கரங்கள் பொருத்தப்பட்ட கருவியை கையில் எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் செல்கிறார். அங்கு தான் கொண்டு வந்த இயந்திரத்தின் மீது அமர்ந்து உயரமான மரத்தின் மீது விரைவாக ஏறுகிறார்.
ஆம், சந்தேகமே வேண்டாம் கணபதி பட் கண்டுபிடித்துள்ளது ஒரு மரம் ஏறும் இயந்திரத்தை தான். அதற்கு அவர் வைத்துள்ள பெயர் ‘மர ஸ்கூட்டர்’ என்பதாகும்.
வயதாகிவிட்ட காரணத்தினால் மரம் ஏற சிரமமாக இருந்துள்ளது, மேலும் தனது தோட்டத்தில் உள்ள பாக்கு போன்ற 60 முதல் 70 அடி உயரமுள்ள மரங்களில் ஏற ஆட்களை தேடிய போது அவர்களது ஒருநாள் ஊதியம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒற்றை தீர்வாகவே கணபதி பட், புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.
2020-21 ஆம் ஆண்டில் 1.2 மில்லியன் டன்கள் உற்பத்தியுடன், இந்தியா உலகின் மிகப்பெரிய பாக்கு உற்பத்தியாளராக உள்ளது. இந்த பயிரின் பெரும்பகுதி கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடலோரப் பகுதியில் வசித்து வரும் கணபதி பட், தனது 18 ஏக்கர் தோட்டத்தில் அதிக அளவிலான பாக்கு மரங்களை பயிர் செய்துள்ளார். 50 வயதில் தினமும் 60 உயரமுள்ள மரங்களில் ஏறி அறுவடை செய்வது என்பது சாத்தியமில்லாத செயல், ஆனால் அவரது கண்டுபிடிப்பு அதனை அசாத்தியமானதாக மாற்றியுள்ளது.
"எனக்கு பைத்தியம் பிடித்ததா என்று கிராமத்தினர் என்னிடம் கேட்டார்கள். எனது கண்டுபிடிப்பு குறித்து அவர்களுக்கு சந்தேகம் இருந்தது. மழைக் காலத்தில் மரங்கள் வழுக்கும் என்பதால் அது வேலை செய்யுமா? என்ற ஐயப்படு எழுந்தது.”
இந்த மர ஸ்கூட்டரை அவ்வளவு எளிதாக கணபதி பட் கண்டுபிடித்துவிடவில்லை. 2014ம் ஆண்டு முதலே இதுதொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மட்டும் சுமார் 40 லட்சம் வரை செலவிட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது இன்ஜினியர் நண்பர் ஒருவரின் உதவியுடன் தற்போதுள்ள மாடலை வடிவமைத்துள்ளார்.
தனது கண்டுபிடிப்பு குறித்து பெருமையுடன் பகிர்ந்து கொண்டுள்ள கணபதி பட்,
"இந்த கண்டுபிடிப்பின் மூலம் நான் மக்களுக்கு ஏதாவது செய்தேன் என்று நான் பெருமைப்படுகிறேன். இப்போது என் வாழ்க்கை நிறைவடைந்ததாக உணர்கிறேன்,” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சொந்த பயன்பாட்டிற்காக மட்டுமின்றி சுற்றியுள்ள விவசாயிகளுக்காகவும் மர ஸ்கூட்டரை கணபதி பட் உருவாக்கிக் கொடுக்கிறார். சமீபத்தில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மர ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளார்.
50 வயதில் தளாராத மனதுடன் புதுவிதமான கண்டுபிடிப்பை உருவாக்கிய கணபதி பட்டிற்கு சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தகவல் உதவி - என்டி டிவி | தமிழில் - கனிமொழி