ஆண்டிற்கு 20 லட்ச ரூபாய் மதிப்பு தயாரிப்பு: இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் ஆடைகள் பிராண்ட்!
பெங்களூருவைச் சேர்ந்த 1947IND ஆடை பிராண்ட் சமீபத்தில் இஸ்ரோவுடன் கைகோர்த்து அதன் சிறப்புகள் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆடை வகைகளை அறிமுகப்படுத்துகிறது.
1947IND இந்திய கலாச்சாரத்தை போற்றும் ஆடை பிராண்ட். பெங்களூருவைச் சேர்ந்த இந்த பிராண்ட் 2018ம் ஆண்டு ராஜீவா மகாலிங்கா, சௌஜன்யா எஸ் பிரபு ஆகியோரால் நிறுவப்பட்டது.
சமீபத்தில் 1947IND பிராண்ட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இஸ்ரோ எட்டியுள்ள மைல்கற்களை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே இஸ்ரோவின் நீண்ட கால திட்டம். இதன் அடிப்படையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடக்கம்
இந்தியராக இருப்பதில் பெருமை கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு லைஃப்ஸ்டைல் பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் 1947IND தொடங்கப்பட்டது. இந்த பிராண்டின் கலெக்ஷன்ஸ் கலாச்சார பன்முகத்தன்மையைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது.
”இந்திய நகரங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பிரிவில் செயல்படும் நிறுவனமாகவே எங்கள் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. மக்கள் பொதுவாக குறிப்பிட்ட நகரைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிக்காட்டுவதில் பெருமை கொள்வதுண்டு. ஆனால் அந்தப் பெயர்கள் அச்சிடப்பட்ட ஆடை வகைகள் உள்ளிட்ட பொருட்கள் சந்தையில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தோம். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தாங்கள் இந்தியராக இருப்பதைக் கொண்டாடும் ஒரு பிராண்டை அறிமுகப்படுத்த விருமினோம்,” என்கிறார் சௌஜன்யா.
1947IND இந்திய நகரங்களில் உள்ள கலை, இசை, ஃபேஷன், பெருநகர வாழ்க்கைமுறை போன்றவற்றைப் படம்பிடித்துக் காட்ட விரும்புகிறது.
தற்சமயம் இந்த பிராண்ட் T-shirts, Hoodies, Sweatshirts, Drop-Shoulder T-shirts போன்ற ஃபேஷன் தயாரிப்புகளை வழங்குகிறது. குழந்தைகளுக்கான புத்தகங்கள், விரும்பி சேகரிக்கும் பொருட்கள், ஃபேஷன் ஆக்சசரிஸ் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இஸ்ரோ பெருமையை பறைசாற்றும் தயாரிப்புகள் மூலம் இந்த பிராண்ட் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் விரிவடைய உள்ளது.
1 கோடி ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்பட்டு சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப், ஆண்டிற்கு 20 லட்ச ரூபாய் மதிப்பிலான தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. தயாரிப்புகளின் விலை 250 ரூபாயில் தொடங்கி 2,499 ரூபாய் வரை உள்ளது.
இஸ்ரோ கலெக்ஷன்ஸ்
இந்திய விண்வெளி ஆர்வலர்களைக் கவரும் வகையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதாக 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரோ அறிவித்திருந்தது. இதற்கு 1947IND நிறுவனம் பார்ட்னராக தேர்வாகியுள்ளது.
இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களை ஹைலைட் செய்யும் ஆடைத் தொகுப்பை 1947IND வழங்குகிறது.
“இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதை நினைத்து பெருமை கொள்கிறோம். இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இஸ்ரோவின் சாதனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நினைத்து மகிழ்கிறோம்,” என்கிறார் சௌஜன்யா.
இந்தத் தொகுப்புகள் ISRONAUT என்கிற பெயரில் கிடைக்கும். இஸ்ரோ பெருமையை உணர்த்தும் தரமான தயாரிப்புகள் இல்லை என்பதை அறிந்து 1947IND இஸ்ரோ தொடர்பான டிசைன்களை உருவாக்கியது. இஸ்ரோவுடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
1947IND இணை நிறுவனர் ராஜீவா கூறும்போது,
“உலகம் முழுவதும் உள்ள முன்னணி விண்வெளி ஆராய்ச்சி ஏஜென்சிகளுக்கு நிகரானது இஸ்ரோ. ஆனால் இந்தியர்களான நாம், மிகப்பெரிய அளவில் ஏதேனும் முக்கிய விண்வெளி ஆய்வு திட்டம் ஏற்பாடாகும்போது மட்டுமே அதில் ஆர்வம் காட்டுகிறோம். இந்திய இளைஞர்களிடமும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் இஸ்ரோவின் சிறப்புகளைக் கொண்டு சேர்க்க ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் மூலம் பிரபலப்படுத்துவது சிறந்த வழி,” என்று குறிப்பிட்டார்.
வருங்காலத் திட்டங்கள்
குழந்தைகளுக்கான ஆடைகள், பாட்டம் வேர், ஃபேஷன் ஆக்சசரீஸ் உள்ளிட்ட புதிய தயாரிப்பு வகைகளை இந்த ஸ்டார்ட் அப் வடிவமைத்து வருகிறது. அதேபோல் ஃபேஷன் தொடர்பில்லாத இதர தயாரிப்புகளை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
அன்றாடம் அணிவதற்கும் உடற்பயிற்சி செய்யும்போது அணிவதற்கும் ஏற்றவாறு இருக்கும் ஆடைகளை வழங்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
“தற்போது இளைஞர்களுக்கு சேவையளிக்கும் விதத்தில் தயாரிப்புகளைத் தொகுத்து வழங்கும் நிலையில் பொம்மைகள், புத்தகங்கள் என குழந்தைகளுக்கான பொருட்களை வழங்க உள்ளோம்,” என்கிறார் சௌஜன்யா.
1947IND தயாரிப்புகள் அதன் வலைதளத்திலும் அமேசான் தளத்திலும் கிடைக்கின்றன. Flipkart, Bewakoof, Ajio போன்ற தளங்களில் விரிவடைத்தற்கான பணிகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாங்கும் வகையில் சில்லறை வர்த்தமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதலில் பெங்களூருவில் ஸ்டோர் திறக்கப்பட உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: நூர் ஆனந்த் சாவ்லா | தமிழில்: ஸ்ரீவித்யா