1.15 கோடி ரூபாய் நிதி முதலீடு பெற்றது கோவை அக்ரி நிறுவனம்!
நேட்டிவ் ஏஞ்சல்ஸ் மற்றும் இரு முதலீட்டு நிறுவனங்கள் இணைந்து இந்த நிதி உதவியை செய்துள்ளது!
கோவையைச் சேர்ந்த ’Laymen Agroventures (Vilfresh)’ என்ற விவசாயத்துறையில் இயங்கும் ஸ்டார்ட்-அப், நேட்டிவ் ஏஞ்சல்ஸ் இடமிருந்து 1.15 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றுள்ளது. நேடிவ் ஏஞ்சல்ஸ் உடன் Upaya social ventures மற்றும் Sangam ventures இணைந்து இந்த நிதியுதவியை அளித்துள்ளது.
கல்வியாளராக இருந்து தொழில்முனைவராக மாறிய செல்வகுமார் வரதராஜன் Vilfresh-Layman Agro Ventures என்ற அக்ரி தொடக்க நிறுவனத்தை 2016ல் தொடங்கினார். உயர்ரக தரமான ப்ரெஷ்ஷான பால் செல்வகுமார் மற்றும் அவரின் மனைவி ஷர்மிளாவுக்கு கிடைக்காததை அடுத்து இந்த நிறுவனத்தை தொடங்கும் எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
“எங்களின் மகளுக்கு தரமான பால் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். கிராமப்புறத்தில் உள்ள இயற்கையுடன் ஒட்டிய ஆரோக்கியமான உணவுவகைகள் நகரங்களில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தோம். ஆரோக்கியமான பொருட்கள் நகரத்தில் கிடைத்தாலும், வீட்டு வாசலில் அவை கிடைப்பதில்லை. ஒரு பக்கம் நம் விவசாயிகள் சரியான விலையில் தங்களின் பொருட்களை விற்க தவிக்கின்றனர். மறுபுறம் நகரவாசிகள் ஆரோக்கியமான ப்ரெஷ்ஷான உணவுவகைகள் இல்லாமல் இருக்கிறோம்,” என்கிறார் செல்வகுமார்.
இந்த பிரச்சனையை எதிர்கொண்டபோது தோன்றியது தான் ‘Vilfresh-Laymen Agro Ventures’. இவர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் சுத்தமான பாலை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள். அதிகாலை 4.30 மணிக்கு பால் பண்ணை கொண்டுள்ள விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு அன்று காலை 7.30 மணிக்கே வாடிக்கையாளர்கள் வீடுகளில் நேரடியாக பால் டெலிவரி செய்யப்படுகிறது. தற்போது பாலுடன் 40 விவசாயப்பொருட்களை இந்நிறுவனம் கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றது.
செல்வகுமார், அவரின் மனைவி ஷர்மிளா துரைராஜ் Vilfresh-Laymen Agro Tech-ன் நிறுவனர்கள். அவர்களுடன் யஷ்வந்த் ரங்கராஜன் மற்றும் சுபா சதாசிவம் பின்னர் இணைந்துள்ளனர்.
பல விவசாயிகளின் வாழ்விலும், வாடிக்கையாளர்களுக்கும் திருப்தியான சேவையை வழங்கும் இவர்களுக்கு Native Angels Network நிதி உதவி செய்துள்ளது. இது குறித்து அதன் நிறுவனர் சிவராஜா ராமனாதன் கூறுகையில்,
”Vilfresh-Laymen Agro Tech ஒரு சமூக தொழில்முனைவு நிறுவனம். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கையான பொருட்களை வணிகம் செய்கின்றனர். அப்பொருட்களுக்கு சந்தையில் மேலும் அதிக வரவேற்பும் தேவையும் உள்ளது. ஒரு பாரம்பரிய பால்காரர் வீட்டில் பால் கொடுப்பது போல் இவர்கள் செய்தாலும், இந்நிறுவனம் அதை ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்போடு செய்வதால் நிதியுதவி செய்ய முன்வந்தோம்,” என்கிறார்.
பால் டெலிவரி பிரிவில் செயல்பட்டாலும், நிறுவனர்களுக்கு பிசினஸ் மாடல் மற்றும் அதை சரிவர செயல்படுத்தும் விதம் குறித்து ஆழ்ந்த ஆற்றல் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளனர் என்றார் சிவராஜா.
அமெரிக்காவைச் சேர்ந்த Upaya social ventures; Vilfresh பற்றி தீவிரமாக ஆராய்ந்து அவர்கள் நிதி உதவி பெற தகுந்தவர்கள் என்பதை உறுதிபடுத்தியதன் அடிப்படையில் இந்த முதலீட்டை நேட்டிவ் ஏஞ்சல்ஸ், Upaya social ventures மற்றும் சங்கம் வென்ச்சர்ஸ் இணைந்து செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Vilfresh-Laymen மூன்று வாடிக்கையாளர்களுடன் தொடங்கி, தற்போது ஒரு மாதத்திற்கு 26ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கின்றது. இவர்கள் மேலும் பல நகரங்களுக்கு தங்களின் செயல்பாடுகளை விரிவுப்படுத்த முடிவெடுத்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள ஃபண்டிங்கை வைத்துக் கொண்டு அவர்கள் திருப்பூர், மதுரை மற்றும் 5 நகரங்களுக்கு நிறுவன செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யவுள்ளனர்.
நேட்டிவ்லீட் அக்ரி ஸ்டார்ட்-அப்ல் குறிப்பாக முதலீடு செய்வது பற்றி கேட்டதற்கு,
"Nativelead; சிறு ஊர்களில் இருந்து உருவாகும் நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முயற்சி. பெரும்பாலும் சிற்றூர்களில் இருந்து விவசாயம் மற்றும் சமூக தொழில்முனைவு நிறுவனங்களே அதிகம் தொடங்கப்படுவதால் அதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நிறுவனத்தையும் ஆதரித்து நிதி உதவி செய்திட ஆர்வமாக உள்ளோம்,” என்றார் சிவராஜா.
நேட்டிவ் ஏஞ்சல்ஸ் நெட்வர்க் 2019-20ல் சுமார் 10 நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.