கனடா மாகாணத்திடம் இருந்து நிதி திரட்டியுள்ள கோவை சோலார் நிறுவனம்!
சோலார் பேனல்களை செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் மூலம் தூய்மைப் படுத்தும் சேவையை சோலாவியா லேப்ஸ் வழங்கி வருகிறது.
இந்தியாவின் தூய்மை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான 'சோலாவியா லேப்ஸ்' 'Solavio Labs', கனடா மாகாணமான நியூ பர்ன்ஸ்விக்கிடம் இருந்து ரூ.40,60,000 நிதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் மொத்தம் ரூ.2 கோடி நிதி திரட்டியுள்ளது.
கோவையைச்சேர்ந்த Solavio Labs நிறுவனம் இரண்டு பொறியாளர்களால் துவக்கப்பட்டது. சோனால் பேனல்களை தூய்மை செய்ய செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை நிறுவனம் வழங்கி வருகிறது.
சோலார் பேனல்களில் தூசு மற்றும் மாசு படிவதால் அதன் செயல்திறன் பாதிக்கப்படுவது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தற்போதுள்ள தூய்மையாக்கும் தீர்வுகள் அதிக அளவில் தொழிலாளர்களைச் சார்ந்துள்ளன. இந்தப் பணியை தானியங்கிமயமாக்கி தீர்வளிக்கிறது இந்நிறுவனம்.
தற்போது கனடா நாட்டின் நியூ பர்ன்ஸ்விக் மாகாண நிதி பெற்றுள்ளதன் மூலம், இந்தியா, துபாய் மற்றும் கனடா நாட்டு அரசு அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.
இந்த புதிய சுற்று நிதியை அடுத்து, நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவுக்கான விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் சர்வதேச தேவையை பூர்த்திசெய்யும் வகையில் தனது இந்திய உற்பத்தி ஆலை வசதியை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 12,000 யூனிட்களாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
“இந்தியா மற்றும் துபாயிடம் இருந்து நிதி பெற்ற நிலையில் சோலாவியா நிறுவனம் கடந்த ஓராண்டில் 125 மடங்கு வளர்ச்சி கண்டது. இப்போது கனடா மாகாணத்திடம் இருந்து நிதி பெறுவது எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது மற்றும் விரிவாக்கத்திற்கு உதவும்,” என்று சோலாவியா லேப்ஸ் இணை நிறுவனர் சூரஜ் மோகன் கூறுகிறார்.
இந்நிறுவனம் வழங்கும் தூய்மை சேவை தானியங்கியமாக இருப்பதோடு, ஆண்டுக்கு மெகாவாட்டுக்கு 2 லட்சம் தண்ணீரை சேமிப்பதாகவும் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை வழங்கி வரும் நிறுவனம் அண்மையில் துபாய் மின்வாரியம் மற்றும் குடிநீர் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் படி, நிறுவனம் துபாய் மின்வாரியத்திற்கு முதல் கட்டமாக 1.8 மெகாவாட் சோலார் பேனல்களுக்கான தூய்மைப்படுத்தும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றித்தந்துள்ளது.