கொரோனா டெஸ்ட் எடுக்கும் ரோபோ கருவி உருவாக்கிய கோவை இளைஞர்!
கொரனா வைரஸை கண்டறியும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளும் ரோபோவை உருவாக்கி டெஸ்ட் எடுப்போருக்கு நோய் தொற்றாமல் தவிர்க்கமுடியும்.
கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் உலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது முதல், அதற்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பது முதல், நோய் பரவாமல் இருக்க உதவும் கருவிகள் வரை பலர் ஆராய்ச்சிகளிலும், ஆய்விலும் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக, பல இளைஞர்கள், ஸ்டார்ட்-அப்’கள், தொடர்பில்லா சானிடைசர் ஸ்டாண்டு, தெர்மல் ஸ்க்ரீனிங் கேமரா, ரொபோ செவிலியர், மலிவு விலை வெண்டிலேட்டர்கள் என பல புதிய கண்டுபிடுப்புகளை செய்து மக்களுக்கு உதவும் வகையில் பங்களித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது கொரோனாவை கண்டுபிடிக்கும் பிசிஆர் பரிசோதனையை ரோபோ கருவி மூலம் செய்யும் வகையில் ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த கார்த்திக் வேலாயுதம் என்ற இளைஞர் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். இவர் தற்போது இந்த கொரோனா காலத்திற்கு மிக அவசியமான ரோபோட்டிக் தொழில்னுட்பம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார்.
இந்த ரோபோட்டிக் கருவி பிசிஆர் பரிசோதனையின் சளி மாதிரி சேகரிப்புக்கு உதவுகிறது. இந்த ரோபோ கருவி நேரடியாக பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் மருத்துவர் மற்றும் செவிலியர்களை தொற்று இல்லாமல் காப்பாற்றுவதற்கு உதவுவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும் இது பயனுள்ளதாகவும் இருக்கிறது.
மேலும் ஒருவர்க்கு பரிசோதனை செய்யப்பட்டவுடன் இக்கருவி ஒவ்வொரு முறையும் சானிடைசர் திரவத்தையும் கொண்டு தானே சுத்தம் செய்துவிடுவதால், அடுத்தவருக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கிறது.
இக்கருவியைப் பற்றி விளக்கிய கார்த்திக்,
“இதைத் தயாரிப்பதற்கு மூன்று நாட்களாகிறது. இதனுடைய தற்போதைய விலை சுமார் ரூ.2000 வரை ஆகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு அனுமதித்தால் இக்கருவியை அதிகளவில் தயாரித்து மருத்துவமனைகளுக்கு வழங்கி விடுவோம் என்றும் தெரிவித்தார்.
இது போன்ற பயனுள்ள கருவிகளை மேலும் கண்டுபிடிப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். தங்களைப் போன்ற இளைஞர்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் அரசு ஊக்குவித்தால் மேலும் பல கருவிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கட்டுரை உதவி: சுதாகர்