10 ஆண்டுகளில் 75 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் கோவையை SaaS மையமாக்கிய Kovai.co
பத்தாவது ஆண்டை கொண்டாடும் கோவை.கோ நிறுவனம், 2030 ம் ஆண்டில் சாஸ் (SaaS ) யூனிகார்ன் அந்தஸ்தை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த வர்த்தக மென்பொருள் மற்றும் பி2பி சாஸ் சேவை நிறுவனமான Kovai.co வெற்றிகரமாக பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
2011ம் ஆண்டு நிறுவப்பட்ட Kovai.co நிறுவனம் கோவை மற்றும் லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 250 நாடுகளுக்கு மேல் ஊழியர்களைக் கொண்டுள்ளது.
பத்தாவது ஆண்டை முன்னிட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2030ம் ஆண்டில் SaaS யூனிகார்ன் அந்தஸ்தை பெற விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கோவை.கோ கனெக்ட் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் 2011ல் தனது முதல் சேவையான, BizTalk360–ஐ அறிமுகம் செய்தது. இந்த சேவை மைக்ரோசாப்டின் BizTalk சர்வருக்கான கண்காணிப்பு மற்றும் அனல்டிக்ஸ் சேவையை வழங்குகிறது.
மூன்று ஆண்டுகளில் 145 வாடிக்கையாளர் நிறுவனங்களைப் பெற்ற Kovai.co முழு வீச்சிலான புத்தாக்க மற்றும் ஆய்வு மையத்தை அமைத்தது.
இதன் நிறுவனர் மற்றும் சிஇஒ, சரவண குமார், மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து ஆண்டின் எம்.வி.பி விருது பெற்றார்.
நிறுவனம், தொடர்ந்து ஆய்வில் கவனம் செலுத்தி, புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. Serverless360 மற்றும் Document360 உள்ளிட்ட சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
நிறுவனத்தின் மற்ற முக்கிய மைல்கற்கள் வருமாறு:
- 2015ல் நிறுவனம், 6,000 சதுர அடி புதிய அலுவலகத்திற்கு மாறியதுடன், லண்டனில் 2,000 சதுர அடி அலுவலகம் அமைத்தது.
- மைக்ரோசாப்ட் Azure Service-க்கான சர்வர்லெஸ்360 சேவையை அறிமுகம் செய்தது.
- 2016ல் நிறுவனர் டைம்ஸ் நவ்- ந் சிறந்த என்.ஆர்.ஐ விருது பெற்றார்.
- 2017ல் லண்டனில் வளர்ந்து வரும் 50 சி.இ.ஓ எனும் அங்கீகாரத்துடன் நிறுவனர் சரவண குமார், இங்கிலாந்து அரண்மனைக்கு அழைக்கப்பட்டார்.
- 2018ல், அடோமிக் ஸ்கோப் மற்றும் டாக்கும்னெட் 360 அறிமுகம் செய்யப்பட்டன.
- 2020ல் நிறுவனம், சர்வர்லெஸ் 360 சேவைக்குத் துணையாக Cerebrata-வை கையகப்படுத்தியது.
- 2020ல் ஆண்டு வருவாயாக 10 மில்லியன் டாலரை (75 கோடி) எட்டியது.
- மேலும், 2020ல் சாஸ் பூமியின் சுயநிதி சாஸ் ஸ்டார்ட் அப் விருது பெற்றது.
“லாபமான சுயநிதி சாஸ் ஸ்டார்ட் அப்’பின் பத்தாவது ஆண்டை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம். எங்களது, 1500க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவன வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் திறமை மற்றும், புதுமையான சேவையை உருவாக்கும் ஆற்றல் ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது,” என நிறுவனர் சரவண குமார் கூறியுள்ளார்.
“அடுத்த சில ஆண்டுகளில் விரிவாக்கத்திற்காக முதலீடு, ஆய்வு முதலீடு, வர்த்தக முதலீடு செய்யப்படும். மேலும், எங்கள் கோவை.கோ கனெக்ட் திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தொழுல்துறையின் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
பெருந்தொற்று காலத்திலும் நிறுவனம், கோவையில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இணையம் மூலம் பயிற்சி அளித்ததாதகவும் அவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு வழங்குவதோடு. உள்ளூர் சமூகத்தில் முதலீடு செய்வது மற்றும் 2030ல் சாஸ் யூனிகார்ன் அந்தஸ்து பெறுவதிலும் நிறுவனம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.