காவலுக்கு 6 நாய்கள், 4 ஆட்கள்: வீட்டில் மாம்பழங்களை பாதுகாக்கும் மத்திய பிரதேச தம்பதி!
மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதி தங்கள் வீட்டில் மியாசாகி மாம்பழத்தை விளைவித்துள்ளனர்.
உலகின் பல பகுதிகளிலும் விதவிதமான வகைகளில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ‘மியாசாகி’ வகை மாம்பழம் உலகிலேயே காஸ்ட்லியான மாம்பழமாக உள்ளது. ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் அதிக அளவில் வளர்க்கப்படுவதால் இது அப்பெயரில் அழைக்கப்படுகிறது.
இருப்பினும், தற்போது இது இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழத்தின் விலை உலக சந்தையில் கிலோ 2.7 லட்சமாக உள்ளது.
உலகிலேயே ஜப்பான் நாட்டில் உள்ள மியாசாகி என்ற இடத்தில் தான் இந்த மாம்பழம் அதிக அளவில் விளைகிறது. அதற்குக் காரணம் வெப்பமான வானிலை, நீடித்த சூரிய ஒளி மற்றும் ஏராளமான மழைப்பொழிவு ஆகியவற்றுடன் உற்பத்திக்கு சாதகமான காலநிலையை இந்நகரம் கொண்டுள்ளது.
மியாசாகி மாம்பழம் ஜப்பானில் நன்றாக வளர்ந்தாலும் இதன் தாயகம் அமெரிக்கா என்பது பலரும் அறியாத செய்தி. 1939ம் ஆண்டில் ப்ளோரிடாவை சேர்ந்த எஃப்.டி.இர்வின் என்பவர் தான் இந்த ரகத்தை முதன் முதலில் உருவாக்கியுள்ளார். 1985ம் ஆண்டு ஜப்பானில் மியாசாகி நகரில் விளைவிக்கப்பட்டது. அங்கு இந்த மாம்பழம் பிரபலமானதை அடுத்தே ‘மியாசாகி’ என அழைக்கப்படுகிறது.
மாம்பழங்கள் எல்லாமே காயாக இருக்கும் போது பச்சையாக இருந்து, அதன் பின்னர், மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறும். ஆனால், மியாசாகி மாம்பழங்கள் காயாக இருக்கும் போது சிவப்பு நிறத்தில் இருக்கும், பழமாகும் போது ஊதா நிறத்திற்கு மாறிவிடும்.
‘மியாசாகி’ மாம்பழத்திற்கு உலக அளவிலான சந்தைகளில் மவுசு அதிகம், ஒரு கிலோ ரூ.2.70 லட்சம் வரை விற்பனையாகிறது.
மிக அரிதாக கிடைக்கும் மாம்பழம் என்பதால் இதன் விலை இவ்வளவு காஸ்ட்லியாக உள்ளது. ‘டைனாசர் முட்டை’ போன்ற வடிவத்தில் பர்ப்பிள் நிறத்தில் இருக்கும் ஒரு மியாசாகி மாம்பழம் 350 கிராம் எடை வரை இருக்கும். இதன் அடர் சிவப்பு நிறம் காரணமாக ஜப்பான் மக்கள் இதனை ‘டிராகன் முட்டை’ என்றும் அழைக்கின்றனர். 350 கிராம் எடையுள்ள பழுத்த மியாசாகி மாம்பழத்தில் 15 சதவீதம் வரை சர்க்கரை நிறைந்திருக்கும்.
6 நாய்கள், 4 ஆட்கள் பாதுகாக்கும் மாம்பழம்:
மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதி தங்கள் வீட்டில் மியாசாகி மாம்பழத்தை விளைவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ஒரு பழத்தோட்டத் தம்பதிகள் இரண்டு மா மரங்களைப் பாதுகாக்க நான்கு காவலர்களையும் ஆறு நாய்களையும் நியமித்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானது.
ஜபல்பூரைச் சேர்ந்த ராணி மற்றும் சங்கல்ப் பரிஹார், சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பழத்தோட்டத்தில் இரண்டு மா மரக்கன்றுகளை நட்டனர், ஆனால், அது கவர்ச்சியான, ரூபி நிற ஜப்பானிய மியாசாகி மாம்பழங்களைத் என்பது தெரியாமலேயே, உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழங்களை வளரக்க ஆரம்பித்தனர்.
இந்த மாம்பழத்தின் விலை உலக சந்தையில் கிலோ 2.7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதால், இதனை திருடர்கள் திருட முயற்சிக்கலாம் என்பதால் தான் இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள்.
உண்மையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சில திருடர்கள் தங்கள் பழத்தோட்டத்தில் பதுங்கியிருந்து இந்த பழங்களை பறிக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர். எனவே, தான் 7 பழங்களுடன் கூடிய இரண்டு மியாசாகி மரங்களை பாதுகாக்க 6 நாய்கள் மற்றும் 4 பாதுகாவலர்களை நியமித்துள்ளனர்.
இந்த மரக்கன்றுகளை வாங்குவதற்காக தம்பதி ஒன்றும் ஜப்பான் வரை பயணிக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, சில மரக்கன்றுகளை வாங்குவதற்காக சென்னைக்குச் செல்லும் வழியில், சங்கல்ப் ஒரு ரயிலில் ஒரு நபரைச் சந்தித்தார், அவர் சில மியாசாகி மா மரக்கன்றுகளைக் கொடுத்துள்ளார்.
"அவர் இந்த மரக்கன்றுகளை என்னிடம் வழங்கினார், மேலும் இந்த தாவரங்களை எங்கள் குழந்தைகளைப் போல பராமரிக்கும்படி கேட்டுக் கொண்டார். நாங்கள் பழத்தோட்டத்தில் எந்த வகையான மாம்பழங்கள் கிடைக்கும் என்று தெரியாமல் தான் பயிரிட்டோம்,” என்கின்றனர் தம்பதியினர்.
இந்த பழங்களுக்கு தனது தாயின் பெயரான ‘தாமினி’ என்பதை சூட்டியுள்ளார். தற்போது இந்த வகை மாம்பழத்தின் உண்மையான பெயர் தெரிந்திருந்தாலும் சங்கல்ப் இதனை தாமினி என்று தான் அழைக்கிறார்.
தொகுப்பு - கனிமொழி