Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கோவையில் இருந்து சர்வதேச அளவில் பேஷன் காலணிகள் பிரிவில் ரூ.1,245 கோடி டர்ன்ஓவர் ஈட்டும் Walkaroo

2013ல் வி.கே.சி. நவுஷத்தால் துவக்கப்பட்ட கோவையைச்சேர்ந்த வாக்கரூ, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காலணிகளை வழங்குகிறது.

கோவையில் இருந்து சர்வதேச அளவில் பேஷன் காலணிகள் பிரிவில் ரூ.1,245 கோடி டர்ன்ஓவர் ஈட்டும் Walkaroo

Thursday July 01, 2021 , 3 min Read

குழந்தையாக இருந்த போது, எதிர்காலத்தில் என்னவாக விருப்பம் எனக் கேட்கப்பட்ட போதெல்லாம், வி.கே.சி. நவுஷத், “வர்த்தகத்தை தவிர வேறு எதுவும்,“ என பதில் அளித்துள்ளார்.


இதற்கு அவரது தந்தை,வி.கே.சி குழுமத்தின் நிறுவனரான வி.கே.சி.முகமது கோயா, எதை செய்தாலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

“நீங்கள் சிறந்த முறையில் செயல்பட்டால், நிறுவனத்தின் இலக்குகளுக்கு உதவுவதோடு, தேசத்தின் நலனுக்கும் உதவுவீர்கள் என தந்தை நம்பினார்,” என்கிறார் நவுஷத்.

இன்று, நவுஷத், தனது குடும்பத் தொழிலை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளதோடு, வாக்கரூ (Walkaroo) எனும் புதிய பிராண்டையும் துவக்கியுள்ளார்.


சிறு வயத்தில் வர்த்தகத்தில் ஆர்வம் இல்லை என்றாலும், பின்னர் வளர்ந்த போது, தொழில் முனைவில் ஆர்வம் கொண்டார். திருச்சூர் பொறியியல் கல்லூரியில் படித்தவர், பின்னர் எம்.டெக் பயின்றதோடு, ரப்பர் ஆய்வு நிலையத்தில் பயிற்சியும் பெற்றார்.


1994ல், குடும்பத் தொழிலில் இணைந்த போது, ஏற்கனவே இருந்த ஹவாய் காலணிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். எனினும், சந்தையில் ஆய்வு செய்த போது, அப்போது பிரபலமாகத் துவங்கிய பிவி பிளாஸ்டிக்கில் கவனம் செலுத்த் தீர்மானித்தார்.

இன்று நவுஷத் விகேசி குழும டிவிஷம்1 தலைவராக இருக்கிறார். விகேசி குழுமம், இந்தியாவின் ஆறு மாநிலங்களில் 20 உற்பத்தி ஆலைகளைக் கொண்டு, 7,000 பேருக்கு மேல் நேரடி வேலைவாய்ப்பு அளிக்கிறது. காலாணிகள்,ஸ்கூல் பைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


2013, நவுஷத்  Walkaroo எனும் புதிய பிராண்டையும் துவக்கினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான, காலணிகள், சான்டல்கள், ஷூக்கள் உள்ளிட்டவற்றை இந்த பிராண்ட் அளிக்கிறது.


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 12 ஆலைகளில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலைகள் தினமும் நான்கு லட்சம் ஷூக்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

சில ஆண்டுகள் விகேசி குழுமத்தின் கீழ் இயங்கிய், வாக்கரூ கடந்த ஆண்டு ரூ.1,245 கோடி விற்றுமுதல் ஈட்டியது. இந்தி நடிகர் அமீர் கான் இதன் விளம்பர தூதராக இருக்கிறார்.

பேஷன், தரம், விலை

வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவராக நவுஷத் இருக்கிறார்.

“இரண்டு விஷயங்கள் முக்கியம். முதலில் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர் தரப்பில் இருந்து ஏதாவது தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். இரண்டாவதாக வாங்கக் கூடிய விலையில் தரமான பொருட்களை அளிக்க வேண்டும்,” என்கிறார் நவுஷத்.

தரம் மற்றும் விலை ஆகிய அம்சங்களுடன் அவர் பேஷனையும் சேர்த்திருக்கிறார். “வாங்கக் கூடிய விலையில், தரமான, பேஷனான பொருட்களே வாடிக்கையாளர்கள் தேவையாக இருக்கிறது,” என்கிறார்.


நிறுவன காலணிகள் சந்தை சார்ந்த விலை உத்தியைக் கொண்டுள்ளன. நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 700 டீலர்களுடன் மற்றும் 1.50 லட்சம் சில்லறை விற்பனையாளர்களுடன் செயல்படுகிறது.

தெற்கிலிருந்து...

தென்னிந்தியாவில் இருந்து துவங்கிய Walkaroo நாட்டின் பிற பகுதிகள் மற்றும் உலக அளவில் விரிவாக்கம் செய்துள்ளது. தென்னிந்தியா தான் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இருந்தாலும், கொரோனாவுக்கு பிறகு நிலைமை மாறியுள்ளது.


கொரோனாவுக்கு முன், நிறுவனத்தின் 70 சதவீத விற்பனை தென்னிந்தியாவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் வந்தது. ஆனால் கொரோனா சூழலில் வேறு பகுதிகளில் இருந்தும் தேவை ஏற்பட்டுள்ளது என்கிறார் நவுஷத்.

“தென்னிந்தியா ஆண்டுக்கு 10 சதவீத வளரும் நிலையில், வட இந்தியா ஆண்டுக்கு 30 சதவீதம் வளர்ச்சி அடைகிறது,” என்கிறார்.

மேலும், சர்வதேசச் சந்தையில் விரிவாக்கம் செய்துள்ள பிராண்ட், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வலுவாக உள்ளது.

தெற்காசிய சந்தையில் விரிவாக்கம் செய்வதற்காக நிறுவனம் வங்கதேசத்தில் உற்பத்தி ஆலை அமைத்துள்ளது.

தற்சார்பு இந்தியா

தற்சார்பு இந்தியா இன்று கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இது தொடர்பான உரையாடல் சில காலமாகவே நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான நிகழ்வை நவுஷத் நினைவு கூறுகிறார். 2010ல் அமெரிக்கர் ஒருவர் உலக காலணிகள் தொடர்பான புள்ளிவிவரங்களை காண்பித்துக்கொண்டிருந்தார்.

“எல்லா பிரிவுகளிலும் சீனா முன்னிலையில் இருந்தது. அடுத்த இடத்தில் எந்த நாடு வரும் எனும் கேள்விக்கு, நான் இந்தியா என பதில் அளித்தேன்,” என்கிறார் நவுஷத்.

ஆனால் அமெரிக்கர் உடன்படவில்லை. சீனாவுடன் போட்டி போடும் அளவுக்கு உற்பத்தி செயல்திறன் மற்றும் வடிவமைப்பு ஆற்றல் இந்தியாவிடம் இல்லை, என்றார்.

இந்த கருத்து நவுஷத்திற்கு ஏமாற்றம் அளித்தது. இது முற்றிலும் தவறானது என்கிறார்,

“இந்திய தொழில்முனைவோர் வர்த்தகத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கொண்டு வர விரும்புகின்றனர். இதற்கு தாமதம் ஆகிறது. ஆனால் சீனா இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறது,” என்கிறார் அவர்.

இந்திய காலணி துறையில் அமைப்பு சாரா நபர்களே அதிகம் இருப்பதால் அவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தயங்குகின்றனர் என்கிறார். இந்தத் துறையில் 15,000க்கும் மேற்பட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ளது.


நிறுவனங்கள் டிஜிட்டலில் வலுப்பெறும் முன், செயல்பாடு அளவில் வலுவாக இருக்க வேண்டும் எனக் கூறும் நவுஷத், தொழில்நுட்பப் பயன்பாட்டைப்பொருத்தவரை வாக்குரூ முன்னணியில் இருப்பதாகக் கூறுகிறார்.


வாக்குரூ சொந்த இணைய தளம் அமைத்திருப்பதோடு, அமேசான், பிளிப்கார்ட் மூலமும் விற்பனை செய்து வருகிறது.

தீர்வுகள்

கொரோனா சூழல் நிறுவனத்திற்கு மிகவும் சவாலாக அமைந்தது. எனினும் நவுஷத் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்.

“பலரும் அரசு மற்றும் வெளிப்புற அம்சங்களைக் குறை சொல்கின்றனர். எனினும் நாங்கள் தொழில்முனைவோர். புகார் செய்வது எங்கள் உரிமை அல்ல. தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்,” என்கிறார்.

வர்த்தகச் சுழற்சியில் நெருக்கடியை எதிர்கொள்ள, செயல்திறன் மேம்பாடு, மாற்றத்திற்கு ஏற்ப செயல்படுவது, சந்தைப் போக்குகளை கற்பது ஆகியவை முக்கியம் என்கிறார்.


தற்போது மக்கள் சாதாரணப் பொருட்களை மட்டுமே வாங்குவதால் நிறுவனம் இந்தப் பிரிவில் கவனம் செலுத்துகிறது, என்கிறார்.


இந்தத் துறையின் எதிர்காலம் குறித்தும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். சீனா, வியட்னாம், இந்தோனேசிய ஆகிய நாடுகளோடு இந்தியா இந்தப் பிரிவில் முன்னிலையில் இருக்கிறது.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்