ஷூக்களை வண்ணமயமாக்கி விற்பனை செய்து மாதம் 10 லட்சம் ஈட்டும் நிறுவனர்கள்!
அன்கீதா தெப், விரேஷ் மதன் இருவரும் உருவாக்கியுள்ள Rivir Shoes இந்த ஆண்டு 1.5 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்ட உள்ளது.
ஒரு வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா என்பதை அவர்கள் வீட்டுச் சுவர் தெள்ளந்தெளிவாக காட்டிவிடும். அத்தனை சுவரோவியங்களை தீட்டித் தள்ளிவிடுவார்கள் குழந்தைகள்.
அவர்களுக்காக வாங்கிக் கொடுத்த டிராயிங் நோட்டுகள் வெள்ளை வெளேறென்று இருக்க வீட்டுச் சுவர்கள் மட்டுமே வண்ணமயமாக காட்சியளிக்கும்.
சுவரில் வண்ணம் தீட்டுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்? ஷூக்களில் வண்ணம் தீட்டி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கொல்கத்தாவைச் சேர்ந்த அன்கீதா தெப் ஷூக்களில் அழகழகாக வண்ணம் தீட்டியுள்ளார். இது நல்ல வரவேற்பைப் பெறவே இதையே தொழில் முயற்சியாகக் கையிலெடுத்து வெற்றிகரமாக செயல்பட்டும் வருகிறார். இவர் தொடங்கியுள்ள Rivir Shoes என்கிற பிராண்ட் இந்த ஆண்டு 1.5 கோடி ரூபாயை எட்ட உள்ளது.
தொடக்கம்
அன்கீதா ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவரது சகோதரியின் ஷூ அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அது வெள்ளை நிறத்தில் மங்கலாக இருந்துள்ளது. உடனே அதில் அன்கீதா வண்ணம் தீட்டியுள்ளார்.
என்ன ஒரு ஆச்சரியம்? அவரது பெற்றோர் ஏன் இப்படி செய்தாய் என்று திட்டவே இல்லை. அதுமட்டுமா? வண்ணம் தீட்டப்பட்ட அந்த ஷூக்களை அன்கீதா சிறப்பு வகுப்பிற்கு அணிந்து சென்றுள்ளார். அதை கவனித்த ஆசிரியர் அவரைப் பாராட்டியுள்ளார். இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? தொடர்ந்து படியுங்கள்.
“வண்ணம் தீட்டப்பட்ட என் ஷூக்களை பார்த்த ஆசிரியர் என்னை ஊக்குவித்தார், மேலும் பல டிசைன்களை உருவாக்கச் சொன்னார். அதுமட்டுமில்லாமல் என்னிடம் 500 ரூபாய் பணம் கொடுத்து ஷூக்கள் வாங்கி அதில் வண்ணம் தீட்டச் சொன்னார்,” என்று உற்சாகத்துடன் குறிப்பிடுகிறார் அன்கீதா.
ஆசிரியர் சொன்னதுபோல் அன்கீதா வண்ணமயமான ஷூக்களை உருவாக்கி பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் காட்சிபடுத்தியுள்ளார். அன்கீதாவின் டிசைனர் ஷூக்கள் பலரைக் கவர்ந்தன.
இதுவே தொழில்முனைவு சிந்தனைக்கான விதையாக அமைந்தது.
வணிக பார்ட்னரை சந்தித்தார்
பள்ளி நாட்களிலேயே தொழில் சிந்தனை பிறந்தபோதும் அன்கீதா படிப்பில் கவனம் செலுத்தினார். எம்பிஏ முடித்த பிறகு மார்க்கெட்டிங் பட்டதாரியான விரேஷ் மதன் என்பவரை சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவரது சிந்தனையும் ஒத்துப்போனது. காலணி துறையில் தொழில் தொடங்க இருவரும் திட்டமிட்டார்கள். அன்கீதாவிற்கு ஷூக்களில் பெயிண்ட் செய்வதில் ஆர்வம் இருந்ததால் அது தொடர்பாகவே செயல்பட தீர்மானித்தனர்.
2015-ம் ஆண்டு அன்கீதாவும் விரேஷும் இணைந்து தங்களது சேமிப்புத் தொகை 15 லட்ச ரூபாய் முதலீடு செய்து குருகிராமில் காலணி ஃபேஷன் தொழில்நுட்ப பிராண்ட் Rivir Shoes தொடங்கினார்கள். அன்கீதா டிசைன் பகுதியில் கவனம் செலுத்தினார். விரேஷ் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டார்.
Rivir பிராண்ட்
முதலீடு செய்த தொகையைக் கொண்டு ஷூக்களை அதிகம் ஸ்டாக் செய்தார்கள். ஆனால் விற்பனையாகவில்லை. ஷூக்கள் விற்பனையாகாமல் தேங்கிக்கிடந்தால் கிழிந்து வீணாகிவிடும். எனவே இதற்குத் தீர்வுகாண விரும்பினார்.
சீனா, அமெரிக்கா சந்தையைத் தொடர்ந்து இந்தியாவில் காலணிகள் அதிகளவில் வாங்கப்படுகின்றன. மக்களின் வருவாயும் செலவிடும் திறனும் அதிகரித்ததால் தேவையும் அதிகம்.
வழக்கமான ஷூக்கள் போல் இல்லாமல் டிசைன் செய்யப்பட்ட தனது புதுமையான தயாரிப்பை நுகர்வோரிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்று யோசித்தனர். விற்பனையும் அதிகரிக்கவேண்டும். அதேசமயம் தயாரிப்பின் இருப்பும் அதிகளவில் தேங்கிவிடக்கூடாது. ஆர்டர் தேவைக்கேற்ப ஷூக்களை தயாரிக்கலாம் என்கிற தீர்வு எட்டப்பட்டது.
இந்த வணிக மாதிரியின்படி தேவையான பொருட்கள் அனைத்தும் தயாராக இருக்கும். ஆர்டர் பெறப்பட்ட பின்னரே தயாரிப்புப் பணிகள் தொடங்கும்.
”வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். ஏற்கெனவே இருக்கும் டிசைனைத் தேர்வு செய்யலாம். அல்லது வாடிக்கையாளரின் தனித்தேவைக்கேற்ப ஆர்டர் செய்யலாம். பின்னர் எங்களுடன் ஒப்பந்ததாரர்களாக இணைந்துள்ள தயாரிப்பாளருடன் இணைந்து தயாரிப்பு மேற்கொள்ளப்படுகிறது,” என்கிறார் அன்கீதா.
இந்த ஸ்டார்ட் அப்பிற்கு ஆக்ராவில் இரண்டு வொர்க்ஷாப்களும் குருகிராமில் ஒரு வொர்க்ஷாப்பும் இயங்கி வருகிறது. முழு நேரமாக ஏழு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
சராசரியாக நாள் ஒன்றிற்கு 20 முதல் 30 ஜோடி ஷூக்கள் விற்பனை செய்யப்படுவதாக இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது. மாதத்திற்கு 9 முதல் 10 லட்ச ரூபாய் மதிப்பிற்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு விற்பனை அளவு 1.5 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பு மற்றும் விலை
Espadrilles, ஹை டாப் மற்றும் லோ டாப் கான்வாஸ் ஸ்னீக்கர்ஸ் வகைகளை Rivir Shoes விற்பனை செய்கிறது.
Espadrilles: Espadrilles பல வகைகளில் கிடைக்கிறது. இவை அனைத்துமே அன்கீதாவால் வடிவமைக்கப்பட்டவை. அடிக்கடி புதிய வடிவமைப்புகள் அறிமுகமாகின்றன. ஆனால் இவை தனித்தேவைக்கேற்ப தயாரிக்கப்படுவதில்லை. இதன் விலை 999 ரூபாய்.
“Espadrilles எளிதாக அணியக்கூடியது. 3 முதல் 11 வரையிலான அளவுகளில் கிடைக்கின்றன. 12 மற்றும் 13 அளவுகளும் விரைவில் அறிமுகமாக உள்ளன,” என்கிறார் அன்கீதா.
ஸ்னீக்கர்ஸ்: Rivir பிராண்டின் ஸ்னீக்கர்ஸ் வகைகள் 1,500 ரூபாயில் விற்பனையாகின்றன. தனித்தேவைக்கேற்ப தயாரிக்கப்படுபவை 1,999 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
“ரெடிமேட் ஸ்னீக்கர்ஸ் பொறுத்தவரை வலைதளங்களில் 150 டிசைன்கள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட டிசைன் தேவைப்பட்டால் அவர்களது தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தயாரித்து வழங்குகிறோம்,” என்கிறார்.
ரெடிமேட் ஷூக்கள் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் பிரீமியம் விலையாக 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 1,800 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
“ஆர்டர் அளவு அதிகரித்தபோது ரெடிமேட் ஸ்னீக்கர்ஸ் 1,500 ரூபாய் என்கிற விலையும் Espadrilles 999 ரூபாய் என்கிற விலையும் நிர்ணயிக்கப்பட்டது,” என்கிறார்.
Rivir தயாரிப்புகளில் 35 முதல் 40 சதவீதம் லாபம் இருப்பதாக அன்கீதா தெரிவிக்கிறார்.
வாடிக்கையாளர்கள் தொகுப்பு
தனித்தேவைக்கேற்ற ஷூக்களுக்கு ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் 25 முதல் 30 சதவீதம் பங்களிக்கிறார்கள். 50 சதவீத வாடிக்கையாளர்கள் மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்கிறார் அன்கீதா. இவர்கள் புதிய ஃபேஷன் வகைகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த பிராண்ட் 18 முதல் 27 வயதுடையவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இருப்பினும் 18 முதல் 21 வயதுடையவர்களிடம் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் இருக்காது என்பதால் அதற்கும் மேற்பட்டவர்களையே இந்த பிராண்ட் இலக்காகக் கொண்டுள்ளது எனலாம்.
25 வயதிற்கு மேற்பட்டவர்கள் இளமையான தோற்றத்துடன் இருக்க விரும்புவார்கள் என்றும் செலவிடும் திறனும் அதிகமிருக்கும் என்றும் தெரிவிக்கிறார் அன்கீதா.
மழைக்காலங்களில் தேவை குறைவாக இருக்கும் என்கிறார். தயாரிப்புகளை அதிகளவில் சேமித்து வைக்காததால் அவற்றை கிளியர் செய்ய இந்த பிராண்ட் தள்ளுபடிகள் ஏதும் வழங்குவதில்லை. இருப்பினும் புதிய வாடிக்கையாளர்களைக் கவர தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 10 முதல் 15 சதவீத தள்ளுபடி அறிவிக்கிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைச் சென்றடைய விரும்புகின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா