ஷூக்கள் சுத்தம் செய்யும் ஸ்ப்ரே உருவாக்கி ரூ.1.7 லட்சத்தை சம்பாதித்து அசத்திய சிறுமிகள்!
தொழில் முனைவோர்களுக்கு முன்னோடியான சிறுமிகள்!
மும்பையில் உள்ள திருப்பாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பரி நஹேதா மற்றும் சன்யா ஷா. இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஸ்னீக்கஸி (Sneakeasy)யைத் தொடங்கினர்.
"பரி மற்றும் நான் இருவரும் விளையாட்டு மற்றும் நடனம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் ஸ்னீக்கர்களை அதிகம் பயன்படுத்துகிறோம். இருப்பினும், மும்பை போன்ற மாசுபட்ட நகரத்தில் வசிக்கும் போது காலணிகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்று சன்யா ஹெர்ஸ்டோரியிடம் கூறுகிறார்.
இளம் தொழில்முனைவோர் அகாடமி (YEA!) அமர்வுகளில், இருவரும் ஸ்னீக்கர்களுக்கான ஸ்ப்ரே உருவாக்குவது குறித்த ஐடியாவை வெளிப்படுத்தினர். இந்த அகாடமியில் உள்ள வழிகாட்டிகளின் உதவியுடன், Sneakeasy எனப்படும் ஷூ ஸ்ப்ரேக்கான சூத்திரத்தைக் கொண்டு வர அவர்கள் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இது காலணிகளை மிகச் சிறந்ததாகவும் வேகமாகவும் சுத்தம் செய்யும் ஸ்ப்ரே என்று அவர்கள் உறுதியளிக்கின்றனர்.
”ஸ்னீக் ஈசி முழுக்க முழுக்க இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்ப்ரே. முக்கியமாக எலுமிச்சை மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்ற கறைகளை அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது, இது கறைகளை மெதுவாக அகற்ற உதவுகிறது, அதே நேரத்தில் ஷூ நீண்ட காலத்திற்கு சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது," என்கின்றனர்.
தற்போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் பரி மற்றும் சன்யா தங்கள் வீடுகளில் இதை உருவாக்கி வருகின்றனர். இருவரும் உள்ளூர் கடைகளில் இருந்து மூலப்பொருட்களை வாங்குகிறார்கள்.
"நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலை அடைந்தவுடன், பாட்டில்களை மொத்தமாகப் பெற ஒரு ஆய்வகத்துடன் கூட்டாளராக திட்டமிட்டுள்ளோம். மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மூலப்பொருட்களை வாங்குவோம் என்று நம்புகிறோம், இது செலவை 30 சதவீதம் குறைக்கும்,” என்கிறார் சன்யா.
ஸ்னீக்ஈஸியைப் பயன்படுத்துவது எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் சுத்தம் செய்ய விரும்பும் ஷூவின் பகுதிகளில் இதை தெளிக்கவும், சுத்தமான துடைக்கும் துணி கொண்டு தேய்க்கவும், முழு ஷூவும் சுத்தமாக இருக்கும் வரை இந்த செயல்முறையைத் தொடரவும், என்பது தான்.
ஸ்னீக் ஈஸி மற்றும் பிற கிளீனர்களுக்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால், இது ரசாயனமற்றது மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. லோகோவை உருவாக்குவதற்கும், வண்ணங்களைத் தேர்வு செய்வதற்கும், பேக்கேஜிங் செய்வதற்கும் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Sneakeasy ஒரு பாட்டில் விலை ரூ.399 ஆகும். இந்த இரண்டு இளம் தொழில்முனைவோர் இதுவரை 500 பாட்டில்களை உருவாக்கி, கடந்த ஆண்டு மட்டும் வர்த்தகக் காட்சிகள் மற்றும் பிற நிகழ்வுகள் மூலம் 410 பாட்டில்களை விற்றுள்ளனர். குறைந்த செலவில் இதுவரை விற்பனையில் ரூ.1.7 லட்சம் சம்பாதித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
நாங்கள் இந்த ஸ்ப்பேவை சமூக ஊடகம், நிகழ்வுகள் மற்றும் பத்திரிக்கைகள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதுவரை வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்துள்ள கருத்துக்களால் எங்கள் தயாரிப்பு மீது நம்பிக்கை வந்துள்ளது. சரியான குழு, மார்க்கெட்டிங் மற்றும் திட்டமிடல் மூலம் இதை பெரிய அளவில் விரிவிப்படுத்த உள்ளோம்,” என்கின்றனர் இந்த குட்டி தொழில் வல்லுனர்கள்.
ஆங்கிலத்தில்: ரேகா | தமிழில்: மலையரசு